

சென்னை ஐ.ஐ.டி. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் கற்பிக்கும் மஞ்சுளா ராஜன் எழுதியுள்ள ஆங்கிலக் கவிதை நூல் இது. சிறு வயதிலிருந்தே எழுத்தில் ஆர்வம் கொண்ட அவருடைய ஆங்கிலக் கவிதைகள் தொகுப்பாக வெளியாகியிருக்கின்றன. எ
ளிமையான ஆங்கில மொழிநடையில் மனதுக்கு இதம் தருவதாகவும் உணர்வுகளின் வெளிப்பாடாகவும் இந்தக் கவிதைகள் அமைந்துள்ளன. வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட உணர்வுகளை நம்பகமான வகையில் பிரதிபலிக்கும் இக்கவிதைகள், சாதாரண விஷயங்கள் முதல் சிக்கலான சிந்தனைகள் வரை வெளிப்படுத்துகின்றன. வாசித்து முடிக்கும் தறுவாயில் புதிய வெளிச்சத்தைத் தருபவையாக அமைந்துள்ளன. - அன்பு
Verses from Life
Dr. Manjula Rajan
Bookleaf Publishing
ரூ.250
நம் வெளியீடு | சென்னையின் ஆவணம்: ஏறக்குறைய நானூறு ஆண்டு கால சென்னையின் நதிமூலத்தை நம் கண்முன் நிறுத்துகிறது மா.சு.சம்பந்தன் எழுதியிருக்கும் ‘சென்னை மாநகர்’ என்னும் இந்நூல். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம் எல்லோரையுமே தகவல் பணக்காரர்களாக்கியிருக்கிறது.
ஆனால், அதுபோன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் இந்நூலினை எழுதியிருக்கும் மா.சு.சம்பந்தன் எத்தனை புத்தகங்களைப் படித்திருப்பார், எவ்வளவு குறிப்புகளை எடுத்திருப்பார், எத்தனை இடர்களை எதிர்கொண்டிருப்பார் என்பதை இந்நூலில் இடம்பெற்றிருக்கும் மலைப்பான தகவல்கள், நம்மை யோசிக்க வைக்கின்றன.
தோற்றுவாய், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலம், சுற்றுப்புறத்து ஊர்கள், 15, 16ஆம் நூற்றாண்டின் சூழ்நிலை, ஆங்கிலேயர் வருகை, ஆட்சிக் காலம், நகர வளர்ச்சி, சென்னையின் சிறப்பு ஆகிய ஒன்பது தலைப்புகளில், முறையே பண்டைய சென்னையின் தொன்மையான வரலாறு துலக்கமான ஆவணமாக இந்நூலில் வெளிப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகர்
மா.சு.சம்பந்தன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 7401296562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
‘மாத்தி யோசி’க்கும் நூல்: அன்றாட வாழ்வில் நாம் கடந்துபோகும் சின்ன சின்ன விஷயங்களை வித்தியாசமான அணுகுமுறையோடு ‘இப்படியும் பார்க்கலாம்’ என்னும் தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் ஷங்கர்பாபு கட்டுரைகளாக எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராக அது அமைந்தது. நூல் வடிவிலும் இந்தப் புத்தகத்துக்கு வாசகர்களின் வரவேற்பு நிச்சயம் இருக்கும்.
‘கற்றது பைட் அளவு; கல்லாதது ‘ஜிபி’ அளவு’ என்பது போன்ற சொல்லாடல்களோடு அமைந்த கட்டுரையின் உரைநடை இந்தக் கால இளைஞர்களையும் கவரும். ஆங்கிலத்தில் ‘லேட்டரல் திங்க்கிங்’ (Lateral Thinking) என்று அழைக்கப்படும் மாற்றுச் சிந்தனைதான் எல்லாக் கட்டுரைகளிலும் மைய நீரோட்டமாக ஓடுகிறது. ஒவ்வொரு கட்டுரையையும் படித்து முடிக்கும்போதும், ‘சரிதான்... இந்த விஷயத்தை நாம கவனிக்கவே இல்லையே’ என்னும் உணர்வு ஏற்படும்.
இப்படியும் பார்க்கலாம்
ஷங்கர்பாபு
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 7401296562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
திண்ணை | யாழன் ஆதி கவிதைகள் ஆங்கிலத்தில்! - யாழன் ஆதி தமிழின் காத்திரமிக்க கவிஞர்களில் ஒருவர். அவரது கவிதைகள் புக்ரிவர்ஸ் பதிப்பகத்தின் சார்பாக ‘world of rats and other poems’ என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆங்கிலத் துறைப் பேராசிரியர் டி மார்க்ஸ் இதை மொழிபெயர்த்துள்ளார்.
‘எரியும் பனிக்காடு’ மக்கள் பதிப்பில்... பி.எச்.டேனியலின் கவனம்பெற்ற நாவல் ‘Red Tea’. 1969இல் வெளிவந்த இந்த நாவலை ‘எரியும் பனிக்காடு’ என்கிற பெயரில் இரா.முருகவேள் தமிழில் மொழிபெயர்த்தார். இதன் மக்கள் பதிப்பை சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது. விலை: ரூ.125 (408 பக்கங்கள்). தொடர்புக்கு: 9790133141
மணல்வீடு விருதுகள்: களரி அறக்கட்டளை, மணல்வீடு இலக்கிய வட்டம் வழங்கும் கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கு.அழகிரிசாமி நினைவுச் சிறுகதை விருது ஆதவன் தீட்சண்யாவுக்கும் எழுத்தாளர் ப.சிங்காரம் நினைவு நாவல் விருது சு.தமிழ்ச்செல்விக்கும் கவிஞர் சி.மணி நினைவுக் கவிதை விருது கரிகாலனுக்கும் படைப்புச் செயற்பாடுகளுக்கான ராஜம் கிருஷ்ணன் நினைவு விருது கமலாலயனுக்கும் நிகழ்கலைச் செயல்பாடுகளுக்கான (தெருக்கூத்து) அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது தெருக்கூத்து கலைஞர் முத்துவுக்கும் நிகழ்கலைச் செயல்பாடுகளுக்கான (தெருக்கூத்து) அமரர் கீரைப்பாப்பம்பாடி குப்பன் வாத்தியார் நினைவு விருது தெருக்கூத்து கலைஞர் மெய்வேலுக்கும் நிகழ்கலைச் செயல்பாடுகளுக்கான (தெருக்கூத்து) அமரர் லட்சுமி அம்மாள் நினைவு விருது கூத்துக்கலைஞர் வருதராஜுக்கும் நிகழ்கலைச் செயல்பாடுகளுக்கான (பொம்மலாட்டம்) பொம்மலாட்ட வேந்தர் பெரிய சீரகாபாடி செம்மலை நினைவு விருது. பொம்மலாட்டக் கலைஞர் முத்துலட்சுமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் விருதும் 25,000 ரூபாய் ரொக்கத்தையும் நினைவுப் பரிசையும் உள்ளடக்கியது.