Last Updated : 14 Jun, 2018 09:57 AM

 

Published : 14 Jun 2018 09:57 AM
Last Updated : 14 Jun 2018 09:57 AM

மரணம் ஒரு கலை 16: அன்பென்னும் ஞானம்

சித்தார்த்த கவுதம புத்தர்

நிறைமாத சூலியான மாயாதேவி பிறந்தகத்துக்குக் கிளம்புகிறார். கபிலவஸ்துவில் இருந்து கிளம்பிய அவர் லும்பினிக்கு அருகில் வந்தபோது பிரசவ வலி வருகிறது. இளவேனிற் காலம். வைகாசி பவுர்ணமி. சால் மரங்கள் அடர்ந்திருந்த வனம். சாக்கியர்கள் பதவியேற்பதற்காக அமைத்திருந்த படிகளுடன் கூடிய தாமரைக் குளத்தில் நீராடுகிறார். நீராடி முடித்தப் பிறகு சித்தார்த்த கவுதமரை ஈன்றெடுக்கிறார். பிறந்த ஒரு வாரத்தில், பால் சுவைக்கக் கற்றிருந்த சித்தார்த்தரை விட்டு மாயாதேவி இறந்துபோகிறார். சித்தார்த்தர் பிறந்த ஆண்டு கி.மு.563 ஆக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சாக்கியர்கள் சத்திரிய பழங்குடியினர். குடியரசைப் பின்பற்றியவர்கள். குடியரசு சபை உறுப்பினர்கள் அனைவருமே அரசர்கள் என்ற பொருள்கொண்ட ‘ராஜான்ய’ என்ற பட்டத்தினால் அழைக்கப்பட்டிருக்கின்றனர். சித்தார்த்தரின் தந்தை சுத்தோதனரும் ‘ராஜான்ய’ என்றழைக்கப்பட்டவர். சாக்கியர்கள் சிறந்த விவசாயிகள், வணிகர்கள். சாக்கிய நாடு வளம் குன்றியப் பகுதியாக இருந்தாலும் மகதம், கோசலம் போன்ற வளமான நாடுகளுடன் நல்லுறவில் இருந்தது.

ஞானத்தைத் தேடி...

சத்திரிய வம்சத்துக்குரிய குல வழக்கப்படி சித்தார்த்தர் குதிரையேற்றம், ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட வித்தைகளைக் கற்றார். 29-வது வயதில் யசோதரையை மணந்தவருக்கு ராகுலன் என்ற மகன் பிறந்தான். ராகுலன் பிறந்த 7 நாட்களிலேயே சித்தார்த்தர் துவராடை அணிந்து தலையை மழித்துக்கொண்டு, குலமக்களையும் குடும்பத்தையும்விட்டு துறவறம் பூண்டார்.

6 ஆண்டுகள் ஞானத்தைத் தேடியலைந்த சித்தார்த்தர் கண்டடைந்த விடைகள் மட்டும் புதிதானவை அல்ல. கேள்விகளும் புதிது. மனிதர்கள் ஏன் முதுமையினாலும், நோயினாலும் வருந்துகிறார்கள்? துன்பங்கள் ஏன் மனிதர்களை வருந்தச் செய்கின்றன போன்ற கேள்விகள் துறவறம் சென்றவர்கள் கேட்காதவை. தனிமனிதத் துயரங்களின் பிடியில் இருந்து மனிதர்களை விடுவிக்க முயன்றதோடு, புத்தர் சமூகத்தின் துயரங்களுக்கான காரணங்களையும் கண்டறிய முயன்றார்.

சித்தார்த்தர் புத்தரானார்

ஞானத்தைக் கண்டடையும் பல்வேறு வழிகளையும் முயற்சித்தார். மாதக்கணக்காக உணவின்றித் தவம் இருந்தார். கடுமையான தவத்தினால் உடல் பலவீனமானது. “ஒட்டகத்தின் காலைப் போல் என் தொடை ஆகிவிட்டது, ஆழமான கிணற்றுக்குள் நட்சத்திரம் தென்படுவதைப் போல் என் கண்கள் ஒளி மங்கின” என்று வருந்தி, தவத்தைக் கைவிட்டார்.

“என் சமய வழியை நானே தேடிக் கண்டடைகிறேன்” என்று தனக்குள் மூழ்கி, தன் கேள்விகளுக்கான விடையைக் கண் டடைந்தார். சித்தார்த்தர் புத்தரானார். புத்தர் என்றால் விழிப் படைந்தவர் என்று பொருள்.

