நூல் நயம்: சிறைச்சாலை சொல்லும் கதை

நூல் நயம்: சிறைச்சாலை சொல்லும் கதை
Updated on
4 min read

பஞ்சாப் மாநில அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றிய மித்தர் சைன் மீத், காவல் - நீதி - சிறைத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து 2006இல் பஞ்சாபியில் எழுதிய புதினம் ‘சுதார் கர்’ (சீர்திருத்த நிலையம்). இந்நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் உஷா ராமன் மொழிபெயர்த்துள்ளார்.

பணத்துக்காகக் குழந்தையைக் கடத்திக் கொன்றதாக பாலா, மீதா என இருவரும் மனைவியின் தற்கொலைக்குக் காரணமானதாக ஹக்கம் சிங் என்பவரும் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை, சிறையில் அவர்கள் நடத்தப்படும் விதம், ஊழியர்களின் அதிகார மனநிலை, சிறைக் கதவுகளுக்குப் பின்னால் உள்ள விசித்திரமான நடைமுறைகள், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் சூழலிலும் இவர்கள் வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுவது போன்றவை இந்தப் புதினத்தில் பேசப்பட்டுள்ளன. - ஆனந்தன் செல்லையா

சீர்திருத்த நிலையம்
மித்தர் சைன் மீத்
தமிழில்: உஷா ராமன்
சாகித்திய அகாடமி
விலை: ரூ.775
தொடர்புக்கு: 044-2431 1741

எளிய மனிதர்களின் கதைகள்: கதைகள் எப்போதும் யாருக்கானதாகவோ இருப்பதில்லை. அவை நமக்கானவைதான். நம் வாழ்வில் இருந்து நீண்டு சுருண்டு கிடக்கிற அல்லது மீண்டு பாய்ந்து செல்கிற சம்பவங்களாகவோ, நிகழ்வுகளாகவோ இருக்கும் அவை, எதிர்பாராத தருணங்களில் நம்மிடமே திரும்பிவருகின்றன.

சில கதைகள், திரும்பிய வேகத்தில் அமைதியாகவும் ஆக்ரோஷமாகவும் கேள்விகளைக் கேட்கின்றன; கேட்கவும் தூண்டுகின்றன. சில கதைகள், நம் உணர்வுகளையும் கொத்தாக அள்ளிச் செல்கின்றன. அப்படியான சக்திகளை எழுதுபவனே அவற்றுக்குத் தருகிறான். அவனே அங்கு அனைத்துமாக இருக்கிறான். எழுத்தாகவும் கதையாகவும் கதாபாத்திரங்களாகவும் சம்பவமாகவும் வெவ்வேறு வழிகளில் அவனே பேசுகிறான்.

பால்நிலவனின் ‘காவு’ சிறுகதைத் தொகுப்பிலும் அதையேதான் பார்க்க முடியும். தொடர்ந்து சிறுபத்திரிகைகளில் மட்டுமே எழுதிவரும் பால் நிலவனின் நான்காவது தொகுப்பு இது. பரிசோதனை முயற்சிகளுக்கும் சமூகச் சிந்தனைக்கும் சிறுபத்திரிகைகள் கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்தத் தொகுப்பின் மூலம் அறிய முடிகிறது. 15 கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கதாபாத்திரங்களில், அசாத்தியமான மனிதர்கள் என்று யாருமில்லை. பெரும்பாலானவர்கள் நமக்குத் தெரிந்தவர்களே.

‘இன்னும் ஒரு கணக்கு’ கதையில் வருகிற சண்முகம், குண்டு குப்பனைப் போல அவர்கள் நம்முடன் உறவாடுபவர்களாக, நட்பானவர்களாக, பகைகொண்டவர்களாக, சுண்டல் கேட்கிற சிறுவர்களாக இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றுத் தகவலின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிற பெரிய காலாடியின் கதையையும் அவன் வீரத்தையும் இதில் மட்டுமே பார்க்க முடியும். இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் அதுவும் ஒன்று. ‘களம் சீவப்பட்ட மனசு,’ ‘வண்ணங்களின் வெளிச்சம்,’ ‘மழைக்குப் பிறகு வானம்,’ ‘மனிதனுக்கு ஏன் சிறகுகள் முளைப்பதில்லை,’ ‘இங்கே கூடை முடையப்படும்’ என அவர் வைத்திருக்கிற தலைப்புகளைப் போலவே, அவரின் கதாபாத்திரங்களும் கதைகளுக்குள் இழுத்துச் செல்கிறார்கள்.

நுங்கு விற்கும் ராஜகுமாரி, கூடை முடைதல் கல்லூரி விரிவுரையாளர் சாமுண்டி சித்தி, எருமைகள் மேய்க்கிற தாமோதரன், அரசியல்வாதியிடம் விலை போகும் சாரங்கபாணி, பவுனு வளையலை ஏரிக்குள் விடும் வெல்வெட், படங்கள் வரையும் செல்லப்பன் உள்ளிட்ட அனைவரும் ஏதோ ஒரு ரகசியத்தை, ஆசையை, ஏக்கத்தை, அன்பை, கோபத்தைச் சொல்லிப் போகிறார்கள். அவர்கள் அனைவரும் நம் ஞாபகங்களுக்குள்ளும், நமக்கான அனுபவங்களுக்குள்ளும் ஊடுருவிச் செல்வது இக்கதைகளின் தனித்துவம்.

