Last Updated : 08 Jun, 2018 08:57 AM

 

Published : 08 Jun 2018 08:57 AM
Last Updated : 08 Jun 2018 08:57 AM

பார்த்திபன் கனவு 33: ராணியின் துயரம்

வலினால் விரிந்த கண்களில் கண்ணீர் ததும்ப மேற்கூறிய விவரத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழி கூறினாள் ‘‘நான் பாக்கியமற்றவள்தான். அதற்கும் சந்தேகமா? பதியைப் போர்க்களத்தில் பலி கொடுத்துவிட்டு, இந்த உயிரை வைத்துக் கொண்டிருந்தேன். மகன் தேசப் பிரஷ்டனாகிக் கண் காணாத தேசத்துக்குப் போன பிறகும் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறேன், சுவாமி! பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வரப் போகிறார் என்று சொல்கிறார்களே, அது உண்மையா? அப்படி வந்தால் அவர் காலில் விழுந்து ‘என்னையும் விக்கிரமனை அனுப்பிய இடத்துக்கே அனுப்பிவிடுங்கள்!’ என்று வேண்டிக் கொள்ளப் போகிறேன்...’’

‘‘என்ன சொன்னாய், அருள்மொழி! அழகுதான்! உன் புருஷனுடைய ஜன்ம சத்ருவின் காலில் விழுந்தா கெஞ்சுவாய்! வீர சொர்க்கத்தில் இருக்கும் பார்த்திப ராஜா இதை அறிந்தால் சந்தோஷப்படுவாரா? யோசித்துப் பார்!”

‘‘ஆமாம், அவர் சந்தோஷப்படமாட்டார்; நானும் அவருடைய சத்ருவிடம் பிச்சைக் கேட்கப் போக மாட்டேன். ஏதோ ஆத்திரப்பட்டுச் சொல்லிவிட்டேன். ஆகா! அவர்தான் என்னவெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினார்? கன்னியாகுமரியில் இருந்து இமய பர்வதம் வரையில் புலிக் கொடி பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரே! அவருடைய பிள்ளைக்கு இந்தப் பெரிய தேசத்தில் இருக்கவும் இடமில்லாமல் போய்விட்டதே....’’

‘‘பார்த்திப மகாராஜா வேறொரு மனக்கோட்டையும் கட்டவில்லையா அம்மா? சோழ ராஜ்யம் கடல்களுக்கு அப்பாலுள்ள தேசங்களிலும் பரவ வேண்டுமென்று அவர் ஆசைப்படவில்லையா? ரகசிய சித்திர மண்டபத்தில் அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்!’’

‘‘ஐயோ! அவருடைய ஆசை இம்மாதிரியா நிறைவேற வேண்டும்? விக்கிரமன் இன்று கடல்களுககு அப்பால் உள்ள ராஜ்ஜியங்களைப் பிடிப்பதற்காகப் படையெடுத்தா போயிருக்கிறான்? எந்தக் காட்டுமிராண்டித் தீவில் கொண்டுபோய் அவனை விட்டிருக்கிறார்களோ? காட்டிலும் மலையிலும் எப்படி அலைந்து கஷ்டப்படுகிறானோ? ஏன் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், சுவாமி?"

‘‘உன்னை நான் ஒரு நாளும் ஏமாற்ற மாட்டேன் அம்மா! உன்னை ஏமாற்றி எனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? உன் மகனுக்கு ஒரு குறையும் வராது என்பது என் நம்பிக்கை. விக்கிரமனுக்கு முன்னால் யாரும் தேசப் பிரஷ்டராகிக் காட்டுக்குப் போனதில்லையா? ராமன் போகவில்லையா? பஞ்சபாண்டவர்கள் போகவில்லையா? விக்கிரமன் கடல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளில் அனுபவிக்கும் கஷ்டங்கள் எல்லாம் அவனுடைய வீர பராக்கிரமங்களை இன்னும் அதிகமாக வளர்க்கும். திரும்பித் தாய் நாட்டுக்கு அவன் வரும்போது...’’

‘‘ஐயோ! அவன் வரவேண்டாம், சுவாமி. வரவேண்டாம். தாய்நாட்டில் காலடி வைத்தால் சிரசாக்கினை என்றுதான் சக்கரவர்த்தி விதித்திருக்கிறாரே?

எங்கேயாவது கண்காணாத தேசத்திலாவது அவன் உயிரை வைத்துக் கொண்டிருக்கட்டும்; அதுவே போதும்!" என்றாள் அருள்மொழி.

‘‘ஆனால் அப்படி அவன் வராமல் இருக்க முடியாது, அருள்மொழி! என்றைக்காவது ஒருநாள் அவன் வந்துதான் தீருவான். தாயின் பாசமும் தாய்நாட்டின் பாசமும் அவனைக் கவர்ந்து இழுக்கும்.

இந்த இரண்டு பாசங்களைக் காட்டிலும் வலிமை பொருந்திய இன்னொரு பாசமும் சேர்ந்திருக்கிறது. உனக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை...’’ என்று சொல்லிச் சிவனடியார் நிறுத்தினார்.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x