

அ
றுமணம் என்பது மூக்கை அறுக்கும் மணம். சங்க இலக்கியத்தில் பகன்றை மலர் இத்தகைய அறுமணத்தை உடையது என்கிறார்கள். குறுந்தொகை 330-ம் பாடலில் கழார்க்கீரன் எயிற்றன் என்னும் புலவர்,
“பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணமில கமழும்”
என்று இம்மலரின் மணம் குறித்துப் பாடுகிறார். ‘மணமில கமழும்’ என்கிற தொடர் ‘மணமில்லாததொரு மணத்தைக் கமழுகிற’ என்னும் பொருளைத் தருகிறது. இதனால், இப்பூவை எவரும் சூட மாட்டார்கள் என்கிறது புறநானூறு 235-ம் பாடல். எனினும், கள் விற்கும் மகளிர் இதனைக் கண்ணியாகச் சூடிக்கொள்வர் என்கிறது பெருங்கௌசிகனார் பாடிய மலைபடுகடாம் (459). பதிற்றுப்பத்து 76-ம் பாடலில் பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடுகையில், உழவர்கள் பகன்றை மாலை சூடியிருந்தமையைக் குறிப்பிடுகிறார். கோவலர்கள் பகன்றைக் கண்ணி சூடியிருந்தமையை ஓரம்போகியார் பாடிய ஐங்குறுநூறு 87-ம் பாடலும் குறிப்பிடுகிறது.
குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியும் பறித்துப் பாறையில் குவிக்கும் பலவகைப் பூக்களைப் பட்டியலிடும் கபிலர் பகன்றை மலரையும் அதில் சேர்த்துள்ளார். பகன்றைப்பூ சூடப்பட்டது, சூடப்படாதது என சங்க இலக்கியத்தில் இருவகை கருத்துகள் நிலவுகின்றன. ‘மணமில கமழும்’ என்று பகன்றையின் மணத்தைக் குறிக்கிற கழார்க்கீரன் அம்மணத்தைக் கடுங்கள்ளின் மணத்தோடு ஒப்பிடும்போது அக்கடுங்கள்ளை இனிய கடுங்கள் என்றே குறிப்பிடுகிறார்.
அதியன் நெடுமான் அஞ்சியோடு கள் குடித்த இனிய நாட்களை நினைவுகூரும் கையறுநிலைப் பாடலான புறநானூறு 235-ம் பாடலில், ஔவை கள் மணம் வீசும் பகன்றையைச் சூடாத மலர் என்பது வியப்பே! இப்பாடலில் வேறு இரண்டு வகை மணங்களையும் அருகருகே வைத்துக் காட்டுகிறார் ஔவை:
“நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும் மன்னே”
இவ்வடிகளில் புலவு என்பது புலாலைக் குறிக்கிறது. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கையினைப் பற்றி அவர் கை மெல்லியதாக இருக்கிறது என்று கூற, அதற்கு மறுமொழியாக அமைந்த புறநானூறு 14-ம் பாடல், இறைச்சியின் புலவு நாற்றத்தைப் பூ மணத்தோடு இணைத்துப் பேசுகிறது. மருதன் இளநாகன் பாடிய புறநானூறு 52-ம் பாடல் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் நாடு பற்றிப் பேசுகையில் ஊர்கள்தோறும் எழுகிற மீன் சுடுகிற புகையின் புலவு நாற்றத்தை விதந்து பேசுகிறது. கூதாளிப் பூவால் அழகுபெற்ற, மலைமல்லிகை மலர் நாறுகிற முற்றத்தில் குலைதள்ளிய வாழையின் பெரிய இலையிலே பலருடனும் பகுத்து உண்ணுவர் என்கிறது.
நற்றிணை 45-ம் பாடல் நெய்தல் நிலத் தலைவியைப் பிற நிலத்திலிருந்து தேரில் வந்த தலைவன் காதல் கொள்ளும்போது தோழி அத்தலைவனிடம் பேசுவதாக அமைகிறது. இவளோ, கடற்கரைச் சோலையில் உள்ள மீன்பரதவர் மகள். நீயோ, கடைவீதிகளைக் கொண்ட பழைய ஊரிலே உள்ள தேரை உடைய செல்வரின் அன்பு மகன். நாங்கள் புலவு நாறுகிறோம். நீ விலகிச் சென்றுவிடு. கடலையே விளைவயலாகக் கொள்ளுகிற எங்கள் சிறிய நல்ல வாழ்க்கையானது உங்கள் வாழ்வோடு பொருந்தியதன்று.
இன்று போலவே அன்றும் பெரும்பாலான மக்கள் புலவு என்கிற கவிச்சி நாற்றத்துக்குப் பழகியவர்களாகவும் அதை விரும்புகிறவர்களாகவுமே இருந்துள்ளனர். நகரத்து செல்வக்குடியில் பிறந்த புலவு நாறுகிற பரதவர் குடியைச் சேர்ந்த தலைவியை விரும்புகிறவனாக தலைவன் இருந்திருக்கிறான். கள்ளும் கவிதையும் ஊட்டிய களிப்பில் அன்பு மீதூர ஔவையின் தலையைத் தொட்டுத் தடவுகிற அதியனுக்கும் புலவு நாற்றம் ஒரு பொருட்டாயில்லை. சங்க இலக்கியத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது புலவு என்பது வெறுத்தொதுக்கப்பட்ட ஒன்றல்ல என்பது தெளிவாகிறது.
‘மணமற்ற மணம்’ என்ற தொடரில் தொக்கிநிற்கும் ஒருவகை இருமை நிலை தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றில் நெடுகிலும் நாம் காணக்கூடிய ஒரு பண்பே என்பதில் ஐயமில்லை. இறுதியாக, மருதன் இளநாகன் பாடிய ஒரு கலித்தொகைப் பாடல் (73). நீர்த்துறையை ஒட்டிப் புதராக மண்டிக் கிடக்கிறது பகன்றை. அதை எட்டித்தொடுகிறது நீண்ட, பசிய இலைகளையுடைய தாமரை. இக்காட்சியைக் குளிர்ந்த, மணங்கமழும் மதுவை உண்கிற பெண் ஒருத்தியின் முகத்துக்கு ஒப்பிடுகிறது இப்பாடல்.
“அகன்துறை அணி பெற, புதலொடு தாழ்ந்த
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,
கண்டு பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான்
தண்கமழ் நறுந்தேறல் உண்பவள் முகம் போல,
வண்பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர!”
பெண்ணின் முகத்துக்குத் தாமரையை ஒப்பிடுதல் மரபு. இங்கோவெனில், பகன்றையும் தாமரையும் கலந்து கிடக்கும் காட்சியொன்றிற்குப் பெண்ணின் முகம் உவமையாகிறது. இப்பெண்ணும் கள்ளுண்ட களிப்பில் முகம் மலர்ந்ததொரு பெண். தாமரையின் வடிவும் பகன்றையின் வெள்ளிய நிறமும், அதன் கிண்ணம் போன்ற உருவும் கலந்த இக்காட்சிப் படிமத்தில் வடிவமும் நிறமும் கடந்து கள்மணமும் கமழ்கிறது.
- சுந்தர் காளி, பேராசிரியர்.
தொடர்புக்கு: sundarkali@yahoo.co.in