

ம
.பொ.சிவஞானம், மா.இராசமாணிக்கனார், வெ.சாமிநாத சர்மா, தி.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன், லக்ஷ்மி, பெ.சு.மணி, கழனியூரன் உள்ளிட்ட முக்கிய இலக்கிய ஆளுமைகளின் புத்தகங்களை வெளியிட்டுவருகிற பூங்கொடி பதிப்பகம் ஜூன்-24ல் ஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பூங்கொடி பதிப்பகத்தைத் தொடங்கிய சுப்பையாவுக்கு இன்று 86-வது பிறந்த தினம், 60 ஆண்டு கால மணவிழா, பதிப்புப் பணியில் 75-வது ஆண்டும்கூட.
இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் கல்லல் அருகே உள்ள கல்குளம் எனும் குக்கிராமத்தில் பிறந்த சுப்பையா, சிறுவயதில் அண்ணன் கணபதியுடன் இலங்கைக்குப் பிழைப்பு தேடிச் சென்று, அங்கு வீரகேசரி பத்திரிகையில் வேலைபார்த்துக்கொண்டே இரவுப் பள்ளிகளில் படித்தவர். 1950-ல் தமிழகத்துக்குத் திரும்பியதும் ம.பொ.சி புத்தகங்களை வெளியிட்டுவந்த இன்ப நிலையத்தில் பணிபுரிந்தார். 1968-ல் பூங்கொடி என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார் சுப்பையா. இப்பதிப்பகம் வெளியிட்ட ம.பொ.சி.யின் விடுதலைப் போரில் தமிழகம் நூல், அதன் முக்கியத்துவம் கருதி தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது. பூங்கொடியின் மற்றொரு வெளியீடான லக்ஷ்மியின் ஒரு காவிரியைப் போல நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இன்றைய பபாசி அமைப்புக்கு முன்னோடி அமைப்பாக விளங்கிய தமிழ்நூல் வெளியீட்டாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தில் செயலாளராகப் பொறுப்புவகித்து தமிழ்ப்பதிப்புலகின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டவர் சுப்பையா. இன்று தனது 86-வது வயதிலும் பூங்ககொடி பதிப்பகத்தின் நிர்வாகத்திலும், பதிப்புப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்!