

இலங்கை முதல் அமெரிக்கா வரை 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நூலாசிரியர் பயணம் செய்திருக்கிறார். ‘காமதேனு’ மின்னிதழில், ‘சிறகை விரி... உலகை அறி!’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டாம் பாகமாக இந்நூல் வெளியாகியுள்ளது.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வாசகர்களை அந்த நாட்டிற்கே அழைத்துச் செல்லும். இதுவரை பயணம் செய்வதில் ஆர்வம் கொள்ளாதவர் மனதிலும் ஆசையைத் துளிர்க்க வைக்கும். ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்கள், அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் உள்ளிட்டவை குறித்து ஒளிப்படங்களுடன் கூடிய பயண வழிகாட்டி இப்புத்தகம்.
சிறகை விரி... உலகை அறி!
சூ.ம.ஜெயசீலன்
‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம்
விலை: ரூ.275
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74013 29402
புதிய வாசிப்பில் குறள்: திருக்குறளில் இந்தக் காலத்துக்கும் பொருந்தும் சிந்தனைகள் இருக்கின்றன. இந்தக் காலத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள வரிகளும் இருக்கின்றன. அவற்றை ஒதுக்காமல், அந்தக் காலத்தைப் பற்றிய புரிதலோடு படிப்பது சிறந்தது. விவசாயச் சமுதாயம் பிறந்து, வணிக சமுதாயம் உருவான வளர்நிலைக் காலக்கட்டமே குறள் காட்டும் காலம். மக்களிடம் பிரிவுகளும் சமயங்களும் இருந்தன. கவிஞர்களின் படைப்புகளில் அந்தச் சமூகத்தைப் பற்றிய நிறை, குறைகள் காணப்படுகின்றன. இதை இந்நூலில் ஆராய்ந்துள்ளார் பேராசிரியர் அருணன். - ஸ்நேகா
திருக்குறள் அருணன் உரை
பொருட்பால், காமத்துப்பால்வ
சந்தம் வெளியீட்டகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 93848 13030
திண்ணை | நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது: பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீராவின் ‘ஆராச்சார்’ நாவலை, அதே தலைப்பில் மொழிபெயர்த்த மோ.செந்தில்குமார், நாகாலாந்து எழுத்தாளர்களின் படைப்புகளை, ‘கதவுகள் திறக்கப்படும் போதினிலே’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்த ச.வின்சென்ட் ஆகிய இருவருக்கும் முதல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இப்பரிசு ரூ.2 லட்சம் ரொக்கமும் நினைவுப் பரிசும் உள்ளடக்கியது. கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோவின் நாவலை, ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்த அமரந்த்தா, சிங்கராயர் ஆகிய இருவருக்கும் ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் நாவலை, ‘காப்கா கடற்கரையில்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ள கார்த்திகைப் பாண்டியனுக்கும் இரண்டாம் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இப்பரிசு ரூ.50,000 ரொக்கமும் நினைவுப் பரிசும் உள்ளடக்கியது. அ.ஜாகிர்ஹுசைன், சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர், பி.ஆர்.மகாதேவன், கமலக்கண்ணன் ஆகியோர் மூன்றாம் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தலா ரூ.25,000 ரொக்கமும் நினைவுப் பரிசும் அளிக்கப்படும்.
இதழாசிரியர் குடும்பத்திற்கு நிதி! - ‘தமிழ் இயக்கம்’, ‘உலக முதன் மொழி’ போன்ற இதழ்களின் பொறுப்பாசிரியர் மறைந்த தங்கவயல் கி.வெற்றிச்செல்வன். தமிழ்ப் புலமைமிக்க இவர் தனித் தமிழ் இயக்கம், சமூக நீதி இயக்கம், ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் சார்ந்து செயல்பட்டுவந்தார். தங்க வயலின் போராட்ட வரலாற்றைப் பதிவுசெய்வதில் ஆர்வம் கொண்ட வெற்றிச்செல்வன், கடந்த ஆண்டு காலமானார்.
தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுசேர்ந்து திரட்டிய ஒரு லட்சத்துப் பன்னிரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கான வரைவோலை வெற்றிச்செல்வனின் சகோதரி கி.சிவகாமியிடம் சமீபத்தில் அளிக்கப்பட்டது. இந்த நிதியைத் திரட்டுவதில் வைகறைவாணன், மு.அரசெழிலன், பேராசிரியர் திருமாவளவன், அ.மதிவாணன், ச.மா.பன்னீர்செல்வம், பஷீர், பழ.குணசேகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.