நூல் நயம்: வரலாற்று ஆய்வு நூல்

நூல் நயம்: வரலாற்று ஆய்வு நூல்
Updated on
2 min read

உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்துவது, அடுத்தடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் அறிவுச் சொத்து. அந்த வகையில், குமரேச ஸ்தபதியின் மாணவர் ஜெயராமனின் குறிப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு கணேஷ் ஸ்தபதி, வை.பாலசுப்ரமணியன் ஸ்தபதி ஆகியோர் தொகுத்துள்ள நூல், ‘திராவிட மரபு கட்டடக் கலை இலக்கணம்’.

கோயில் கட்டடக் கலை குறித்துப் பல அரிய செய்திகளையும் குறிப்புகளையும் தாங்கி வந்திருக்கிறது இந்நூல். தமிழகக் கோயில் கட்டிடக் கலை பற்றியும் சிற்பக் கலை பற்றியும் நுட்பமாகத் தெரிந்துகொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் இந்நூல் பெரிதும் உதவும். - மிது

திராவிட மரபு கட்டடக் கலை இலக்கணம்
அ.ச.கணேஷ் ஸ்தபதி, வை.பாலசுப்பிரமணியன் ஸ்தபதி
சிபி பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 88382 11644

தமிழர் இழந்த செல்வம்: அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்கிற நூலை எழுதியதற்கு உணர்வுவழிப்பட்ட ஒரு பின்புலம் உண்டு. அவருக்கு மக்கள்பேறு இல்லை. நெருங்கிய உறவினரின் இரண்டு குழந்தைகளை வளர்த்துவந்தார். கெடுவாய்ப்பாக அவர்கள் இளம்வயதிலேயே இறக்க நேர்ந்தது.

இந்தத் துயரை வேங்கடசாமியால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நூல்களைப் படிப்பதையும் எழுதுவதையுமே வாழ்க்கையாக்கிக் கொண்ட அவர், இந்தத் துயரத்தையும் அவ்வாறே கடக்க முயன்றார். அந்நாள்களில் அவர் படித்த ‘யாப்பருங்கல விருத்தி’ என்கிற நூலின் பழைய உரையாசிரியர், மேற்கோள் காட்டியிருந்த பல நூல்கள் மறைந்துபோனவையாக இருந்தன.

பிள்ளைச் செல்வங்களை இழந்த வேங்கடசாமிக்குப் பழந்தமிழ் நூல்களின் மறைவும் அதே துயரத்தை அளித்தன. தமிழன்னை இப்படி எத்தனை குழந்தைகளை இழந்துவிட்டாள் என்பதைக் கணக்கெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அதன் விளைவாக அவர் எழுதியதுதான் இந்நூல்.

தான் படித்த நூல்கள் மூலம் அறிய நேர்ந்த, ஆனால் நமக்குக் கிடைக்காமலே போன நூல்கள் குறித்த அறிமுகச் செய்திகளை வேங்கடசாமி இதில் வழங்கியுள்ளார். வேங்கடசாமி வாழ்ந்த காலத்தில் இந்நூலுக்குத் தமிழறிஞர் மு.வரதராசனாரும் தற்போது வெளிவந்துள்ள பதிப்புக்குப் பேராசிரியர் வீ.அரசும் அணிந்துரை எழுதியுள்ளனர். - ஆனந்தன் செல்லையா

மறைந்துபோன தமிழ் நூல்கள்
மயிலை சீனி.வேங்கடசாமி
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
விலை: ரூ.325

‘எழுத்து’ மரபின் தொடர்ச்சி: தமிழ்க் கவிதையில் 70களில் முன்னெடுக்கப்பட்ட ஒரு மரபு, நவீனத்துவத்தின் உச்சமாகப் பார்க்கப்பட்டது. இந்தக் கவிதைகளில் பல நேரடியாக அந்த மரபிலிருந்து துள்ளிக் குதித்துள்ளன. தனி மனத்தின் வெளிப்பாடுகளைப் பெரும்பாலான கவிதைகள், பாடுபொருளாகக் கொண்டுள்ளன. அலங்காரமற்ற சொற்கள், எளிய புழங்குமொழி ஆகிய அம்சங்களும் அதன் வேரை உறுதிப்படுத்துகின்றன. விக்ரமாதித்யன் - வேதாளம், அரக்கனின் உயிர் கொண்ட கிளி எனத் தொன்மத்தின் அம்சங்கள் கவிதைகளைச் சுவாரசியப்படுத்தியுள்ளன. நவீன வாழ்க்கையின் மாற்றங்கள், அதனால் உண்டான வாழ்க்கைச் சிக்கலையும் கவிதைகள் பேசுகின்றன. கவிதைகள் பல முழுமையும் உருவகமாகப் பல பொருள்களை உணர்த்துகின்றன. - விபின்

பரமபத சோபன படம்
பொன்.தனசேகரன்
போதிவனம் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 98414 50437

ஒரு இடதுசாரியின் வாழ்க்கை:

அகவை 80ஐக் கடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான டி.கே.ரங்கராஜனின் சுயசரிதை நூல் இது. உலகில் தொழிற்சங்கங்களின் தோற்றம் எப்படி நிகழ்ந்தது, இந்தியாவில் ஏஐடியுசி, ஐஎன்டியுசி, சிஐடியு ஆகியவை எப்படி உருவாகின எனப் பல்வேறு வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்தளித்திருக்கும் டி.கே.ஆர், அதோடு தனது தொழிற்சங்கப் பணிகளையும் விவரித்துள்ளார்.

இடதுசாரிகளின் அரசியல் விரவிக்கிடக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் அமைக்கப்பட்ட கூட்டணி குறித்தும், தனது நேரடித் தேர்தல் அனுபவம் குறித்தும் டி.கே.ஆர். விவரித்துள்ளார். தொழிற்சங்கத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக 12 ஆண்டுகளாகச் செயல்பட்ட டி.கே.ஆர், தனது நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்துச் சுருக்கமாகப் பகிர்ந்துள்ளார். ஓர் இடதுசாரித் தலைவர், தான் கடந்து வந்த பாதை குறித்தும், அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் சக தோழர்களுக்கு எழுதும் கடிதத்தைப் போலவே இந்த நூல் அமைந்துள்ளது. இதன்மூலம் தான் பின்பற்றும் சித்தாந்தத்தை நோக்கி புதிய தலைமுறையைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். - மோகன்தாஸ் பாலா

தொடர் ஓட்டம் (சுயசரிதை)
டி.கே.ரங்கராஜன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 044-24332924

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in