Last Updated : 23 Jun, 2018 08:53 AM

 

Published : 23 Jun 2018 08:53 AM
Last Updated : 23 Jun 2018 08:53 AM

மனநிம்மதி ஆன்மாவின் இழிநிலை!: தேவிபாரதி பேட்டி

மகாலத் தமிழ் எழுத்தாளர்களில் தனித்துவமானவர் தேவிபாரதி. மொழி, கதைசொல்லும் முறை, உள்ளடக்கம் என ஒவ்வொன்றிலும் புதிய சாத்தியங்களை முயன்றுபார்ப்பவர். அவரது ‘நிழலின் தனிமை’ நாவல் தமிழ்ப் புனைவுலகின் சாதனைப் படைப்புகளுள் ஒன்று. ‘வீடென்ப’, ‘கறுப்பு வெள்ளைக் கடவுள்’ ஆகிய இரண்டும் தேவிபாரதியின் உச்சபட்ச புனைவாற்றல் வெளிப்பட்டிருக்கும் தொகுப்புகள்.

ஏன் எழுதுகிறீர்கள்?

கலை, நான் வாழ்வை எதிர்கொள்ளும் முறை. எழுத்து, மொழியின் வழியே நிகழ்த்தப்படும் சமூகச் செயல்பாடு. அப்படியானால் நீங்கள் மொழியை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதன் கடிவாளத்தைக் கைப்பற்ற வேண்டும். அப்போது அது ஒரு விளையாட்டாக மாறுகிறது, சவாலாக மாறுகிறது. கொஞ்சம் விளையாடிப் பார்ப்பதற்கும், அந்த சவாலை எதிர்கொள்வதற்குமே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எந்த நேரம் எழுதுவதற்கு உகந்ததாக இருக்கிறது?

ஒரு படைப்பு மனதில் தோன்றிய உடனேயே எழுதிவிட வேண்டும் என நினைப்பேன். கணினியின் முன் உட்காருவதற்கான வாய்ப்பு கிடைத்ததும் எழுதத் தொடங்கிவிடுவேன். ஆனால், சீக்கிரத்திலேயே சோர்வு தட்டிவிடும். எழுத விரும்பியதற்கும் எழுதிக்கொண்டிருப்பதற்கும் இடையேயான இடைவெளி தரும் தவிப்பிலிருந்து விடுபட முடியாமல் உழன்று கிடப்பேன். அப்போதுதான் அது என் படைப்பு மொழியைக் கண்டறிவதற்கான சவாலாக மாறுகிறது. அப்போது என்ன நேரும் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது. மனப்பிறழ்வுக்கு ஆளானவனைப் போல அலைந்து திரிவேன், ஓயாமல் புகைபிடித்துக்கொண்டிருப்பேன், யாருடனாவது பேசுவேன், ஏதாவ தொரு தருணத்தில் மனம் தளரும். அப்போது எழுதத் தொடங்குவேன். அது டிசம்பர் மாதத்தின் அதிகாலை யாக இருக்கலாம், கடும் கோடையொன்றின் நடுப்பகல் நேரமாக இருக்கலாம், மாரிக்காலத்தின் நள்ளிர வாகவோ வசந்தகாலத்தின் முன்னிரவு நேரமாகவோ இருக்கலாம். அது என் தீர்மானத்துக்கு உட்பட்ட விஷயமாக எப்போதுமே இருந்ததில்லை.

உங்களது எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது எனச் சொல்வீர்கள்?

இன்று வரையிலும் நிறைவேறாத ஒரு கனவு அது. ஒரே ஒரு சிறுகதையின் மூலம் அந்தக் கனவை எட்டி விட வேண்டும் என நினைத்திருக்கிறேன். ‘பிறகொரு இரவு’ அந்தக் கனவின் விளைச்சல்களில் ஒன்று. அந்தச் சிறுகதையை எழுதுவதற்கு என் முழு வாழ்வை யும் பணயம் வைக்கத் தயாராக இருந்தேன். காந்தியை அறிவதற்கான எனது முடிவற்ற பயணத்தின் ஒரு புள்ளி யில் களைத்து நின்றபோது, அந்தக் கதைக்கான முதல் யோசனை தோன்றியது. பிறகு, நான் அதைப் பின்தொடர முற்பட்டேன். எனது தட்டச்சு இயந்திரத்தின் பற்கள் கிட்டித்துப்போகும் வரை அதன் வெவ்வேறு வடிவங்களை எழுதிப்பார்த்தேன். எதுவுமே திருப்தி தரவில்லை. 2008 டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று அந்தக் கதையின் இறுதி வடிவத்தை எழுதி முடித்தபோது, உலகை மாற்றிவிடக்கூடிய மகத்தான படைப்பு ஒன்றை எழுதிவிட்டதாக ஒரு கற்பனையில் மூழ்கி சிறிது காலம் வரை திளைத்துக் கிடந்தேன். அது கற்பனை என்றாலும் அன்றைய சந்தோஷம் உண்மை. அதுபோன்ற கற்பனையில் என்னை மூழ்கடித்த வேறு சில படைப்புக்களைக் குறிப்பிட வேண்டுமென்றால் ‘சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும்’, ‘உயிர்த்தெழுதலின் சாபம்’, ‘ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்’, ‘கழைக்கூத்தாடியின் இசை’ ஆகிய சிறுகதைகளைச் சொல்வேன். ‘நிழலின் தனிமை’ நாவலை எழுதி முடித்தபோது இது போதும் எனத் தோன்றியது. ‘நட்ராஜ் மகராஜ்’ நாவலின் இறுதி வடிவத்தை எழுதும்போது எனது உடல்நிலை நிச்சயமற்றதாக இருந்தது. எனது படைப்பு மொழியின் சாத்தியங்கள் அனைத்தையும் அந்த நாவலில் பயன்படுத்திவிட வேண்டும் என விரும்பினேன். பிறகு, எனது ஆரோக்கியம் சீரடையத் தொடங்கிவிட்டது. இப்போது சாவைப் பற்றிய பயம் இல்லை. நீண்ட காலமாக எழுதிக்கொண்டிருக்கும் ‘நொய்யல்’ நாவல் எனது எழுத்து வாழ்வைப் பூர்த்தியாக்கிவிடும் படைப்பாக இருக்குமா? எனது மடிக்கணினியில் அரைகுறையாகக் கிடக்கும் ‘ஆதியாகமம்’ நாவலே எனது எழுத்து வாழ்வைப் பூர்த்தியாக்கும் ஒரு படைப்பாக இருக்கும் எனக் கனவுகாண விரும்புகிறேன். கனவு என்பது எப்போதுமே கனவுதான் அல்லவா?

எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?

பல தருணங்கள். தமிழில் எழுத்தாளனாக வாழ்வது ஒரு சவால். நிறைய இழப்புகளை, அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். எழுத்தை முற்றாகக் கைவிட்டுவிட யோசித்த தருணங்கள் உண்டு. கசப்பு மண்டிய தருணங்களும் அதிகம். அவற்றைப் படைப்புச் செயல்பாடுகளின் வழியாகக் கடந்துசெல்லவே முயல்வேன். எழுத்தாளனாக வாழ்வது என்பது எனது சுய தேர்வு. அதன் எல்லா விளைவுகளுக்கும் நானே பொறுப்பாக வேண்டும் என்பதால் சோர்விலிருந்து விடுபடுவதற்கு முயல்வேன். மனநிம்மதி ஆன்மாவின் இழிநிலை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

1980-களின் தொடக்கத்தில் முன்னோடிகள் பலரின் அறிமுகம் கிடைத்தது. அவர்களுடனான உரையாடல்களின் வழியாகவே நான் எனது படைப்புப் பார்வையை உருவாக்கிக்கொண்டேன். ஒரு எழுத்தாளனாக வாழ் வதற்கு எனக்குக் கிடைத்த அறிவுரைகளில் முக்கிய மானவை பாரதி, புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி ஆகியோரிடமிருந்து பெற்றவை. வாழ்வையும் இலக்கியத்தையும் அவர்கள் எதிர்கொண்ட விதமே இன்றுவரையிலும் என்னைச் செப்பனிட்டுக்கொள்வதற்கான அறிவுரைகள் என்பேன்.

இலக்கியம் தவிர்த்து - இசை, பயணம், சினிமா, ஒவியம்... - வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?

பயணம் எனலாம். எப்போதாவது எனக்குப் பிடித்த திரையிசைப் பாடல்களைக் கேட்பதைத் தவிர, வேறு இசை ஞானம் எதுவும் இல்லை. சினிமாவின் மீது பெரும் ஈடுபாடு உண்டு. ஓவியனாக வேண்டுமென்பது என் பால்யகாலக் கனவாக இருந்தது. இப்போது இதெல்லாம் இல்லாமல் வாழப் பழகிக்கொண்டுவிட்டேன். நான் அவ்வப்போது மேற்கொண்டுவரும் சொற்ப அளவிலான இந்திய, வெளிநாட்டுப் பயணங் களைவிட நான் வசிக்கும் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களையும் சிறு நகரங்களையும் சுற்றி வருவதையே அதிகம் விரும்புகிறேன். ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை ஏறத்தாழ ஐந்து பள்ளிகளில் படித்திருக்கிறேன். சமீபத்தில் அந்தப் பள்ளிகளுக்குச் சென்றேன். என் பால்ய நண்பர்கள் சிலரைச் சந்திக்க வாய்த்தது. தவிப்போடும் ஆற்றாமையோடும் மெலிதான குதூகலத்தோடும் அந்தப் பயணங்களை மேற்கொண்டுவருகிறேன்.

இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

மார்க்ஸின் மூலதனம். கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக மார்க்ஸிய மூலவர்களின் நூல்களை வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், மூல தனத்தை வாசிப்பது பெரும் சவாலாகவே இருந்துவந்திருக்கிறது. அதற்கான அவகாசம் கூடவில்லை. இப்போது என் அலமாரியில் அதன் அனைத்துத் தொகுதிகளும் இருக்கின்றன. அவற்றைக் காணும் ஒவ்வொருமுறையும் பெருமூச்சோடு கண்களைத் தாழ்த்திக்கொள்கிறேன். எனக்குக் குற்றவுணர்வை மூளச்செய்யும் நூலாக இப்போது நான் வாசிக்க முடியாத அந்தப் புத்தகம் இருக்கிறது.

இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

பண்படுத்தும் என்றுதான் நினைக்கிறேன். இலக் கியத்தின் துணையின்றி என்னால் இந்த வாழ்வை எதிர்கொண்டிருக்க முடியும் எனத் தோன்றவில்லை. வாழ்வை அதன் எல்லாக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளவும் நேசிக்கவும் சில தருணங்களில் வெறுக்கவும் கற்றுக்கொடுப்பவை இலக்கியம்தான். நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் பலர் இலக்கியத்தின் மீதான ஈடுபாடு கொண்டவர்கள்.

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x