ஆசிரியப் பணி அனுபவங்கள் | நூல் வெளி

ஆசிரியப் பணி அனுபவங்கள் | நூல் வெளி
Updated on
2 min read

அரசு கலைக் கல்லூரிகள் பலவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் ஆர்.சிவக்குமார். தமிழின் முதன்மையான மொழி பெயர்ப்பாளர்களில் ஒருவர். அவர், தனது பணிக்கால அனுபவங்களின் பின்புலத்தில் எழுதியிருக்கும் நாவல் ‘கற்றதால்’. ஓர் எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவன் ஒருவனின் இளமைக் காலத்தையும் முதல் தலைமுறையாக அவன் கல்லூரிக் கல்வி பயின்று மேலெழுந்து வருவதில் அடைந்த பாடுகளையும் விவரிக்கும் அவருடைய முதல் புனைவான ‘தருநிழல்’ நாவலின் தொடர்ச்சியாகவும் இவருடைய இந்த இரண்டாவது நாவலை வாசிக்கலாம்.

இந்​நாவல், இவருடைய கற்பித்தல் அனுபவங்களை விவரிப்பதாக மட்டும் நின்று​விடாமல், கடந்த முப்பது, நாற்பது ஆண்டு கால உயர் கல்விப் புலத்தின் போக்குகள் குறித்த குறுக்கு​வெட்​டானதொரு வரலாறாகவும் ஆங்கிலம், தமிழ்ச் சிறுபத்​திரிகை சார்ந்த முன்னோடி எழுத்​தாளர்கள் அவர்தம் நூல்களைப் பற்றிய நினைவுப் பதிவு​களாகவும் பல்வேறு உள்ளடுக்​கு​களைக் கொண்டிருக்​கிறது.

சுய அனுபவங்களைத் தன் புனைவிற்கான கச்சாப்​பொருளாகக் கைக்கொள்​ளும்​போது, பல சமயங்​களில் ஆசிரியர் தனது நினைவில் தோய்ந்து மூழ்கியவராக நிகழ்வுகளை உணர்ச்சிப் பெருக்கோடு விவரிக்க முற்படு​வார். அது மிகையாக வண்ணம் தீட்டப்பட்ட ஒரு சித்திரம்​போலாகி நம் கண்ணையும் கருத்​தையும் கவராமல் போய்விடுகிற விபத்து நடப்பது உண்டு. ஆனால், ஆர்.சிவக்​குமார் ஆங்கில இலக்கியம் போதித்து​வந்​தவர், அரிதானவையும் அவசிய​மானதுமான பல அயல் நாட்டு நூல்களை அதன் மேன்மை கெடாமல் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர். ஆகவே, தன் புனைவுமொழியை அதிக கவனத்​தோடும் கட்டுப்​பாட்​டோடும் அவர் பயன்படுத்​தி​யிருப்பதை உணர முடிகிறது.

மறைவாக எங்கோ புதைத்து வைக்கப்​பட்​டிருக்கும் வெடிமருந்தின் புகையும் திரி மாத்திரம் கண்ணிற்குத் தட்டுப்​படுவதுபோல இந்நூலில் போகிற போக்கில் சில வரிகள் தென்படு​கின்றன. அவற்றை அப்படியே வாசித்துக் கடந்து போகாமல், அதன் முனையைப் பிடித்துச் சுண்டி​யிழுத்​தவாறு பின்தொடர்ந்து, சற்றுத் தொலைவு போனால் தொக்கி நிற்கும் வேறு சில பரிமாணங்​களையும் கண்டு வியக்​கலாம்.

உதாரணமாக, ‘இவன் தங்கி​யிருந்த பக்தபுரி அக்ரஹாரத்தில் ஏதோ வேலையாக வந்த ஜமுனாவும் தென்பட்​டாள்’ அவ்வளவுதான் அதற்கு முன்னும் பின்னும் ஜமுனாவைப் பற்றிய பேச்சு எதுவும் கிடையாது. சற்றே வறண்ட பிரதேசம் ஒன்றி​லிருந்து கும்பகோணம் கல்லூரிக்கு மணமாகாத இளைஞனாகப் பணிபுரியப் போன புதிதில் எழுகிற கூற்று அது. இவ்வரியில் தடுக்கி நின்று கிளைப் பாதை எதிலும் நுழைந்து வழி குழம்பி நின்று​விடாமல், நாவலின் ஓட்டத்தை மேலே தொடர முடிகிறவர்கள் கர்ம சிரத்​தை​யாளர்​தான்.

போலவே இந்நூலில் இடம்பெற்றிருக்கும் 19, 23 ஆகிய அத்தி​யாயங்களைச் சொல்லலாம். நாவலின் மையச்​சரடிற்கு அவ்வளவாகச் சம்பந்​தமில்லாத இடையீடு மாதிரி தோன்றும் அவ்விரு அத்தி​யா​யங்​களும், அதீதமான உணர்ச்சிப் பெருக்கை உறைய வைத்திருக்கும் ஒரு வித உலர்ந்த மொழிநடையில் எழுதப்​பட்டவை. பாதிக்​கப்​பட்​ட​வர்கள் அடைகிற துயரத்தைப் போலவே அதைக் களைய எதுவும் செய்ய​விய​லாமல், வெறுமனே சாட்சி​யாகப் பார்த்​துக்​கொண்​டிருக்க விதிக்​கப்​பட்​ட​வர்கள் அடைகிற வேதனையும் குறைவில்​லாதது. அவ்விரு அத்தி​யா​யங்​களும் அத்தகைய ஊமை வலியை வாசிப்​பவர்க்குக் கடத்தவல்லவை.

இடதுசாரி அரசியல் மீதான மனச்சாய்வும் நவீன இலக்கி​யத்தின் மேல் ஈர்ப்பும் கொண்ட ஓர் இளைஞனுக்கே உரிய விமர்சன நோக்கோடு விரியும் நிகழ்வு​களில் இவரது கசப்பும் கரிப்பும் நேரடியாக அல்லாமல் அங்கதமாக மாறி வெளிப்​படு​வதைப் பல இடங்களில் காண முடிகிறது. வரித்​துக்​கொண்ட லட்சி​யத்​திற்கும் வாழக் கிடைத்த நிதர்​சனத்​திற்கும் நடுவிலான இடைவெளியை எப்படிக் கடக்கிறோம் என்பதுதான் இருப்​பிற்கு ஓர் அர்த்​தத்தை நல்கு​கிறது. அந்த அர்த்தமோ ஆளாளுக்கு மாறுபடு​கிறது. தன்னனுபவம் சார்ந்​தவைதான் என்​றாலும், தன் தனிவாழ்க்கை​யைப் பற்றி ​விவரிப்​ப​தைப் பேரள​விற்​குத் தவிர்த்திருக்​கிறார். சுவை கருதி நாடகீயமாக ​விரித்​தெழுத வாய்ப்​பிருக்​கும் தருணங்​களை​யும்கூட நீட்டி ​முழக்​காமல் குறுக்​க​மாகவே சொல்​லிச்​ செல்​கிறார்​.

கற்றதால்
ஆர்.சிவகுமார்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.260
தொடர்புக்கு: 91-4652-278525

- தொடர்புக்கு: mohankrangan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in