

க
டந்த தசாப்தத்தில் எண்ணற்ற படைப்பாளிகள் புதிதாகத் தமிழ் இலக்கிய உலகுக்கு வருகை புரிந்திருக் கிறார்கள். அதேவேளையில், கடந்த தலைமுறையிலிருந்த தீவிரமான உரையாடல்கள் தற்போது அருகிவிட்டன. மீண்டும் ஓர் புத்துயிர்ப்பை நல்கும் விதமாக ஒரே சமயத்தில் 10 மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறது உன்னதம் பதிப்பகம்.
சமயவாதிகளின் அற்பத் தனங்களைத் தோலுரிக்கும் வகையில் பல்லவ மன்னன் மகேந்திர விக்ரம வர்மன் எழுதிய ‘மத்தவிலாசம் மற்றும் பகவதஜ்ஜுகம்’ ஆகியவை ஒரு நூலாகவும், காளிதாசரின் ‘மேகசந்தேசம்’ நாடகத்தின் கவிதை, உரைநடை மொழிபெயர்ப்புகள் மற்றொரு நூலாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
தவிர, வே.ராகவன் மொழிபெயர்ப்பில் வெளியான சோமதேவரின் ‘கதா சரித்சாகரம்’ நூல் மீண்டும் மறு பதிப்பு கண்டிருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளரான கார்லோஸ் ஃபுயந்தஸின் ‘ஔரா’ குறுநாவலும் வெளியாகியிருக்கிறது. இந்த நான்கு நூல்கள் தவிர்த்து, பிற அனைத்தும் உரையாடல்கள்/கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது!
1960-களில் உருவான லத்தீன் அமெரிக்க இலக்கிய எழுச்சி, உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொர்த்தஸார், ஃபுயந்தஸ், மார்க்குவெஸ் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் வழமையான மரபுகளை உடைத்து உருவாக்கிய இந்தப் புதிய இயக்கம் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் அடையாளமாக மாறியது. தமிழ் இலக்கியச் சூழலும் லத்தீன் அமெரிக்கப் படைப்புகளால் பெருமளவில் தாக்கம் கண்டிருக்கின்றன. இந்த நிமிடம்கூட யாரோ ஒருவரால் லத்தீன் அமெரிக்க இலக்கியம் மொழிபெயர்ப்பாகிக்கொண்டிருக்கக் கூடும்.
உலகப் புகழ்பெற்ற 12 லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் நேர்காணல் தொகுப்பாக ‘எழுத்தாளர்களின் சமையலறை’ வந்திருக்கிறது. இலக்கியம் மட்டுமல்லா மல் கூர்மையான அரசியல் பார்வையையும் படைப்பாளி கள் முன்வைக்கிறார்கள். ஒவ்வொரு படைப்பாளிகளும் தங்களுக்குள் முரண்படும்படியான உரையாடல்களைத் தொடர்ந்து வாசிப்பதென்பது பல்கோண அணுகு முறைக்கு வழிவகுக்கின்றன. ‘தொன்மத்தின் ஆற்றல்’ நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கருத்தியல் என ஜோசப் காம்ப்பெல்லின் ஆழமான நீண்ட உரையாடலைக் கொண்டிருக்கிறது. தொன்மங்களை, நம்பிக்கைகளை அறிவியலுக்கு எதிராகக் காட்டும் திசைக்கு எதிராக காம்ப்பெல் பயணிக்கிறார். தத்துவம், தொன்மம், பழங்குடி மரபு எனச் செறிவும் அடர்த்தியும் கொண்ட உரையாடல்கள் இவை.
ஒரு வாசகனின் அனுபவம், சூழல், இயல்பு இவற்றைப் பொறுத்து ஒரு பிரதி அந்த வாசகனோடு வெவ்வேறு விதமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. வாசகனுக்கும் பிரதிக்குமான பந்தத்தை அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டுவதாக ஈஸ்த்தோபின் ‘சொல்லியல் கோட்பாடு’ இருக்கிறது. ‘கவிதை என்றால் என்ன?’, ‘கவிதையும் மரணமும்’, ‘கவிதையின் மெய்மை’ ஆகிய நூல்கள் அடிப்படையில் ஆரம்பித்து பின்நவீனத்துவக் கோட்பாடுகள் வரை பயணிக்கிறது. வெவ்வேறு கருத்தியல்களைக் கொண்ட வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் இங்கே ஒருசேரத் தொகுக்கப்பட்டிருப்பது இந்த மொழிபெயர்ப்பு தொகுப்புகளின் சிறப்பம்சம். கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களுமே முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தப் புத்தகங்கள் மூலமாக நம்மோடு உரையாடும் பலரும் இப்போது உயிரோடு இல்லை. பெரும்பாலான உரையாடல்கள் அவர்களின் கடைசி காலத்தில் நிகழ்த்தப்பட்டதாக இருக்கிறது. அனுபவத்தில் பழுத்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் செறிவுமிக்கதாக இருக்கின்றன.
இவை ஒரே மூச்சில் வாசிப்பதற்கான புத்தகங்கள் அல்ல; ஒரு அகராதியைப் போல நம் வாசிப்பின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடன் இருக்க வேண்டியவை!
உன்னதம்
64 குஜ்ஜி தெரு, அண்ணாநகர் கிழக்கு
சென்னை - 600 102
மொத்த விலை: ரூ. 1,470
தொடர்புக்கு: 044-26432601, 99407 86278