

மதுரை: “தனது கதைகளுக்கான அமானுஷ்யங்களுக்கான தேடலில், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவை சார்ந்த நூல்களை, பெரும்பாலும் தேடுவதோ, படிப்பதோ இல்லை. இந்து மதத்தின் ஆன்மிக நெறிகள் குறித்து எழுதியும், பேசியும் வந்தவர்” என்று எழுத்தாளர் கு.கணேசன் நினைவு கூர்ந்துள்ளார்.
பிரபல எழுத்தாளரும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தரராஜன் (66) மதுரையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திரா செளந்தர்ராஜன் மறைவை ஒட்டி மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் கு.கணேசன் பகிர்ந்தவை: “பா(ர்த்தசாரதி) சௌந்தரராஜன், இந்திரா சௌந்தர்ராஜன் ஆக உருவாகக் காரணமானவர், எழுத்தாளர் மகரிஷி ஆவார்.
சௌந்தர்ராஜனின் தாயார் பெயர்தான் இந்திரா. பெண்கள் பெயரில், ஆண் எழுத்தாளர்கள் எழுதுவது, ஃபேஷனாக இருந்த அந்தக் காலகட்டத்தில், மகரிஷி, சௌந்தர்ராஜனை, தாயாா் பெயருடன், அவர் பெயரையும் சேர்த்து புனைப்பெயர் வைத்துக் கொள்ளுமாறு கூற, இந்திரா சௌந்தர்ராஜன் உருவானார்.
இந்திரா சௌந்தர்ராஜன் எழுத்தாளராக உருவாக வித்திட்ட முதல் சிறுகதை பா.செயப்பிரகாசம் எழுதி, சிகரம் சிற்றிதழில் வெளியான, "இருளுக்கு இழுப்பவர்கள்" என்ற சிறுகதையாகும். அவர் எழுதிய முதல் குறுநாவலே பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 1978-ஆம் ஆண்டில், கலைமகள் இதழ் நடத்திய குறுநாவல் போட்டிக்காக, இவர் எழுதியனுப்பிய,"ஒன்றின் நிறம் இரண்டு" என்ற குறுநாவல் முதல் பரிசைப் பெற்றது.
இந்திரா சௌந்தர்ராஜனை, வாசகர்களிடையே மிகவும் பிரபலமாக்கிய முதல் தொடர்கதை, ஆனந்த விகடனில் வெளியான, "கோட்டைபுரத்து வீடு" என்பதுதான். இதையடுத்து, அதே இதழில் அவரெழுதிய "ஐந்துவழி மூன்றுவாசல்" தொடர்கதையும், இவருக்குப் புகழ் தேடித் தந்தது. ஹிஸ்டரியும் மிஸ்டரியும் கலந்த, அமானுஷ்யத் த்ரில்லர்களான இவை வாசகர்களை மிகவும் கவர்ந்தன.
இதற்கு முன்பே, இவர் சில அமானுஷ்ய நாவல்களை எழுதி, ஓரளவு பிரபலமாகியிருந்தாலும், மிகவும் பிரபலமானவராக்கியவையும், இவருடைய எழுத்துலக வளர்ச்சியைத் துரிதப்படுத்தியவையும் இவையே.
தனது கதைகளுக்கான அமானுஷ்யங்களுக்கான தேடலில், இந்திரா சௌந்தர்ராஜன் அவை சார்ந்த நூல்களை, பெரும்பாலும் தேடுவதோ, படிப்பதோ இல்லை. பெரும்பாலும் பார்த்த கேட்ட சம்பவங்களையும், அமானுஷ்யம் குறித்த பிறருடனான விவாதிப்புகளையுமே இதற்குப் பயன்படுத்துகிறார். இந்திரா சௌந்தர்ராஜனின் வாழ்விலும், சில அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றாலும், உண்மையான சித்தர்களின் தரிசனம், இந்திரா சௌந்தர்ராஜனுக்கு கிடைத்ததில்லை.
தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதன்முதலில் மிகவும் பிரபலமான அமானுஷ்ய மெகாதொடரான "மர்ம தேசம்" தொடர், இவருடைய கைவண்ணத்தில் உருவானதே. அன்று தொடங்கி, தற்போதுவரை, பல மெகா தொடர்களில் எழுத்தாளராகப் பணியாற்றியுள்ள இந்திரா சௌந்தரராஜன் ஏறத்தாழ, 4000 எபிசோடுகள் வரை எழுதியுள்ளார்.
இவர் திரைக்கதை - வசனம் எழுதிய திரைப்படமான "சிருங்காரம்" (2007), மூன்று தேசிய விருதுகளையும், இரண்டு, தமிழக அரசு விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தனது பயண அனுபவங்களை, "யாத்திரை ஞானம்" , யாத்திரை அனுபவங்கள்" என்ற பெயர்களில், பயணநூல்களாக வெளியிட்டுள்ளார்.
ஜெயமோகன், ராஜேஷ்குமார் போல இந்திரா சௌந்தர்ராஜனும் குறுகிய காலத்தில், அசுர வேகத்தில், அதிகநூல்களை எழுதிய, எழுதுகிற எழுத்தாளராகத் திகழ்ந்தார். இந்துமத ஆன்மிக நெறி குறித்து, நிறைய ஆய்வுகளைச் செய்து எழுதியும், பேசியும் வந்தார். அவரை மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்று எழுத்தாளர் கு.கணேசன் கூறியுள்ளார்.