நினைவுகளின் ஊர்வலம் | நூல் வெளி

நினைவுகளின் ஊர்வலம் | நூல் வெளி
Updated on
2 min read

இயா யான்பெரி ஸ்வீடனைச் சேர்ந்த எழுத்தாளர். 2012இல் அவரது 45ஆவது வயதில், முதல் நாவலின் மூலம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தார். அதற்குப் பின் ஒரு நாவல், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் நாவலிலிருந்தே கவனம் பெற்ற எழுத்தாளர் இவர். இவரது மூன்றாவது நாவலான ‘விவரணை’ புக்கரின் இறுதிப் பட்டியலில் நுழைந்தது மட்டுமன்றி, ஸ்வீடனின் ஆறு இலக்கிய விருதுகளின் இறுதிப் பட்டியலுக்குச் சென்றது; அவற்றில் ஒரு விருதை வென்றும் இருக்கிறது.

கடுங்​காய்ச்​சலில் விழுந்த பெண், அவரது கடந்த காலத்தில் முக்கியப் பங்கு வகித்துப் பின் பிரிந்த நான்கு பேருடனான நினைவுகளை மனதிற்குள் மறுபடியும் மீட்டிப் பார்ப்பதே இந்த நாவல். நோய்மையில் மனம் இளகுகிறது. தனிமை அந்த இளக்கத்தைக் கூட்டு​கிறது. ஆனால், கதைசொல்லி, பிரிந்த உறவுகளிடம் சற்று வேறுவிதமாக நடந்து​கொண்​டிருக்​கலாம் என்று யோசிக்க​வில்லை. வெறுமனே நினைவுகளை மீட்டிப் பார்க்​கிறார். ஏனென்​றால், இந்த நான்கு உறவுகளிலுமே முடிவுசெய்யும் சக்தியாக அவர் ஒருபோதும் இருந்​த​தில்லை.

வெற்றிகரமான எழுத்​தாளராக வர வேண்டும் என்று விரும்பிய பெண்ணுக்கு, அனுகூலம் என்று சொல்லப்​போனால் அவரது கூர்நோக்​கும், விவரணைகளை மீண்டும் நினைவு​கூரும் ஆற்றலும்​தான். பெண் பார்வையில் நகரும் இந்தக் கதையில், தான் செய்தவற்றிலோ மற்றவர்கள் நடந்து​கொண்​டதிலோ இது சரி, இது தவறு என்ற அறுதி​யிட்ட முடிவுகளை அந்தப் பெண் கொடுக்க​வில்லை. மாறாக, நுட்பமான விவரணைகளை வழங்கி வாசகரை ஒரு முடிவுக்கு வந்து​கொள்​ளும்படி செய்கிறார்.

பல காலமாக எடுத்​திராத புத்தகத்தைச் சட்டென்று எடுத்​துப்​பார்க்கும் ஆவல் ஏதோ சில நினைவு​களால் வருவது இயல்பு. ஒரு நோயின்போது தோழி யோஹன்னா பரிசளித்த நூலின் முன்பக்கம் அவள் எழுதிய வரிகளைப் பல வருடப் பிரிவிற்குப் பின் இன்னொரு நோய்ப் பாதிப்புக் காலத்தில் வாசித்துப் பார்க்​கிறார். உறவின் ஈரம் காய்ந்து தடம்தெரியாது அழிந்​துபோன பின்னரும் நினைத்துப் பார்க்க நிறையவே இருக்​கிறது.

நிக்கி​யுடனான உறவு என்பது பெரிய சக்கரத்தின் எதிர்​ப்புறம் அளவில் சிறிய சக்கரம் பொருத்​தப்பட்ட ஒரு வண்டியைப் போன்றது. தட்பவெப்​பநிலைபோல் சட்டென்று மாறும் குணமுடையவள் நிக்கி. அவ்வுறவு அவ்வளவு காலம் நீடித்ததே அதிசயம்​தான். அலெஹண்ட்ரோ ஒருவன் மட்டுமே நினைவில் வரும் ஆண். அவன் குறித்த அத்தி​யா​யத்​திலும் அவனைப் பற்றியதைவிட மற்றவர்கள் குறித்த விவரணைகள் அதிகம். ஆனால், கதைசொல்லி மறக்க இயலாத ஒன்றை அவன் விட்டுச்​சென்றதே, அவன் நினைவு​கூரப்பட முக்கியக் காரணம்.

