Last Updated : 10 Jun, 2018 09:33 AM

 

Published : 10 Jun 2018 09:33 AM
Last Updated : 10 Jun 2018 09:33 AM

தருமு சிவராம்: ஆளுமை விநோதங்கள்

சி

வராமுடைய முதல் மதுரை வருகையின்போது, கேரளாவில் நடந்த கவிதைப் பட்டறையில் கலந்துகொண்ட ஒரு வேற்று மொழிப் பெண் கவிஞர் மீது அவர் கொண்டுவிட்டிருந்த பெரும் காதலில் முதல் சில நாட்கள் ததும்பிக்கொண்டிருந்தார். அவர் வாழ்நாளில் அபூர்வமாகத்தான் பெண்களைப் பார்க்கவும், அவர்களோடு பழகவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி அமையும்போது அவர்கள்மீது அவர் மனம் வெகு சுலபமாகக் காதல் கொண்டுவிடுகிறது. தமிழ்நாட்டின் பாலியல் வறட்சிச் சூழலில் இது தவிர்க்க முடியாத வாதை. ஒருமுறை, சென்னையில் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மீதான காதல் வேட்கையில் தற்கொலைக்குக்கூட முயன்றிருக்கிறார். இதை ஒரு கவிதையாகவும் எழுதியிருக் கிறார்.

பாலியல் வறட்சியின் கடுமையைத் தணிக்கக் காமப் புத்தகங்கள் மீது நாட்டம் கொள்வது இயல்பான ஒரு மாற்றாக ஆகிவிடுகிறது. நண்பர் ஒருவரிடம் ஒரு அருமையான ஆங்கிலக் காமப் புத்தகம் இருப்பதைக் கேள்விப்பட்ட புதுமைப்பித்தன், அவரைச் சந்தித்து, அப்புத்தகத்தை வாசித்துவிட்டுத் தருவதாகக் கேட்டிருக்கிறார். அந்த நண்பரும் ஓரிரு நாட்களில் திருப்பிக் கொடுத்துவிடும்படி சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார். தன் அறைக்குப் போனதும் அதை வாசித்த புதுமைப்பித்தன், அப்புத்தகத்தைப் பிரிய மனமின்றி, இரவோடு இரவாக அப்புத்தகத்தை ஒரு நோட்டில் பிரதி செய்திருக்கிறார். இத்தகவல், 1949-ல் சுந்தர ராமசாமி கொண்டுவந்த ‘புதுமைப்பித்தன் மலரில்’ பதிவாகியிருக்கிறது. இந்த தாகம் இயல்பானதுதான். இந்த வேட்கை சிவராமிடமும் இருந்ததைத் தற்செயலாக அறிய நேர்ந்தது.

இரண்டாவது முறை மதுரையில் ஆறு மாதங்களுக்கு மேல் (1976-77) தங்கியிருந்தபோது, கடைசி சில மாதங்கள் மாணவர் தனிப்பயிற்சிக் கல்லூரி (STC) விடுதியில் தனி அறை எடுத்துத் தங்கினார். நான் கூடுமானவரை, மாலை நேரங்களில் அங்கு சென்று அவரைச் சந்திப்பது வழக்கம். அப்படி ஒருநாள் சென்றிருந்தபோது அவர் குளித்துக்கொண்டிருந்தார். நான் கட்டிலில் அமர்ந்து, வழக்கம்போல, என் மடியில் வைத்துக்கொள்வதற்காகத் தலையணையை எடுத்தபோது, அதனடியில் ஒரு காம இதழ் இருந்தது. ஆர்வமாக அதைப் புரட்டத் தொடங்கினேன். சில பக்கங்களின் இடையிடையே, கோடிழுத்து அதன் மேல் கீழ் வெற்றிடங்களில் அவர் அதிலிருந்த கதையை மேலும் வளர்த்திருந்தார். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே குளியலறையிலிருந்து வெளியே வந்தவர், ‘என்ன இதெல்லாம்’ என்றார். ‘இங்க கிடந்துச்சு. அதான் பாத்துட்டிருக்கேன்’ என்றேன். ‘இந்த பக்கத்து ரூம் பசங்க இப்படி எதையாச்சும் தூக்கி இங்க போட்டுடறாங்க’ என்றபடி அதை என்னிடமிருந்து பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே எறிந்தார்.

தருமு சிவராம், தன்னுள்ளிருந்த ஓவியக் கலைஞனுக்கு உரிய ஊட்டமளித்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய கோடுகள் புனைவு யதார்த்தமும் மாந்திரீகத் தன்மையும் இணைந்து உறவாடியவை. பொதுவாக, தான் சம்பந்தப்பட்ட சிற்றிதழ்களுக்கும் புத்தகங்களுக்கும் மட்டுமே தன் ஓவியக் கலைத் திறனைப் பயன்படுத்தினார். ‘மணி பதிப்பகம்’ வெளியிட்ட அவருடைய ‘கைப்பிடியளவு கடல்’ கவிதைத் தொகுப்புக்கு அவரே முகப்போவியம் வரைந்தார். அவர்கள் வெளியிட்ட வெங்கட் சாமிநாதனின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ திரைக்கதை நூலுக்கு முகப்போவியம் வரைந்து முன்னுரையும் எழுதினார்.