துன்பங்களுக்கான காரணம் தேவைகளே, வேண்டும் என்ற கோரிக்கைகளே. கோரிக்கையற்ற மனதுக்குத் துன்பம் இல்லை என்றார். துன்பத்தை அழிக்க 8 நல்வழிகளைப் போதித்தார். ஆடம்பர உல்லாச வாழ்வை வெறுத்தார். உண்ணாவிரதம் இருந்து உடலை வாட்டும் நோன்புகளை மறுத்தார். புத்தரின் உபதேசங்கள் இடைநெறியில் நின்றதால் மக்களால் ஏற்கப்பட்டன. ஆன்மா ஓர் உடலுக்குள் இருந்து மற்றொரு உடலுக்குள் செல்கிறது என்பதை ஏற்காத புத்தர், உடலுக்கு மறுபிறப்பு இருக்கிறது என்பதை ஏற்றார்.

உலகம் அழிவற்றதா? அழிவுடையதா? முடிவுடையதா? முடிவற்றதா? ஜீவனும் உடலும் ஒன்றா? வேறா? மரணத்துக்குப் பின் முக்தி பெறுகிறார்களா? பெறவில்லையா போன்ற 10 கேள்விகளுக்கு விடையளிக்க மறுத்துவிட்டார். அமைதிக்கும், முக்திக்கும், வேதனையைத் தடுப்பதற்கும் அவை பயன்படாதவை என்பதால் விடையளிக்க விரும்பவில்லை என்றார். ஓடத்தில் ஆற்றைக் கடப்பதைப் போலவே பௌத்த தர்மத்தை உபதேசிக்கிறேன். அதைத் தலைமேல் வைத்து சுமப்பதற்காக அல்ல என்று தன் உபதேசங்களைச் சாதாரண மனிதர்களுக்கும் நடைமுறை நெறிகளாக்கினார். புத்தர் புது மதத்தை நிறுவ முனையவில்லை. மக்களிடையே புதிய வாழ்க்கை நெறியை உருவாக்க விரும்பினார்.

சிந்தனை சுதந்திரம்

தன் காலத்தின் மதக் கோட்பாடுகளையும் தத்துவங்களை யும் புத்தர் ஏற்கவில்லை. அறத்தினாலும் நன்கொடையினா லும் வறுமையைக் களைய முடியாது. விவசாயிகளுக்கு விதைகளையும், வணிகர்களுக்கு முதலீட்டையும் சமூகம் கொடுக்க வேண்டும். எல்லோரும் கூடி முடிவெடுக்கும் வழக்கம் வேண்டும். பெண்களைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் போன்ற கருத்துகள் புத்தரின் காலத்தில் புதிய சி ந் தனைகள்.

புத்தரின் உபதேசத்தில் அனைத்துத் தரப்பினரும் நாட்டம் கொள்ள காரணம் புத்தர் அனுமதித்திருந்த சிந்தனை சுதந் திரமே. பௌத்தத்தை அரசர்கள் ஏற்றார்கள். வணிகர்கள் போகும் தேசமெங்கும் விரும்பிப் பரப்பினார்கள். மகதப் பேரரசர் பிம்பிசாரரும் புத்தரின் சீடர். படைத் தலைவரின் மகளான சுஜாதையும் அவரின் சீடர். ஓடம் செலுத்துபரும் சீடர். சிராவஸ்தி நகரத்தின் செல்வந்தர் ‘சுதத்தன்’ பெரும்பணம் கொடுத்து ‘ஜேத் வனம்’ என்ற தோட்டம் ஒன்றையே விலைக்கு வாங்கி புத்தரும் சீடர்களும் தங்குவதற்காக மாரிக் கால ஓய்வு இல்லமாக கொடுத்தார். மண்ணே தெரியாதவாறு வெள்ளித் துண்டுகளால் தரையை இழைத்திருந்தாராம்.

35 வயதில் போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தர், நடந்து சென்றே மக்களைச் சந்தித்து உபதேசித்தார். கிழிசலை மறைக்க தையலிடப்பட்ட துவராடையும், பிச்சைப் பாத்திரமு மாக மகதம், அங்கம், கோசலம் ஆகிய தேசங்களைச் சுற்றி வந்தார்.

ஆன்மா என்பது மனமா? நினைவுகளா?

பிறக்கும் எல்லோருக்கும் இறப்பு உண்டு. மரணத்துக்குப் பின்னால் உடல் அழிந்துபோகிறது. உடலுக்குள் இருந்த ஆன்மா என்ன ஆகிறது? மறுபிறவி இருக்கிறதா? அழிவில்லாதது எனில் உடலைவிட்டுச் செல்லும் ஆன்மா எங்கிருக்கும்? வேறொரு உடலில் அதே ஆன்மா பிறக்கும் எனில் பிறக்கும் புது உயிருக்குத் தனக்குள் இருப்பது தன்னுடைய முற்பிறவியின் ஆன்மா என்பது தெரியுமா? ஆன்மா என்பது மனமா? நினைவுகளா? எல்லோருக்குள்ளும் இக்கேள்விகள் எழுகின்றன.