பால்நிலவன் காட்டுகிற வட தமிழக வட்டார மொழியும் அதன் வழி கதாபாத்திரங்கள் பேசுகிற உரையாடலும் இத்தொகுப்பின் சுவாரசியம்! அவரே ஒரு கதையில் குறிப்பிட்டிருப்பதைப் போல, புங்கைமரக் கிளையில் தனியே ஆடிக்கொண்டிருக்கும் தாம்புக்கயிறு ஊஞ்சலில் வாசகனும் ஏறி அமரும் சுகத்தை இந்த ‘காவு’ தந்தால் ஆச்சரியமடைய வேண்டாம். ஊஞ்சல்கள் அதற்காக மட்டுமே இருக்கின்றன! - ஏக்நாத்

காவு
பால்நிலவன்
ஆதி பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 91599 33990

அன்பின் வாசனை: இவருடைய முதல் சிறுகதை நூலில் 19 கதைகள் உள்ளன. நெருக்கடி மிகுந்த மனித வாழ்வின் ஓட்டத்தினூடாக, சக மனிதர்கள் மீது வெறுப்புக் கொள்ளுதல், தீராத பகை வளர்த்தல், போட்டி பொறாமை என்பதாகவே பொதுவெளியில் பரப்பப்படும் சராசரி மனிதர்களின் வாழ்விலும் நிகழும் அன்பு கசியும் ஈரப்பொழுதுகளை மிக அழகான கதைகளாக்கியுள்ளார் எழுத்தாளர் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியூர் சென்றுவிட, உள்ளே மாட்டிக்கொண்ட பூனைக்குட்டிகளின் தொடர் சத்தம், பக்கத்து வீட்டினரின் மனதை இளக வைப்பது குறித்த ‘மியாவ்’ கதை, சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்த மணிமாறன் – மாலதி தம்பதியினர் கட்டிய புதுவீட்டிற்கான அழைப்பிதழை, பழைய வீட்டு உரிமையாளர்களுக்கும் ஏன் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிற காரணத்தோடு முடியும் ‘வசவுக்கு நன்றி’ கதை என, ஒவ்வொரு கதையிலும் நம் மனதைத் தைக்கும்படியான சின்ன சின்ன சம்பவங்கள், வாசிக்க வாசிக்கத் தீராத அன்பின் வாசத்தைப்
பரப்புகின்றன. - மு.முருகேஷ்

அப்பாவின் வாசம்
வத்திராயிருப்பு
தெ.சு.கவுதமன்
வேரல் புக்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 95787 64322

மூணாற்று வாழ்க்கை: துகினம் என்றால் பனி. பல மாதங்கள் பனி ஆக்கிரமிக்கும் பகுதி கேரளத்தின் மூணாறு. இந்த நாவலின் களம் மூணாறு. இவரின் முதல் நாவல் இது. திருவனந்தபுரத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் நாவலாசிரியர். ஆதவன் (சூரியன்) பனியை விலக்குவான். ஆதவன் இந்த நாவலின் நாயகன். இதில் மூணாற்றில் போகும் பயணம் மூலம் அடர்ந்த பனி போன்ற வாழ்க்கைத் திரையை விலக்கிப் பார்க்கிறான். பெருவெள்ளம், நிலச்சரிவு என்று இயற்கைப் பேரிடர் பகுதி மூணாறு. பெருவெள்ள நாளில் உயிர்பிழைக்கத் தப்பியோடுகிறான் அவன். பிறருக்கு உதவுகிறான். தொலைந்த தன் குடும்பத்தினரைத் தேடுகிறான்.

தத்து தரப்பட்ட தன் மகளைத் தேடிக் கண்டடைகிறான். ஆனால், அவள் அவனைத் திருப்பி அனுப்பிவிடுகிறாள். மாமனார் சாவு அவனைக் கொலைகாரனாக அடையாளம் காட்டுகிறது. அதனால், தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். இந்தப் பயணத்தில் மூணாறு பற்றிய முழுமையான சித்திரங்கள் அதன் நிலவியல், கலாச்சாரம், சரித்திரம், அரசியல் என்று பல அடுக்குகளை இந்த நாவல் வெளிப்படுத்தியுள்ளது. - சுப்ரபாரதிமணியன்

துகினம்
ஜிதேந்திரன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.220
தொடர்புக்கு: 98409 52919

திண்னை | ராஜபாளையத்தில் புத்தகக் காட்சி: ராஜபாளையம் மீனாட்சி புக் ஷாப், முன்னேற்றப் பதிப்பகம் இணைந்து ஒருங்கிணைக்கும் புத்தகக் காட்சி, ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் இந்த மாதம் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பக நூல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும்.

ஜி.என்.சாய்பாபா கூட்டம்: சனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு - தமிழ்நாடு (CPDR-TN) ஒருங்கிணைக்கும் கவிஞரும் செயற்பாட்டாளருமான ஜி.என்.சாய்பாபா நினைவுக் கூட்டம் இன்று (09.11.24) மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் நிருபர் மன்றத்தில் நடைபெறவுள்ளது. அவரது கவிதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழ்த்தப்படவுள்ளன. பேராசிரியர்கள் சரோஜ் கிரி, திம்மன், சிவகுமார் வழக்கறிஞர்கள் ரகுநாத், சங்கரசுப்பு, ஜான்சன், புகழேந்தி, பாவேந்தன், தோழர்கள் தியாகு, அரங்க.குணசேகரன், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் உள்ளிட்ட ஆளுமைகள் பேசவுள்ளனர்.

இந்து தமிழ் திசை நூலுக்கு விருது: இந்து தமிழ் திசை பதிப்பக வெளியீடான பிரியசகி எழுதிய ‘பெரிதினும் பெரிது கேள்’ மாணவர்களுக்கான கட்டுரை நூல், இந்நூல் சிறார் இலக்கிய விருதைப் பெறுகிறது. தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை அமைப்பு இந்த விருதை வழங்குகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in