பச்சையம் பூத்த கவிமனம் | நூல் நயம்

பச்சையம் பூத்த கவிமனம் | நூல் நயம்
Updated on
2 min read

புதுச்சேரி அரசு வழங்கிய ‘கலை ரத்னா விருது’, சிங்கப்பூர் கவிமாலையின் ‘இளங்கவிஞர் தங்க முத்திரை விருதை’யும் பெற்றிருக்கும் கவிஞர் ஆதிரன், சிங்கப்பூரில் பணியாற்றி வருபவர். கவிதையென்பது மிகவும் சுருக்கப்பட்ட சக்தி வாய்ந்த மொழி எனும் புரிதலையுடைய கவிஞர், குறைந்த சொற்களுக்குள் தான் சொல்ல வருவதைச் செறிவாகச் சொல்லியுள்ளார்.

‘நெடிதுயர்ந்த மரத்திலிருந்து/பிரியாவிடை பெற்றுத்/தரை பார்க்கும் ஆவலில்/காற்றில் மிதந்து/இறங்கிக் கொண்டிருந்ததொரு/காம்பறுந்த/பழுப்பு இலை...’ என மெல்லிசைபோல நகர்ந்து செல்லும் வரிகளும், ‘கொடும் வெப்பத்திலிருந்து/மீண்டு/குளிர் நீரைப் பருகுவதற்குள்/வறண்ட/பனிக்காலத்தை/ நோக்கிச் செல்லும்/இந்நாட்களை/எப்படி நிறுத்த?’ எனும் அர்த்தமிக்க கேள்விகளாலும் நம்மை ஈர்க்கும் பச்சையம் பூசிய பல வரிகளே, இந்நூலெங்கும் கவிதைகளாகப் பூத்துள்ளன. - மு.முருகேஷ்

மின்னல் பூக்கும் பொழுதுகள்
ஆதிரன்
டாக்டர்
ஆர்.அருள்ராஜ் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 88708 38964

பொறியாளரின் இலக்கியப் பதிவுகள்: பொறியியல், தொழில்நுட்பம், சர்வதேச விவகாரங்கள், சமூக நிகழ்வுகள், கல்வி எனப் பல்வேறு தலைப்புகளில் எழுதிவரும் மு.இராமனாதன், அடிப்படையில் ஒரு தமிழ் மாணவர். அந்த வகையில் இலக்கியம் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புத்தக மதிப்புரைகள், அணிந்துரைகள், திரைப்பட ரசனை, ஆளுமைகள் குறித்த குறிப்புகள், அனுபவப் பதிவுகள் போன்றவையும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

தலைப்புக் கட்டுரையில், ஷெர்லக் ஹோம்ஸ் ‘வாழ்ந்த’ இல்லத்துக்கு அவர் சென்றபோது, அங்கு வந்திருந்த ஸ்பானியச் சிறுவனுடன் நிகழ்த்திய ஹோம்ஸ் பாணி உரையாடலில் தொடங்கும் சுவாரசியம், புத்தகத்தின் இறுதிப் பக்கம் வரை தொடர்கிறது.

இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா பற்றிய கட்டுரை, ரசனையும் இலக்கியப் பார்வையும் கொண்ட நேயரின் உணர்வுபூர்வமான வெளிப்பாடாக எழுதப்பட்டிருக்கிறது. புழக்கத்தில் இல்லாத ஒரு பதத்தின் பொருளைத் தேடிக் கண்டடைவதைப் புதிய தேசத்தைக் கண்டுபிடித்ததற்கு நிகரான மகிழ்ச்சியாக ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதர் குறிப்பிட்டதைப் பதிவுசெய்யும் நூலாசிரியர், அதே ஈடுபாட்டுடன் உலக விஷயங்களை அணுகுவது அவரது எழுத்தின் வழி புலப்படுகிறது. - வெ.சந்திரமோகன்

ஷெர்லக் ஹோம்ஸ்
வாழ்ந்த வீடு
மு.இராமனாதன்
காலச்சுவடு
விலை: ரூ.240
தொடர்புக்கு:
91-4652-278525

உழைப்பாளிகளின் பக்கம் நின்று...தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் தமிழில் பேசியவர்களுள் ஒருவரான கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி, இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளையும் வளர்ப்பது மத்திய அரசின் பொறுப்பில்லையா என நாடாளுமன்றத்தில் அர்த்தபூர்வமாகக் கேள்வி எழுப்பியவர்.

அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ‘மனித உயிர்களா? சொத்துடைமையா?’ என்கிற பெயரில் வெளியாகியுள்ள அந்த நூலை அவருடைய மகள் ஆர்.வைகையும் மார்க்சிஸ்ட் கட்சியின் கருவூலத்தைச் சேர்ந்த நர்மதா தேவியும் இணைந்து தொகுத்துள்ளனர். வீ.பா.கணேசன், கி.ரமேஷ் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். இந்த நூலை பி.ராமமூர்த்தி நினைவுச் சொற்பொழிவுக் குழு பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது.

பசிக்கொடுமையால் கிணற்றில் விழுந்து இறக்கும் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத சென்னை மாகாணச் சட்டமன்றம், பிரிட்டிஷ் மன்னர் இறப்பு பற்றி கவலைப்படுவதா? தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அரசு நிஜமான அக்கறையுடன் நடவடிக்கைகளை எடுக்கிறதா என மக்கள் எதிர்கொள்ளும் தீவிரப் பிரச்சினைகள் பற்றி ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக ஆதாரங்களுடனும் சிந்தனாபூர்மாகவும் தொடர்ச்சியாகக் கேள்விகளை பி.ஆர். எழுப்பி வந்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வு, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி எனப் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அவர் ஆற்றியுள்ள விரிவான இந்த உரைகளைப் படிக்கும்போது அவற்றின் ஆழத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. உலக அரசியல் தொடங்கி உள்ளூர் பிரச்சினை வரை உழைக்கும் மக்களின் பார்வையில் அவர் முன்வைத்துப் பேசியதை இந்த நூல் வலுவாக முன்னிறுத்துகிறது. தன் காலத்தைவிட முன்னோக்கிச் சிந்தித்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் ஜனநாயக ஆட்சி முறையில் செய்த தலையீடுகளின் வரலாற்றுடன், இக்கால விவாதங்களை ஒப்பிடும்போது பெரும் ஏமாற்றம் மேலெழுவதை உணர முடிகிறது. - அன்பு

மனித உயிர்களா? சொத்துடைமையா?
பி.ராமமூர்த்தி: தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள்
தொகுப்பு: ஆர்.வைகை, நர்மதா தேவி
மொழிபெயர்ப்பு: வீ.பா. கணேசன், கி.ரமேஷ்
பாரதி புத்தகாலயம், விலை: ரூ.250
தொடர்புக்கு: 044-24332924

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in