பின்னாளில் ராஜமார்த்தாண்டனோடு நெருக்கமும் அன்பும் கொண்டிருந்தபோது, ராஜமார்த்தாண்டன் தன் நண்பர் ராஜகோபாலோடு இணைந்து நடத்திய ‘கொல்லிப்பாவை’ சிற்றிதழுக்குப் பெயர் வைத்து, கொல்லிப்பாவையின் படிமத்தை வரைந்து கொடுத்து, இதழில் கணிசமான பங்களிப்பும் செய்தார். தன் நவீன ஓவியக் கலைத் திறனை சிற்றிதழ் இயக்கச் செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தினார். எப்போதாவது, நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றால், சமயங்களில் அவர்களின் உருவச் சித்திரங்களை வரைவதுண்டு. குமாரசாமியின் அச்சகத்தில் தங்கியிருந்தபோது, அவர் கேட்டுக்கொண்டதற்காக, கு.ப.ரா.வின் உருவப்படத்தை வரைந்து கொடுத்தார். அதை வரையும்போது நான் அருகில் இருந்தேன். பேனா மையினால் வரையப்பட்ட கோட்டுச் சித்திரம். மிக ஒயிலாக வரையப்பட்டிருந்த சித்திரம். நளினமும் மிடுக்கும் இசைந்திருந்த சித்திரம். முடித்துவிட்டுக் காண்பித்தபோது, ‘எப்படி, நம்ம ஊரு கு.ப.ரா.வை ஒரு ஈரோப்பியன் ரைட்டர் ஆக்கியிருக்கேன் பாத்தியா?’ என்றபடி சிரித்தார்.

அவர் மதுரையில் இருப்பதற்கான செலவை ‘மணி பதிப்பகம்’ கவனித்துக்கொண்டபோதிலும், மதுரை அவருக்கு அலுப்பூட்டத் தொடங்கியது. ஒரு நல்ல நூலகம்கூட இல்லாத மதுரை, ஒரு எழுத்தாளன் வாழத் தகுதியில்லாத பாலைவனம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. மீண்டும் சென்னை கிளம்பினார்.

1977-ம் ஆண்டில் ஒருநாள், நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி வீட்டு மாடி அறையில் சு.ரா.வோடு பேசிக்கொண்டிருந்தபோது, மாடிக்கு வந்த சு.ரா.வின் மனைவி கமலா அம்மா, ‘மோகன் உங்களுக்கு ஃபோன்’ என்றார். நான் எழுந்துகொண்டு திகைப்புடன் அவரைப் பார்த்தேன். ‘சிவராம்னு நினைக்கிறேன்’ என்று முறுவலுடன் சொன்னார். நான் கீழே இறங்கிப்போய் ஃபோனை எடுத்தேன். சிவராம்தான். ‘எங்கிருந்து பேசுறீங்க?’ என்று கேட்டேன். ‘நீ தங்கியிருக்கும் வீட்டுக்கு எதுத்தமாதிரி இருக்கும் பலசரக்குக் கடையிலிருந்து’ என்று உரக்கச் சிரித்தார். ‘கிளம்பி வா. இங்கயே வெயிட் பண்றேன்’ என்றார். மாடிக்குப் போனதும் ராமசாமி, யார் என்றார். சிவராமுதான் என்றேன் சிரித்தபடியே. எப்படித் தெரிந்தது என்று கமலா அம்மாவிடம் கேட்டேன். ‘இங்க ரொம்ப நாள் தங்கியிருந்தவர்தானே. குரல் தெரியாதா?’ என்றார்.

வெளியில் சென்று, சிவராமுவைப் பார்த்தேன். ‘எப்படி புடிச்சேன் பாத்தியா’ என்பதுபோலச் சிரித்தார். அவர் அச்சமயத்தில், நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள, ராஜமார்த்தாண்டனின் ஊரான இடையன்விளையில் அவரோடு சில நாட்களாகத் தங்கியிருந்திருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டே நடந்து ஒரு ஹோட்டல் சென்று, பன் பட்டர் ஜாம், டீ சாப்பிட்டோம். முதலில் கோபத்துடன் பேச ஆரம்பித்தார். பணக்கார எழுத்தாளன்னா பார்ப்ப, பேசுவ, தங்குவ என்றெல்லாம் பொரிந்து தள்ளினார். நான் ஒரு வேலை நிமித்தமாக அங்கு வந்திருப்பதையும், அப்போது அவர் அங்கிருப்பதே எனக்குத் தெரியாதென்றும் சமாளித்தேன். சகஜம் திரும்பியது. சு.ரா. வீட்டு கேட் வரை வந்து பிரிந்தார்.

பின்னர், வெங்கட் சாமிநாதன், தருமு சிவராம், சுந்தர ராமசாமி மூவருக்குமிடையே நடந்த ஒரு தொடர் சர்ச்சையில் நானும் எதிர்வினை ஆற்றியதில் அவருடனான முதல் விரிசலும் விலகலும் ஏற்பட்டது.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x