

கவிஞர் ஸ்ரீநேசனின் புதிய முயற்சியாக வெளியாகியுள்ளது ‘குறுமுப்பத்தாறு’. சங்கக் கவிதைகளைப் போல மூன்று முதல் பத்து அடி வரையிலான பெரும்பாலான கவிதைகள் வடிவமைதியைப் பெற்றுள்ளன.
‘பேச்சு’ என்ற தலைப்பில் இடம்பெறும் கவிதை, ‘விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி...’ எனத் தொடங்கும் நற்றிணையின் 172வது பாடலை நினைவூட்டுகிறது. சங்கக் கவிதைகளில் உள்ளுறையிலும், இறைச்சியிலும் உவமை வழி இயற்கை, நிலம், விலங்கு, பறவை போன்றவை எவ்வாறு வெளிப்படுகின்றனவோ அவ்வாறே மலை, பறவை, மரம், செடி, கொடி போன்றவை குறியீட்டுத் தன்மையாக விரவி வந்துள்ளதைக் காண முடிகிறது.
எளிய நிகழ்வுகள், எளிய சொற்களின் வழி வெளிப்படும் யதார்த்தங்கள், வாசகனின் உணர்வுகளில் பிரம்மாண்டத்தை நிகழ்த்தும் ஸ்ரீநேசனின் முந்தைய கவிதைகளுக்குச் சற்றும் சளைக்காதவை என்பதற்கு எடுத்துக்காட்டாக, ‘யார் பேச்சு யாருக்குப் புரியும் என்று யாருக்குத் தெரியும்/யார் நண்பர் எதுவரை நம்புவார் என்று யாருக்குத் தெரியும்/தன்னைச் சுவைத்த அந்த நாவின் ஸ்பரிசத்தில்கூட/தான் மாங்கனி என்றந்த மாங்கனி உணரவே இல்லை/தாவரவியல் பொறியாளன்/ஒரு போதும் ஒரு மரம்/வேர்பிடித்துக் கிளைபரப்பும் வடிவமைப்பில்/தலையிட முடிவதேயில்லை/இங்கு மட்டும்தான் யாரேனும் பார்க்கவே/யாருக்கேனும் காட்டவே/எதையும் செய்ய வேண்டி இருக்கிறது’.
இணையர் பற்றியான கவிதைகளில், தம் எண்ணங்களுடனான அவர்களின் மறைமுகமான போராட்டம், அமைதியின்போது துல்லியமாய்க் கேட்கிற இல்லாளின் இதய ஓசை, கால மயக்கத்தின் வெளியிலும் மாறாமல் தம் பிணைந்த பந்தம் தொடரப் பிரார்த்தனை, முதுமையிலும் ஊடல் மொழி உணர்த்தும் கொலுசொலி என மாறுபட்ட தன்மையில் உணர்த்தப்படும் மிக நுண்ணியக் கவிதை மொழியைக் கையாண்டுள்ளார்.
கட்டற்றுப் பறந்து திரியும் பறவைகளின் வாழ்வு மனித வாழ்வுடன் குறியீடாக்கப்படுவதை, அன்பின் விகாசத்தில் தம் இணையுடன் இணங்கிக் களித்தல், இறக்கும் தறுவாயில் “என் இறகெல்லாம் பொருந்திப் பாறை பறந்து எழ” என வாழ்த்தித் தம் இன்னுயிர் துறந்து வள்ளலாக முயற்சித்தல்; அருகில் அமர யோசித்து நெருங்கியவரைக் காயப்படுத்திப் பறந்து செல்லும் மூர்க்கனாய் மாறுதல்; அமைதியைக் குலைக்கும் நாய்கள் குரைக்கும் சத்தத்திற்கு அமைதிகாத்து, வைகறையில் சமாதானப்படுத்த இசைத்தல் எனப் பறவைகளின் இயல்பு பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன.
இவ்வாறாக, இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளுள் சில மறைபொருளிலும், சில நேர்பொருளிலுமாக முப்பத்தாறு கவிதைகளிலும் வெளிப்படுகின்றன. - ரா.வி.ஜீவநாத்
குறுமுப்பத்தாறு (கவிதைகள்)
ஸ்ரீநேசன்
நாதன் பதிப்பகம்
விலை:ரூ60
தொடர்புக்கு: 98840 60274
அஞ்சலகங்கள் பற்றிய அரிய தகவல்கள்: ஒரு காலக்கட்டம் வரை அஞ்சலகங்களே தொலைதூரப் பரிமாற்றத்துக்கான ஊடகங்களாக இருந்தன. தொலைத்தொடர்புக் கருவிகள் பெருகிவிட்ட காலத்திலும், அஞ்சலகம் உணர்வுபூர்வமாக நம்முடன் இணைந்துள்ளது. இந்த அஞ்சலகம் குறித்த அரிய தகவல்களைப் பத்திரிகையாளர் அருண்குமார் நரசிம்மன் தேடிப்பிடித்து இந்நூலில் தொகுத்துள்ளார். சர்வதேச அளவில் அஞ்சலகங்கள் பற்றிய சுவாரசியமான செய்திகளின் களஞ்சியமாக இந்த நூல் உள்ளது. பிஜி தீவுக்கு அருகில், வனாட்டு என்கிற ஒரு நாட்டில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள அஞ்சலகம் பற்றிய தகவல் விசித்திரமாக உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள உலகின் உயரமான அஞ்சலகம் குறித்தும் அருண்குமார் கவனத்துடன் பதிவுசெய்துள்ளார். ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் கோவா அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல்தலை குறித்த செய்தி அரியதாகும். இம்மாதிரியான அரிய தகவல்களை எளிமையாகவும் சுவாரசியம் குன்றாமலும் நூலாசிரியர் தொகுத்துள்ளார். - விபின்
‘தல’ இது தபால் தல
அருண்குமார் நரசிம்மன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.65
தொடர்புக்கு: 87780 73949