

‘இந்தியா கொண்டுள்ளதாக நாம் கருதும் தொன்மையில் கூடுதலாக 2000 ஆண்டுகள் சேர்க்க வேண்டும் என்பதைச் சிந்துவெளி அகழாய்வுகள் கூறுகின்றன’ என ஜான் மார்ஷல் 1924இல் எழுதியிருக்கிறார். பழங்காலத்திலேயே நேர்த்தியான நகரவாசிகளாக விளங்கிய சிந்துவெளி மக்களின் பண்பாட்டைக் கண்டறிந்த ஜான் மார்ஷலின் அதே உவகை, அந்த ஆய்வில் தொடர்ச்சியாக ஈடுபட்ட ஸ்பெயின் நாட்டு அருள் தந்தை ஹென்றி ஹீராஸ், சம காலத்தைச் சேர்ந்த பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலா போன்றோரிடமும் வெளிப்படுகிறது.
சிந்துவெளி நாகரிகத்துக்கும் திராவிட மொழி நாகரிகங்களுக்கும் இடையேயான உறவு, ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் முன்வைத்த சிந்துவெளிக் குறியீட்டு எழுத்துகள் குறித்த ஆய்வு மூலம் இன்னும் உறுதிப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன், இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணங்கள் அளித்த அனுபவச் செறிவோடு புதிய உரையாடலைத் தொடங்கிவைத்தார்.
அவர் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ நூல், தமிழர்களின் தொன்மம் சிந்துவெளியிலிருந்து தொடங்குவதாகக் கூறுகிறது. இவர்கள் உள்படப் பல்வேறு அறிஞர்களின் முக்கியக் கருத்துகளை வாசகர்கள் சுருக்கமாகவும் செறிவாகவும் அறிந்துகொள்ள ‘தமிழ்த்தடம்’ காலாண்டிதழின் செப்டம்பர், 2024 பதிப்பு உதவுகிறது. சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு - நூற்றாண்டுச் சிறப்பிதழாக இது உருவாக்கப்பட்டுள்ளது. - ஆனந்தன் செல்லையா
தமிழ்த்தடம்
சிந்துவெளி பண்பாட்டுச் சிறப்பிதழ்
சிறப்பாசிரியர்:
சுந்தர் கணேசன்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 93828 53646
எதுவும் நிரந்தரம் இல்லை: வாழ்க்கை பற்றிய பரிபூரண ஞானத்தை அறிவதில் அனைவருக்குமே ஆசை உண்டு. அந்த வகையில் மனித வாழ்க்கையின் நிலையாமையைப் பேசுகிறது திருக்குமரனின் ‘ஜென் கதைகள்’.
மானிட வாழ்வில் எதுவுமே நிரந்தரம் இல்லை. மனிதர்களாகிய நாம் விடுதி வாழ்க்கையைப் போல் இப்பூமியில் சில காலம் தங்கிச் செல்கின்றோம். அவ்வாறு இருக்க, இங்கு எதற்கும் சொந்தம் கொண்டாட நமக்கு உரிமை இல்லை என்கிற ஜென் தத்துவத்தின் அடிநாதம், இந்தப் புத்தகம் முழுவதும் சிறு சிறு கதைகளாக நிறைந்திருக்கிறது.
நம் முன் கவர்ச்சியாக, பரந்து விரிந்துள்ள போலித் தனங்கள் அனைத்தும் செயற்கையானவைதாம். ஒரு மரமானது கீழே விழுந்துகிடக்கும் சருகுகளினாலேயே அழகு பெறுகிறது. சருகுகள் கீழே விழுந்திருப்பதில் சுத்தம் இல்லை எனத் சருகுகளை நீக்கிவிட்டால் அதில் அழகும் இருப்பதில்லை, இயற்கையும் இருப்பதில்லை. இவ்வுலகில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் நெஞ்சம் மனிதருக்கு வேண்டும். நமக்கு எது கிடைத்ததோ அதை நெஞ்சார நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே வாழ்க்கையின் ஞானம் என்கிறது இப்புத்தகம். - இந்து குணசேகர்
ஜென் கதைகள்
ஆசிரியர்: திருக்குமரன்
சத்யா பதிப்பகம்
விலை: ரூ 60
தொடர்புக்கு: 044 - 4507 4203
நம் வெளியீடு | தொழில்நுட்ப யுகத்தின் சூட்சுமம்: தமக்கு வேண்டிய தகவல்களை மட்டுமல்லாமல்; திறன்களையும் அறிவாற்றலையும் எளிதில் வசப்படுத்தும் வரப்பிரசாதத்தை இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி வழங்கியிருக்கிறது. இருப்பினும், அந்த வளர்ச்சியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறினால், ஏற்றத்துக்கு உதவும் தொழில்நுட்பமே வீழ்ச்சிக்கும் காரணமாக மாறிவிடும்.
இந்தச் சூழலில், பேராசிரியர் அ.முகமது அப்துல்காதர் எழுதியிருக்கும் ‘வெல்லப் போவது நீ தான்’ எனும் இந்த நூல் முக்கியமானது. இன்றைய நவீனத் தொழில்நுட்ப யுகத்தில், தேவைகளுக்கு அதிகமாகக் கிடைக்கும் திறன்களையும் அறிவாற்றலையும் கையாளும் சூட்சுமத்தை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் விதமாக இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார்.
வெல்லப்போவது நீ தான்
பேராசிரியர் அ.முகமது அப்துல்காதர்
விலை: ரூ.130
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74013 29402
திண்ணை | மொழிபெயர்ப்பாளர் மறைவு: மொழிபெயர்ப்பாளர் பொன்.சின்னதம்பி முருகேசன் காலமானார். இவர் பத்துக்கு மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பிரேசில் எழுத்தாளர் பெளலோ கொயல்ஹோவின் சர்வதேசப் புகழ்மிக்க நாவலான ‘The Alchemist’ஐ தமிழில் ‘ரசவாதி’ என்கிற பெயரிலும், அமெரிக்க எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலியின் ‘Roots’ நாவலை ‘வேர்கள்’ என்கிற பெயரிலும் மொழிபெயர்த்துள்ளார்.
நவீன இயற்பியலுக்கும் கிழக்கின் ஆன்மிகத்துக்குமான ஒற்றுமைகளை ஆராயும் இயற்பியலாளர் பிரிட்ஜாஃப் காப்ராவின் ‘The Tao of Physics’ நூலை ‘இயற்பியலின் தாவோ’ என்கிற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிபெயர்ப்புக்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் விருதையும் பெற்றுள்ளார். ‘போர்க் கலை’, ‘முதல் விடுதலைப் போர்’, ‘மார்க்கோபோலா பயணம்’ உள்ளிட்ட பல நூல்களை இவர் மொழிபெயர்த்துள்ளார்.
திருச்சி, விருதுநகர் புத்தகக் காட்சிகள்: திருச்சி மாவட்ட நிர்வாகமும் பொது நூலக இயக்கமும் இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழா சி.எஸ்.ஐ. புனித ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 6ஆம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகமும் (அரங்கு எண்: 36) கலந்துகொண்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் பொது நூலக இயக்கமும் இணைந்து நடத்தும் விருதுநகர் புத்தகத் திருவிழா கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 7ஆம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகக் காட்சியிலும் இந்து தமிழ் திசை பதிப்பகம் (அரங்கு எண்: 3) கலந்துகொண்டுள்ளது.