

பெரியார் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் புலவர் மா.நன்னனின் பெரியார் நூல் வரிசை முக்கியமானது. இதுவரை 12 நூல்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது ‘சுயமரியாதை இயக்கம்’ என்கிற பெயரில் நூல் வெளியாகியுள்ளது. சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு தொடங்கி, அதையொட்டி நிகழ்ந்த நிகழ்வுகள், கடிதப் போக்குவரத்துகள், தலையங்கங்கள், பொதுக்கூட்ட உரைகள் உள்படப் பல்வேறு வரலாற்று அம்சங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. 146 தலைப்புகளில் சிறியதும், பெரியதுமாக இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வாசிக்கச் சுவாரசியத்தை அளிக்கின்றன - டி.கார்த்தி
இவர்தாம் பெரியார் (வரலாறு)
13. சுயமரியாதை இயக்கம்
புலவர் மா.நன்னன்
விலை: ரூ.325
வெளியீடு: ஏகம் பதிப்பகம், சென்னை
தொடர்புக்கு: 9444909194
சொற்கள் உருண்டோடும் காலம்: நாடகக் கலைஞர், குறும்பட இயக்குநர் என்றறியப்பட்ட கருப்பு அன்பரசன், இந்நூலின் வழி சிறந்த புத்தகக் காதலராகவும் நம்மை ஈர்த்துள்ளார். கட்டுரை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என அனைத்து வகை நூல்களையும் வாசித்ததோடு, அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தையும் எவ்வித மிகையுமின்றி அப்படியே முகநூல் பக்கத்தில் பதிவுசெய்த 18 நூல் அறிமுகங்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள நூலிது.
ஒரு படைப்பு வாசகனுக்குள் எவ்வகையான தாக்கத்தை உண்டாக்கியதோ, அதனை அந்தப் படைப்பின் விமர்சனத்தைப் படிக்கும் வாசகனும் உள்வாங்கிக்கொள்ளும் நேர்த்தியான மொழிநடையில் எழுதியுள்ள விதம் ரசிக்கும்படி உள்ளது.தக் ஷிலா ஸ்வர்ணமாலியின் ‘பீடி’ நாவல், நாகாலாந்து மாநில பெண் படைப்பாளிகளின் தொகுப்பான ‘கதவுகள் திறக்கப்படும் போதினிலே’, மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற நேமிசந்த்ராவின் ‘யாத்வஷேம்’ போன்ற நூல்களைப் பற்றிய வரிகள், நம்மையும் அந்த நூலினைப் படித்திடத் தூண்டும் வகையில் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளன - மு.முருகேஷ்
எழுத்துக்களைப் பற்றி சில வார்த்தைகள்
கருப்பு அன்பரசன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 044-24332424
மணியாட்டிக்காரர்கள் இனவரைவியல்: மணியை ஆட்டிக்கொண்டு, பாடல்களைப் பாடிக்கொண்டு, வீடுவீடாகச் சென்று தானியங்களைக் கேட்கும் ‘மணியாட்டிக்காரர்’களைப் பார்த்திருப்போம். தானியத்தைக் கொடுக்காவிட்டால் சாபம் இட்டுவிடுவார்கள் என்கிற தப்பான அபிப்ராயம் முன்பு இருந்தது.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மணிச் சத்தத்தைக் கேட்டவுடன் இவர்களுக்குத் தானியத்தைத் தானம் கொடுப்பார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், ஏன் தெலுங்கு மொழி பேசுகிறார்கள், ஏன் இந்தத் தொழிலைச் செய்தார்கள், இன்று அந்த மணியாட்டிக்காரர்கள் என்ன ஆனார்கள் என்பது உள்ளிட்டவற்றைச் சுவாரசியமாகச் சொல்கிறது இந்த நூல் - எஸ்.சுஜாதா
மணியாட்டிக்காரர் வாழ்வியல் இனவரைவியல் ஆய்வு
மா.கருணாகரன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 99404 46650
அனைவருக்குமான அறிவியல்: இந்த உலகில் உயிர்கள் எப்போது தோன்றின, ஏன் தோன்றின, எப்படித் தோன்றின என்பது போன்ற கேள்விகளுக்கு அறிவியலின் துணையோடு பதில் அளிக்கிறது இந்நூல். 380 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த பூமிப் பந்தில் உயிர்கள் தோன்றினாலும் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூச்சியினங்கள் தோன்றின. அவற்றோடு ஒப்பிடுகையில் சுமார் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் பரிணாம வளர்ச்சி பெற்று மனித இனம் தோன்றியது.
நம் கண்களுக்குப் புலப்படாத அறிவுக்கு எட்டாதவற்றைக் கற்பனையோடும் கடவுளோடும் முடிச்சுப்போடுவது பலரது வழக்கம். ஆனால், அறிவியல்ரீதியாக அணுகிப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலான கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதைத்தான் இந்நூல் வாயிலாக விளக்கியிருக்கிறார் நன்மாறன் திருநாவுக்கரசு. உயிர்களின் தோற்றத்துக்கு அடிப்படையான தனிமங்கள், சேர்மங்கள், மூலக்கூறுகளில் தொடங்கிப் பரிணாம வளர்ச்சியின் வழி பயணம் செய்து, நோயில்லா மனித சமூகத்தை உருவாக்க உதவும் வகையில் மரபணு இழையை வெட்டும் கிரிஸ்பர் (CRISPR) தொழில்நுட்பம் வரை விரிவாக விளக்கியிருக்கிறார் - பிருந்தா சீனிவாசன்
உயிர் ஓர் அறிவியல் வரலாறு
நன்மாறன் திருநாவுக்கரசு
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.225
தொடர்புக்கு: 044-42009603
யாருக்கானது காடு? - ‘காடு என்பது விலங்குகள் மட்டும் வாழ வேண்டிய இடம்’ என்கிற குரலும் ‘பழங்குடிகளும் வாழும் இடமாகத்தான் காடு காலங்காலமாக இருந்திருக்கிறது’ என்கிற குரலும் அடிக்கடி எழுவது, புலிகள் காப்பகத் திட்டத்தின் தோற்றத்துக்குப் பிறகு தவிர்க்க முடியாததாகிவிட்டது. ‘ஆனைமலை’ புதினம், இந்த இரு குரல்களுக்கும் பின்புலத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையைக் கூறுகிறது.
காட்டின் இயல்பு, பழங்குடிகளின் உத்தரவாதமற்ற நிலை, வனத்துறை உள்ளிட்ட அரசு நிர்வாக அமைப்புகள் செயல்படும் விதம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறை போன்றவை யதார்த்தம் மீறாமல் பதிவுசெய்யப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் காமராஜரிலிருந்து பழங்குடிகளின் உரிமைகளுக்காகப் போராடும் இன்றைய தலைவர்கள் வரைக்கும் கதைமாந்தர்களாக இடம்பெறுவது வாசகர்களுக்குக் கதையோடு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது - ஆனந்தன் செல்லையா
ஆனைமலை
பிரசாந்த் வே
எதிர் வெளியீடு
விலை: ரூ.320
தொடர்புக்கு: 99425 11302