Published : 23 Jun 2018 08:58 AM
Last Updated : 23 Jun 2018 08:58 AM

பத்திரிகையோடுதான் நாள் விடியுது!

கு

மரியிலிருந்து இந்தியா தொடங்குவதாகக் கொண்டால், ஒருவகையில் இந்தியாவின் முகம் கொடிக்கால் ஷேக் அப்துல்லா. சுந்தர ராமசாமி தொடங்கி ஜெயமோகன் வரை எல்லோராலும் ‘குமரியின் ஆன்மா’ என்று கொண்டாடப்படும் பொதுத் தொண்டர். கொடிக்காலரின் இன்னொரு அடையாளம் அவருடைய தீவிர வாசிப்பு.

நாகர்கோவில் பஸ் நிலையத்துக்கு வந்த வேகத்தில் பத்திரிகைகளைப் படித்துவிட வேண்டும் – ஒரு நாள் பத்திரிகை வாசிப்பு இல்லா மல் இருக்க முடியாது அவருக்கு. “இன்னைக்குத்தானே கல்வி எல்லோருக்கும் கெடைக்குது? அன்னைக்கு அப்படி இல்லையே? அப்படியான காலகட்டத்துல பொறந்தவன் நான். அப்பம் படிப்பு மேல ஒரு மோகம் வரும் பார்த்தீயளா, அது அப்படியே எனக்கு இந்தப் பத்திரிகை, புஸ்தக வாசிப்பு மேல வந்துடுச்சு.

ஒருத்தர் ஏன் வாசிக்கணும்னு கேட்டா, அதுக்கு என் வாழ்க்கையே முன்னுதாரணம். என் வாழ்க்கையையே வடிவமைச்சது வாசிப்புன்னு சொல்லலாம். அதிகம் படிக்காதவன். ஆனா, நான் ரெண்டு பத்திரிகைகளை நடத்தினேன்னு சொன்னா நம்புவீங்களா? ‘புதுமைத்தாய்’, ‘உங்கள் தூதுவன்’னு ரெண்டு பத்திரிகைகளை 14 வருஷங்கள் நடத்தினேன். வாசிப்பு கொடுத்த கல்விதான் காரணம்.

சுந்தர ராமசாமி எங்க ஊர்க்காரர். ஆனா, அவரோட உயரம் வாசிப்புக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது. நம்ம பக்கத்துலயேகூட ஒரு அதிசயம் இருக்கலாம். அடையாளம் காணப் பார்வை வேணுமே? வாசிப்புதான் அதைக் கொடுத்துச்சு.

காலையில நாலரை மணிக்கு எந்திருச்சுருவேன். அஞ்சு தினசரி வாங்குறேன். முதல்ல எடுத்துப் படிக்கிறது ‘இந்து தமிழ்’. அரசியல், சமூகம், இலக்கியம், வணிகம், சினிமான்னு சகல துறைகளையும் ஒருங்கிணைச்சு முழுமையான நாளிதழா வர்றது அதுதானே! அப்புறம், நடுப்பக்கக் கட்டுரைகளுக்கு ரசிகன் நான். அதுக்கே எனக்கு முக்கால் மணி நேரம் ஆகும். அப்புறம் செய்திகள், இணைப்பிதழ், மத்த பத்திரிகைகள்னு ரெண்டு – ரெண்டரை மணி நேரம் பத்திரிகை வாசிப்புக்கு மட்டும் செலவாகும். அதனால, புத்தக வாசிப்பை இரவுல வெச்சுக்குவேன்.

வாசிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வாசிக்கிறதை விவாதிக்கிறது முக்கியம். நமக்குப் புரியலை அல்லது கொஞ்சம் படிக்க கஷ்டமா இருக்குங்கிறதை வெச்சு எந்தப் புஸ்தகத்தையும் தீர்மானிச்சுடக் கூடாது. எது கஷ்டப்படுத்துதோ அதுதான் நம்மளை அடுத்த கட்டத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போகும். ஒரு வாசகனா இது நான் புரிஞ்சுவெச்சுக்கிட்டிருக்குற ஒரு பாடம்!

- என்.சுவாமிநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x