ஆர்ப்பரிக்கும் பெருங்கடலின் முன் அச்சத்துடன் அலைகளில் கால்களை நனைக்கும் குழந்தையின் நிலைதான் மரணத்துக்குப் பின் என்ன என்ற கேள்விக்கு விடைதேட நினைப்பவர்களின் நிலையும். புத்தர் இவ்விடத்தை விடையளிக்க மறுத்துக் கடப்பதின் மூலம், இயற்கையின் போக்கை அப் படியே ஏற்கும் பக்குவத்தை விதைக்கிறார்.

“பழுதடைந்து சிதைந்துபோன ஓட்டை வண்டிபோல உறுப்புகள் சேர்ந்துள்ள உடல்” என்று விமர்சித்துக்கொள்ளும் புத்தர் இறக்கும்வரை ஆரோக்கியமாகவே இருந்தார். நதியைக் கடக்க பரிசல்களையும் படகுகளையும் எதிர்நோக்கி சீடர்கள் காத்திருக்க, புத்தரோ நீந்திக் கடந்திருக்கிறார். இரவு உணவைத் தவிர்ப்பதன் மூலம் தன்னால் நோயின்றி இருக்க முடிகிறது என்ற புத்தருக்கு, சுந்தன் என்ற கருமான் கொடுத்த உணவு இறப்புக்குக் காரணமானது.

காளான் உணவை வயதான புத்தரின் உடல் ஏற்றுக் கொள்ளவில்லை. சீதப்போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமானது. தன்னுடைய மரணத்துக்கு சுந்தன் கொடுத்த உணவு தான் காரணம் என்ற பழிச் சொல் சுந்தனுக்கு வந்துவிடுமோ என்றெண்ணிய புத்தர், “எனக்கு ஞானம் கிடைக்க இருந்த அன்று பிற்பகல் சுஜாதை பாயசத்தை பிட்சையாகக் கொடுத்தார். இன்று இரவு பரிநிர்வாணம் அடைய இருக்கும் எனக்கு சுந்தன் காளான் உணவை பிட்சையாகக் கொடுத்திருக்கிறார். இரண்டு பிட்சையும் எனக்கு சரிசமமானவை என்பதை உலகத்துக்குச் சொல்வாயாக” என்று தனது சீடர் ஆனந்தனிடம் கூறினார்.

சால மரங்களுக்கு இடையே...

உடல் பலவீனத்தைப் பொருட்படுத்தாமல் குசினாராவை வந்தடைந்த புத்தர், சால் மரங்கள் அடர்ந்திருந்த வனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டினார். இரண்டு சால் மரங்களுக்கு இடையில் படுக்கையை விரிக்கச் சொன்னார். இறுதி நேரம் நெருங்கிவிட்டதை அறிந்த புத்தர், தனது மரணத்துக்குப் பிறகு, தான் எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை சீடர்களிடம் விளக்கினார். வாரணாசிக்கோ, சிராவஸ்திக்கோ, ராஜகிருகத்துக்கோ சென்றுவிடலாம் என்று ஆனந்தன் கண்ணீர் மல்க அழைத்தார். பிறக்கும் உயிர்கள் எல்லாம் இறந்தே ஆக வேண்டும் என்ற புத்தரை அங்கிருந்த இளம் துறவிகள் நெருங்கி உட்கார்ந்தார்கள்.

நள்ளிரவு கடந்து கொண்டிருந்தது. அன்றும் வைகாசி பௌர்ணமி. சால் மரங்களுக்கு இடையே நிலவொளி. “நான் உபதேசித்தவற்றில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். கேட்பதற்கான கடைசி தருணம் இதுவே” என்கிறார் புத்தர்.

அனைவரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தனர். “நீங்கள் அனைவருமே விழிப்படைந்தவர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்குள் ஐயம் இல்லை. கட்டுப்படுத்தப்பட்டவை உடைந்து போகும். உங்களுக்கானப் பாதையை சீரமைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, அவரும் மௌனத்தில் ஆழ்ந்தார். புத்தர் பேசிய கடைசி வார்த்தைகள் இதுவே. சால் மரங்களுக்கு இடையில் பிறந்த புத்தர், சால் மரங்களுக்கு இடையிலேயே தனது 80-வது வயதில் (கி.மு.483) பரிநிர்வாணம் அடைந்தார்.

நிர்வாணம் என்றால் ‘அணைதல்’ என்றொரு பொருளும் உண்டு.

‘ஒன்றின் அழிவுக்குப் பின் மற்றொன்றின் தோற்றம்’ என்ற புத்தர் தன்னுடைய மரணத்துக்குப் பிறகு என்னவாகத் தோன்றினாரோ?

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x