

மறவர் சீமை, மருது பாண்டியர்களின் மரணத்திற்குப் பின், சிவகங்கை முதல் மன்னர் சசிவர்ணத்தேவர் ஆகிய வரலாற்று நூல்களின் வழியே கவனம் பெற்ற எழுத்தாளர் விவேகானந்தம் எழுதியுள்ள இந்நூலில், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய 60 வரலாற்று ஆளுமைகள் குறித்த பல்வேறு விவரங்களைத் தொகுத்தளித்து உள்ளார்.
25 ஆண்டு காலங்கள் தொடர்ந்து நாள்குறிப்பு எழுதிய ஆனந்தரங்கப்பிள்ளை, தென்னிந்திய வரலாற்று ஆய்வுகளுக்கு முன்னோடியாக விளங்கிய கர்னல் காலின் மெக்கன்சி, நிலவியல் - தொல்லியல் ஆய்வுகளில் ஆர்வமுடைய ராபர்ட் புரூஸ் ஃபூட், ‘நவீன இந்தியாவின் சிற்பி’ எனக் கொண்டாடப்பட்ட ஜவாஹர்லால் நேரு, வரலாற்று நூல்களுக்குப் புதிய பார்வையைத் தந்த வெ.சாமிநாத சர்மா என இந்திய அறிவுலகத்தின் வளர்ச்சிக்கு அடிகோலிய வரலாற்று நாயகர்களைப் பற்றிச் சுருக்கமாகவும், அதே நேரத்தில், அரிய செய்திகளையும் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது. - மு.முருகேஷ்
வரலாறு படைத்த சாதனையாளர்கள்
பேரா. எஸ்.ஆர்.விவேகானந்தம்
மணிவாசகர் பதிப்பகம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 9380530884
வரலாற்றின் வழி புனைவு: ஐவிரல் கையள்ளி அருந்துகிற வண்ணமற்ற திரவத்தை நீர் என்கிறோம். அதற்கு இன்னும் பல பெயர்கள் உண்டு. சிறுகரைகளுக்குள் புரண்டால் வாய்க்கால், பெருங்கரை மோதினால் ஆறு, எல்லை தாண்டினால் நீலவண்ணக் கடல். இதுவாகவும் அதுவாகவும் உருமாறி, நிறம் மாறினாலும் நீரின் கோபம் நீரறியாதது. இந்த நீர், ஆற்றின் வெள்ளமாகிப் பெரும் கோபம் கொண்டு ஓர் ஊரை உயிரோடு அழித்த கதையைப் பேசுகிறது, ‘நீர்ப்பரணி’.
நூறு வருடங்களுக்கு முன், தாமிரபரணி ஏற்படுத்திய பேரழிவால் சவராமங்கலம் என்ற நதிக்கரைக் கிராமம் புதைந்ததையும் அதற்குப் பதிலாக ஆங்கிலேய அதிகாரி கேம்பல் கொடுத்த இடத்தில் கேம்பலாபாத் உருவான கதையையும் புனைவாக்கி இருக்கிறார் எம்.எம்.தீன். வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் உருவாகும் நாவல்கள், வெறும் தகவல்களாக மாறிவிடும் அபாயத்தை எளிதாகத் தாண்டி, அதை ரசனையான கதையாக மாற்றியிருக்கிறார். யதார்த்த மனிதர்களின் பின்னணியில் இஸ்லாமியர்களின் வாழ்வைப் பேசுகிறது நாவல்.
கொழும்பு, பர்மாவுக்குப் பொருள் தேடிச் சென்ற அவர்களின் செழிப்பான வீடுகளில் வண்ணங்களைக் கொண்ட குடைகள், பெண்களை மகிழ்விக்கும் நகைகள், அத்தர் வாசம், முகப்பூச்சு பவுடர், கேட்டதும் அள்ளிக்கொடுக்கும் குணம், மஸ்கோத்து அல்வா, போர்த்துக்கீசியர்கள் சுங்கம் வசூலிக்கக் கட்டிய ஆனைப்பாலம், ஊரை அள்ளிக்கொண்டு போகும் வெள்ளத்தின் ஓலம், எல்லாம் இழந்தும் ஒருவருக்கொருவர் உதவும் குடும்பங்கள், வெள்ளத்தில் எந்தச் சேதமுமின்றி, சாட்சியாக நிற்கும் காட்டுப்பள்ளிவாசல் மினரா என நாவல் பல விஷயங்களை அழுத்தமாகப் பேசிச் செல்கிறது.
கதைக்குள் சகஜமாக உலவும் கதாபாத்திரங்களும் பட்டென்று மனதுக்குள் தங்கிவிடுகிறார்கள். மைனர் தோரணையுடன் வில்வண்டியில் அலையும் சண்டி சம்சு, நாவல் முடிந்த பின்னும் நம்மோடு பேசிக்கொண்டே இருக்கிறார். அவரால் அவமானப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் தாசிப் பெண்ணின் முடிவு, அக்காலகட்ட வர்க்க வேறுபாட்டை வேறுவிதமாகக் காட்டுகிறது.
