Last Updated : 24 Jun, 2018 10:45 AM

 

Published : 24 Jun 2018 10:45 AM
Last Updated : 24 Jun 2018 10:45 AM

படுங்டுப்பா: காற்றில் அலையுரும் நாடகக் குரல்

சமகாலச் சூழலில் நாடகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்குமான படிப்பினை நிகழ்வு

தனக்கென ஒரு தனித்துவ பண்பாட்டுத் தொன்மைகளோடு தன் அடையாளத்துக்குக் குரல் தரும் கலை நிலம் இந்திய வடகிழக்கு மாநிலங்கள். சுக்ராச்சார்யா ரஃபா சமகால நாடக வெளியில் இயங்கிய வடகிழக்கின் முக்கியமான நாடக ஆளுமை. ரஃபா பழங்குடி நிலத்தின் பாரம்பரிய இசைக்கருவியான ‘படுங்டுப்பா’வின் பெயரில் தனது நாடகக் குழுவைத் தொடங்கி, அந்த நிலத்தின் பூர்வீக சால்மரங்களின் அடியில் நிகழும் ஒரு தனித்துவமான சர்வதேச நாடக விழாவை தனது சொந்த ராம்பூர் கிராமத்தில் நடத்திக் காட்டிய முன்னோடி.

சால்மரங்களின் இலைகளில் பிறந்த குழந்தையாய் புத்தர் கிடத்தப்பட்டிருந்தார் என்று நம்பப்படும் பௌத்தத்துடன் சடங்கார்ந்த தொடர்புகொண்டவை சால்மரங்கள். சால்மரங்கள் பூத்துக்குலுங்கும் பருவகாலத்தில் அந்த இயற்கையை வணங்கும் உயிர்ப்பில் நாடக அரங்கேற்றம் நிகழும். உயர்ந்து நீண்டு எழுந்து வெளிறிய அரிசிப்பூக்கள் பூத்து நிற்கும் சால்மரங்களின் அடியில் கோரைப்புற்கள் வேய்ந்த பின்னரங்கோடு சாணி மெழுகிய நிலத்துடன் நாடக நிலம். மூங்கில் பிளந்து இருக்கைகளாய் மாறிய சால்மரவெளியில் பார்வையாளர் மாடங்கள்.

சில ஆயிரங்களில் பார்வையாளர்களை முழு நாளும் நாடகத்தில் ஆழ்த்தியிருப்பது சமகாலச் சூழலில் பெரும் சாதனை. கூட்டம்கூட்டமாய் ஆண்களும், பெண்களும் தங்கள் குழந்தைகளை அழைத்தபடி சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்து நாடகங்களுக்காய்க் குவிகிறார்கள். பார்வையாளர்களிடத்தில் உரையாடியதில் எந்த நிர்பந்தமுமின்றி தங்கள் நிலத்தின் பெருமிதமாக இந்த நாடக விழாவை உணர்கிறார்கள். இத்தனையாண்டு உழைப்பில் இந்தப் பண்பாட்டுப் பார்வையாளர்களை உருவாக்கியதே சுக்ராச்சார்யாவின் சாதனை. சமகாலச் சூழலில் நாடகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்குமான படிப்பினை நிகழ்வு.

இந்த வனக்குடிகளின் தியானத்தை தரிசிக்கக் கடந்த ஆண்டு எங்கள் மணல்மகுடி நாடகக் குழுவுடன் பயணித்தோம். சால்மரங்களின் வேர்நிலமேறிய ‘மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி’ நாடகம் எங்கள் நாடகப் பயணத்தில் பெருமிதத்திற்குரிய நிகழ்வு. குடிக்காகவும், தங்கள் எளிய பொருளியல் தேவைகளுக்காகவும் நிலத்தின் பூர்வீக சால்மரங்களை வெட்டி விற்று அழித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த மனநிலையைப் பயன்படுத்திய வியாபாரிகளால் பெருவாரியாக அழிக்கப்பட்ட நிலம், ரப்பர் தோட்டங்களாக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் தங்கள் நிலத்துக்கும் சூழியலுக்குமான உணர்வுபூர்வ உறவை இழந்ததே எல்லா சிக்கல்களுக்கும் காரணம் என உணரத் தொடங்கி இந்தப் ‘படுங்டுப்பா’ உருவாகியிருக்கிறது.

