

இந்தியாவிலேயே முதல் நடமாடும் நூலகம், மன்னார்குடி அருகில் உள்ள மேலவாசல் கிராமத்தில் எளிய மக்களின் அறிவுக்கண் திறக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இரட்டை மாட்டு வண்டியில் இருபுறமும் அடைக்கப்பட்ட அடுக்குகளில் நூல்கள் பாடவாரியாக அடுக்கப்பட்டிருந்தன. அதன் வெளிப்பகுதியில் அறிவுச் சுவடிகளும், விளக்கப்படங்களும், நீதிக்கதைப் படங்களும் இடம்பெற்றிருந்தன. ஒலித்தட்டுக்களும் வண்டியின் உள்ளே இருந்தன.
இந்த நடமாடும் நூலக மாட்டுவண்டி சு.வி.கனகசபையின் அரும் பெரும் முயற்சியின் விளைவாக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதனை நூலகத் தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் தலைமையேற்றுத் தொடங்கிவைத்தார். மேலவாசல் தொடங்கி பன்னிரண்டு மைல் சுற்றளவில் இருந்த சுமார் தொண்ணுற்று ஐந்து சிற்றூர்களுக்கு நடமாடும் நூலக வண்டி சென்றது. நூல்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு குறிப்பு அட்டையும் நூல்களில் இடம்பெற்றிருந்தன.
நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ஒவ்வோர் ஊரிலும் தன்னார்வலர்கள் சிலர் ஏற்பாடுகளை ஒழுங்குசெய்தனர். தேவையான நூல்களைப் பெற்றுக்கொண்டு அடுத்த முறை வண்டி வரும்போது திருப்பித் தரும் ஏற்பாடு இருந்தது. இடையில் மிதிவண்டி, மோட்டார் வண்டிகளும் நூல்களைத் தரவும், பெறவும் பயன்படுத்தப்பட்டன. நூல்களைக் கிராமங்களில் பலர் சேர்ந்து வாசிக்கும் வழக்கமும் இருந்தது.
நடமாடும் நூலகத்தில் பெரிய எழுத்துப் புத்தகங்கள், நீதிக் கதைகள், தோட்டக்கலை, தேனீ வளர்த்தல், குடிசைத் தொழில்கள், வருமானத்தை அதிகரிக்கும் வழிகள் போன்ற நூல்கள் இடம்பெற்றன. இவை அனைத்தையும் உருவாக்கிச் செயற்படுத்தியது கனகசபைதான். “அவர்களை (மக்களை) புத்தகங்களிடம் அன்பு பாராட்டும்படிச் செய்ய வேண்டியது, அவர்களுடைய வாழ்க்கையில் புத்தகங்களை இன்றியமையாததாகச் செய்யும்படி அவர்களுக்கு அறிவூட்ட வேண்டியது” இந்த இரண்டையும் நடமாடும் நூலக இயக்கத்தின் குறிக்கோள்களாக அவர் குறிப்பிட்டார். எளிய, குறைந்த கல்வியறிவு பெற்றவர்களுக்கு அவர் சொன்னது இது. ஆனால், இன்று அதிகக் கல்வியறிவு பெற்றுவிட்ட நிலையிலும் நம் சமூகத்திற்கு இந்த வாசகங்களையே சொல்ல வேண்டி உள்ளது.
இந்த எழுத்தறிவு இயக்கமும் நடமாடும் நூலகமும் சில ஆண்டுகள் நடைபெற்றன. 1935இல் கனகசபையின் உடல்நலம் குன்றிய பின் நடமாடும் நூலகம் படிப்படியாக நலிவுற்று நின்றும் போனது. பின்னர் தஞ்சை மாவட்டக் கழகம் மோட்டார் காரில், வேனில் நடமாடும் நூல் நிலையத்தைத் தொடங்கியது. பின்னர் அவ்வாகனத்தில் பேசும் படம், மருத்துவச் சிகிச்சை ஆகியன இணைந்ததால் நூல்களும் வாசிப்பும் பின்னுக்குத் தள்ளப்பட்டன
மன்னார்குடி நடமாடும் நூலகத்தில் 6,308 நூல்களும் 498 விளக்கப் படங்களும் இடம்பெற்றிருந்தன. இறுதியில் 1953 நூல்களும் 145 விளக்கப்படங்களுமே எஞ்சியிருக்கின்றன. இந்த நடமாடும் நூலகம் பற்றிய தகவல்களையும், படங்களையும் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகர் த.பத்மநாதன் தன் ஆய்வில் முதன்முதலில் பதிவு செய்தார். அந்த மாட்டு வண்டி நூலகத்தின் மாதிரி வடிவத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்திற்குள் இடம்பெறச் செய்துள்ளனர்.
மன்னார்குடி கிளை நூலகம் பல்லாண்டுகளாக நிரந்தர இடமின்றி வாடகை இடங்களில் செயல்பட்டு வந்தது. தற்போது சு.வி.கனகசபை தன் பூர்விகச் சொத்திலிருந்து உயில் மூலம் நூலகப் பயன்பாட்டிற்கு என அளித்த கட்டிடத்தில் இயங்கிவருகிறது. நகரின் முக்கியப் பகுதியில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடம் அது. அந்த நூலகம் கனகசபை நினைவு நூலகமாக முறைப்படி அரசால் அறிவிக்கப்பட வேண்டும். முதல் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்ட மேலவாசல் கிராமத்தில் உள்ள ஊர்ப்புற நூலகம் அடையாளப்பூவமாக மேம்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும்.
நடமாடும் நூலகம் தொடங்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 1931
- kamarasuera70@gmail.com