கதைசொல்லி கண்ணும்மா, பொசுக்கென்று கோபப்படும் காவன்னா ஹாஜியார், தாசில்தார் மணியம்பிள்ளை, மனைவி -குழந்தையை இழந்து, ஊரை விட்டுச் செல்லும் மாடுகள் வளர்ப்பவர், ஹமீது - ரொகையாவின் மெளன காதல், அக்கரையில் குடியேறிவிடக் கங்கணம் கட்டும் ஜமாத் தலைவர் உதுமான் மைதீன், வழக்கறிஞர் பிஜிலி சாஹிப் என ஒவ்வொருவரும் நம்மோடு உரையாடிக்கொண்டே உலவுகிறார்கள்.
அவர்களின் மகிழ்ச்சியில் மூழ்கி, அவர்களின் கண்ணீரில் நனைந்து, புதிதாக உருவாகும் கேம்பலாபாத்தில் நமக்கும் ஒரு வீடு கட்டிக்கொண்ட உணர்வைத் தருகிறது நீர்ப்பரணி. குளிர்நீர் பட்டதும் மேனியில் வெளிப்படும் சிலிர்ப்பை, பல இடங்களில் தருவது இந்நாவலின் சிறப்பு. - ஏக்நாத்
நீர்ப்பரணி
எம்.எம்.தீன்
படைப்பு பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 73388 97788
ஒழுக்கங்களுக்கு வெளியே... நர்சிம்மின் ‘பஃறுளி’ நாவலின் கதைக்களம் மதுரை. மாயக்கண்ணன், கோமதி, மாதவன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் வழியாக ‘பஃறுளி’ நாவல் சொல்லப்படுகிறது. மாயக்கண்ணனுக்கும் கோமதிக்கும் இடையில் மன உடைவை உண்டாக்குபவன் மாதவன். மாயக்கண்ணன் - கோமதி ஆகிய இருவருக்கும் இடையிலான வாழ்க்கையைத்தான் பேசுகிறது. இருவரும் பள்ளி ஆசிரியர்கள். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒரே பள்ளியில் பணியாற்றுகிறார்கள்.
உதவித் தலைமை ஆசிரியர் பொறுப்பு தனக்குக் கிடைக்கும் என மாயக்கண்ணன் நினைக்கும் சூழ்நிலையில், அந்த இடத்திற்கு மாதவன் வந்துவிடுகிறார். மாயக்கண்ணனின் இருப்பு விரிசலடைகிறது. அதுவரை சக ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் கிடைத்துவந்த மரியாதை குறைவதாக உணர்கிறார். மாதவனின் அதிகாரம் கோமதியை வேலை வாங்குவதுவரை நீள்கிறது. பணியின் காரணமாகக் கோமதியும் மாதவனுடன் பழக வேண்டிய சூழல் உருவாகிறது. இது கணவன் மனைவிக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்துகிறது.
அளவுக்கு அதிகமான அன்பு பெரும் ஆபத்தில்தான் முடியும் என்பதை இந்நாவலும் பகிர்கிறது. அடுத்து, அன்பு அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது. மாயக்கண்ணன், கோமதிமீது பெருங்காதலுடன் இருக்கிறார். கோமதி தனக்கு மட்டுமேயானவள் என்று நினைக்கிறார். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியையாக இருக்க ஆசைப்படும் கோமதிக்கு, மாயக்கண்ணனின் அளவுக்கு மீறிய காதல் பெரும் தடையாக இருக்கிறது. கோமதி தன்னைவிட்டுச் சென்று விடுவாரோ என்ற பயம் தொற்றிக்கொள்கிறது. பயம் சந்தேகத்தை வரவழைக்கிறது.
இருவருக்கும் இடையில் விரிசல் அதிகரிக்கிறது. கோமதி சுயமரியாதையுடன் வாழ விரும்புகிறார். கணவனுக்கும் பிறருக்குமான எல்லை கோமதிக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆனால், மாதவனின் ஆளுமை காரணமாக அவரிடம் இவளுக்குச் சின்ன தடுமாற்றம் ஏற்படுகிறது. இதை மாயக்கண்ணன் சரியாகக் கையாளாமல் கோமதியைத் தவற விடுகிறார்.
கோமதியின் அகத்தை மாயக்கண்ணன் ஒருநாள் புரிந்துகொள்கிறார். ஆனால், காலம் கடந்து விடுகிறது. பெண்ணின் சுதந்திர உணர்வு கட்டற்றது. அதை அவர் செயல்படுத்த முயலும்போது யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்ற புரிதலைக் கோமதி கதாபாத்திரம் ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு கோமதி கன்னியாகுமரி வரை செல்கிறார். இந்த வெளிப்பார்வைக்கு அப்பாற்பட்டு நாவல், உடைத்துப் பேசுவதற்கான உள்ளீடுகளையும் கொண்டிருக்கிறது. - தமிழ்மாறன்
பஃறுளி
நர்சிம்
மிளிர் பதிப்பகம்,
விலை: 300
தொடர்புக்கு: 99406 66868