பிரிகிடா கதைசொல்​லியின் தாய் என்பது ஆரம்பத்தில் சொல்லப்​படு​வ​தில்லை. தொடர் பதற்றப் பீதிகளால் (Panic attacks) பாதிக்​கப்​பட்​ட​வளின் மகளாக வளர்வது என்பது வித்தி​யாசமான அனுபவம். மற்ற மூன்று கதாபாத்​திரங்​களி​லிருந்து வித்தி​யாசப்​பட்டு பிரிகிடா கதாபாத்​திரத்தைப் பார்வை​யாளரின் கோணத்தில் குணாதிசயச் சிதறல்​களாகக் கொண்டு​வந்​திருக்​கிறார் ஆசிரியர்.

நம்முடைய ஒரே வாழ்க்கை​யில், உண்மையில் பல வாழ்க்கைகளை வாழ்கிறோம். அலுவல​கத்தில் எல்லோருக்கும் கீழ்ப்​படிந்து அமைதி​யானவனாக இருக்கும் ஒருவன், வீட்டில் மனைவியை மிரட்டி அவளைக் கதிகலங்கச் செய்பவனாக இருக்​கிறான். நம் வாழ்க்கையில் பலர் வருகின்​றனர்; போகின்​றனர். சிலர் மட்டுமே அவர்களது தடங்களை நம்முள் பதித்துச் செல்கின்​றனர். தடங்கள் நமக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் எப்போதும் இனிமை​யானவையாக மட்டும் இருக்க வேண்டும் என்பதில்லை.

இருவரின் உறவில் ஒருவர் வாழ்க்கையை முன்னோக்கிப் பார்ப்​பதுவும் மற்றொருவர் பின்னோக்கிப் பார்ப்​பதுமாக இருந்​தால், அந்த உறவு எவ்வளவு நாள் நீடிக்​கும்? இந்த நாவல் ஒரு நினைவுப் பயணம். நாம் வெட்ட​வெளியை உற்று​நோக்​கியபடி சற்றுநேரம் இருந்தால் நினைவு​களில் எத்தனை பேர் நீந்துகிறார்கள்? சாதாரண உறவுகளின், சாதாரண நிகழ்வு​களின் அசாதா​ரணத்தை இயா இந்த நாவலில் கொண்டு​வந்​திருக்​கிறார்.

இயாவின் மொழிநடை மிகையுணர்வு இன்றி, நுட்பமான உணர்வுகள் அடங்கிய தொனியில், விமர்​சனங்​களின்றி, ஒரு வாழ்க்கையின் சில பகுதி​களைப் படம்பிடித்துக் காட்டு​கிறது. இருபதுகளில் நடந்தவற்றை மத்திய வயது கடந்து மறுபரிசீலனை செய்தால், பாதிக்கு மேல் முட்டாள்​தனம்​தான். ஆயினும் பிறிதொரு சந்தர்ப்பம் கிடைத்​தா​லும், அதே வயதில், அதே சாலையில்தான் பயணிக்கப் போகிறோம். நல்ல நூல்கள் ஆங்கிலத்தில் வெளியான அதே வருடத்தில் தெளிவான மொழிபெயர்ப்புடன் தமிழில் கிடைப்பது அரிது. இந்த நூல் வழி அது சாத்தி​ய​மாகி​யுள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்​பு.

விவரணை
இயா யான்பெரி
(தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி)
டூ ஷோர்ஸ் பிரஸ்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 8903665360

- தொடர்புக்கு: sarakavivar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in