புகலிடத்திலும் தொடரும் ஜாதி

புகலிடத்திலும் தொடரும் ஜாதி
Updated on
2 min read

உலகம் முழுவதும் உள்ள பிரதி​நி​திகளை 2003இல் சந்தித்த போப் இரண்டாம் ஜான் பால், கிறிஸ்துவ சமயத்​தினரின் சமூகப் பொறுப்புகள் குறித்துப் பேசினார். அப்போது தமிழ்​நாடு, புதுச்சேரி ஆகியவற்றின் ஆயர்களிடம் அவர் அறிவுறுத்​தியதன் சாரம் இது: ‘சாதிய உணர்வு கிறிஸ்​துவச் சமயத்தின் கொள்கைக்கு எதிரானது; ஆன்மிகத்​துக்கு முரணானது; திருச்​சபையின் நற்செய்திப் பணிக்குத் தடையானது. சமூகத்தின் பிற மக்களிட​மிருந்து தலித்துகள் ஒதுக்​கப்​படுவது நிறுத்​தப்பட வேண்டும்’. போப் கவனத்​துக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலைதான், அதற்குப் பிறகும் நீடிப்பதை ‘கிறிஸ்​தவத்தில் ஜாதி’ என்னும் இந்நூல் பதிவுசெய்​கிறது.

இதன் ஆசிரியர் நிவேதிதா லூயிஸ் கள ஆய்வுகள் வழிப்பட்ட தகவல்​களுடன் தனது கருத்துகளை முன்வைக்​கிறார். திண்டுக்கல், திருச்சி, பெரம்​பலூர், காஞ்சிபுரம், செங்கல்​பட்டு ஆகிய மாவட்​டங்​களில் உள்ள குறிப்​பிட்ட கிராமங்​களுக்குச் சென்று, மக்களை நேரடி​யாகச் சந்தித்துப் பெற்ற செய்திகளை அந்த மக்களின் மொழியிலேயே அவர் இதில் பதிவாக்கி​யுள்​ளார். ஒரே சமயத்தைப் பின்பற்றினாலும் பட்டியல் சாதியினரிடம் இடைநிலைச் சாதியினர் காட்டும் பாகுபாடுகள் பிடிவாதமாகத் தொடரும் அவலத்தை இந்த நூல் கூறுகிறது.

பட்டியல் சாதியினர் பங்குப் பேரவை உறுப்​பினர் ஆவதற்கு மறுக்​கப்​படுதல், அவர்கள் கோயில் வரி கட்ட மறுக்​கப்​படுதல், பட்டியல் சாதியினருக்​காகத் தனியாகத் தேர்த் திருவிழா நடத்த கட்டாயப்​படுத்​தப்​படுதல், இடைநிலைச் சாதியினர் நடத்தும் திருவிழாவில் தேர், பட்டியல் சாதியினர் வசிக்கும் தெருக்​களுக்கு வரத் தடை என்பது போன்ற சமய நடைமுறைகள் மட்டுமல்​லாமல், அடிப்​படைத் தேவைகளுக்​குக்​கூடத் தேவாலயக் கதவுகள் தங்களுக்கு அடைக்​கப்​படுவதைப் பட்டியல் சாதியினர் பலர் இந்த நூலில் பகிர்ந்​து​கொள்​கின்​றனர்.

இறந்த பட்டியல் சாதி கிறிஸ்​து​வர்​களின் சடலங்​களைத் தேவால​யத்​துக்குள் இறுதிப்​பூசைக்கு ஆதிக்கச் சாதியினர் அனுமதிப்பது இல்லை; பட்டியல் இனத்தவருக்குப் பொதுக் கல்லறையும் மறுக்​கப்​படு​கிறது. பெருங்​கொ​திப்பைப் பல்லாண்டுக் காலமாக அனுபவித்​தா​லும், பேதங்கள் அன்றாட நிகழ்​வாகி, உணர்வு மரத்துப்போன தொனியில் பாதிக்​கப்​பட்டோர் சிலர் பேசுவது, வாசகர்​களுக்குப் பாரத்தை ஏற்றுவதாக உள்ளது. ஊரைவிட்டே வெளியேறி​விட்ட பட்டியல் சாதியினப் பெரியவர் ஒருவர், “முன்​பெல்லாம் எங்க மேல ஏதும் தப்பு சொன்னாங்​கன்னா காலில் விழுவோம். பிரச்சினை முடிஞ்​சிரும்” எனப் பல ஆண்டு​களுக்கு முந்தைய நிலையைப் பகிர்ந்​து​கொள்வது ஓர் உதாரணம்.

பட்டியல் சாதியினத்தவர் கிறிஸ்​துவச் சமயத்​துக்கு மாறிய பின்னரும், கோயில் திருவிழாக்​களில் மேளம் அடிக்கச் சாதி இந்துக்​களால் வற்புறுத்​தப்​படு​வதும் சில ஊர்களில் நடக்கிறது. இதற்கு அவர்கள் மறுத்​தாலும் உடன்பட்​டாலும் ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கு அது கசப்பான அனுபவமே. புகலிடம் தேடிப் போன இடத்திலும் வேறுபாடு, பழைய இடத்திலும் மாறாத வேறுபாடு என இருதலைக் கொள்ளி எறும்​பு​களாகப் பட்டியல் சாதியின மக்கள் படும் துயரத்​துக்கு இந்நூல் ஓர் ஆவணமாக உள்ளது.

தலித் செயல்​பாட்​டாளர்களான மேரி ஜான், சகோதரி அல்போன்சா, தந்தை மாற்கு, திண்டுக்கல் மனோகரன், தந்தை எல்.யேசு மரியான் ஆகியோரின் நேர்காணல்​களின்வழி தீர்வு​களும் முன்வைக்​கப்​படு​கின்றன. மிகக் கனமான பேசுபொருளை ஆய்வுக் கட்டுரைக்கான அயர்ச்​சி​யூட்டும் வடிவத்தில் அல்லாமல், ஒரு பயணக் கட்டுரையின் இலகுவான நடையில் ஆசிரியர் தந்திருப்பது வாசகர்​களோடு எளிதில் நெருக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

கிறிஸ்தவத்தில் ஜாதி
(கள ஆய்வுகளும் நேர்காணல்களும்)
நிவேதிதா லூயிஸ்
ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ரூ.750
தொடர்புக்கு: 75500 98666

- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in