மாற்றம் என்பது வளர்ச்சிப்போக்கின் தவிர்க்க முடியாத கூறு. அது நிச்சியமாகப் பண்பாட்டை அழிக்கும் ஒன்றாக இருக்க முடியாது. மாறாக, பண்பாட்டின் மரபுத் தொடர்ச்சியை சமகால நோக்கில் மீள்கண்டுபிடிப்பு செய்வதாக இருக்க வேண்டும். ஆம், ரஃபா நிலத்தின் பண்பாடு சமகால நோக்கில் மீள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாய் உணர்கிறோம். இந்த நாடக விழாக்களின் வழி சால்மரங்களுக்கும் மக்களுக்குமான பாரம்பரிய உணர்வுத் தொடர்ச்சி ஆன்ம நிலையில் புதிய சமூக மதிப்பீடுகளை அடைந்துள்ளன.

சமகாலத்தில் பழங்குடி எனும் சொல் தவறாக ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட நிலையில், அதைக் கடுமையாக மறுத்து, பழங்குடிகள் என்போர் பண்பாட்டையும், கலை வெளியையும், அது சார்ந்த அழகுணர்ச்சியையும் கொண்ட மக்கள் கூட்டம் என்பதைப் பொதுத்தளம் உணர வேண்டும் என்பதற்காகவே நாடகங்களை ரஃபா மொழியில் ஆக்குகிறார்கள். மற்ற மொழி நாடகப் பனுவல்களை ரஃபா மொழியில் நாடகங்களாக்கி இந்தியாவின் புகழ்பெற்ற நாடக விழாக்களில் அரங்கேற்றுகிறார்கள்.

கலை வழியான சமூக மதிப்பீட்டு உருவாக்கம் என்பதன் சமகால உதாரணம் சுக்ராச்சார்யாவும், அவரது படுங்டுப்பா நாடகக் குழுவும். இவர்கள் மீட்டிருக்கும் சமூக மதிப்பீடுகள் என்பது சால்மரங்கள் நாடக விழாவை தங்கள் நிலத்தின் பெருமிதமாகக் கண்களில் உணர்த்தியபடி குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு சைக்கிளில் நாடக நிலம் நோக்கி விரையும் ஒவ்வொரு ரஃபா நிலத்தின் பார்வையாளர்களும் நமக்கு உணர்த்துகிறார்கள். நாடகச் செயற்பாட்டாளர்களாய் இருக்கும் அனைவருக்கும் பெரும் நம்பிக்கை விதைக்கும் குரலானது இந்த ரஃபா வனக்குடி நிலத்தின் நாடகக் குரல்.

ஜூன் 8 அன்று காலை துயரச் செய்தியுடன் விடிந்தது. சால்மரங்களின் காற்றில் அலைபாய்ந்த ரஃபா தொன்குடிகளின் இசைமொழி படுங்டுப்பாவின் குரலான தோழர் சுக்ராச்சார்யாவின் மரணச் செய்தி அது. தனது 42-வது வயதில் பெரும் நாடகக் கனவுகளோடு இயற்கையோடு கலந்திருக்கிறார். குறுகிய வாழ்காலத்தில் இந்திய நாடக வெளியில் சுக்ராச்சாரியா ஆற்றியிருப்பது அளப்பெரும் பணி.

இந்திய வடகிழக்கின் சமகால நாடகக் குரலாய் ஒலித்தவர், அரச மரியாதையோடு சால்மரங்களின் மூச்சொலியில் கரைந்துபோயிருக்கிறார் சுக்ராசார்யா ரஃபா. உங்கள் நாடக நிலத்தின் விதைகளோடு வந்துள்ளோம். சால்மர வேர்களுக்குள் உறங்கும் விதைகளின் குரலோடு என்றும் பேசிக்கொண்டிருக்கும் நாடக நிலம்!

- சு.பூபாலன், மணல்மகுடி நாடக நிலம்.

தொடர்புக்கு: manalmagudi.art@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x