Published : 16 Jun 2018 09:56 AM
Last Updated : 16 Jun 2018 09:56 AM

நல்வரவு: அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

பேரா.கே.ராஜூ

விலை: ரூ.120

மதுரை திருமாறன் வெளியீட்டகம், சென்னை - 600017

தொடர்புக்கு: 7010984247

பணி ஓய்வுக்குப் பின்னும் தொடர்ந்து அறிவியல் குறுங்கட்டுரைகளை எழுதிவரும் இயற்பியல் பேராசிரியரின் ஆறாவது கட்டுரை நூல் இது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ எனும் கூற்றிற்கேற்ப, இதிலுள்ள 52 கட்டுரைகளும் இரண்டு மூன்று பக்கங்களுக்குள் சுருக்கமாக இருக்கின்றன. கட்டுரைகளுக்குப் பொருத்தமான படங்களையும் இணைத்திருப்பது வாசிப்பு வேகத்தை மேலும் கூட்டுகிறது. ‘நானோ தொழில்நுட்பம்’, ‘ஈ-டீசல்’ உள்ளிட்ட பல கட்டுரைகள் நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் பொக்கிஷங்களாக உள்ளன.

பேரா. ந.சுப்பு ரெட்டியாரின் பன்முகம்

இரா.காமராசு

விலை: ரூ.120

சாகித்திய அகாதெமி, சென்னை - 600018

தொடர்புக்கு: 044-24354815

1916-ல் லால்குடி வட்டத்திலுள்ள பெரகம்பியில் பிறந்து, பலரும் பாராட்டத்தக்க அரிய பல தமிழ்ப் பணிகள் செய்து, மறைந்த பேராசிரியர் சுப்பு ரெட்டியாரின் நூற்றாண்டு விழாவில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. அவரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும் 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள், கல்வி பற்றி அவர் கொண்டிருந்த ஆழமான பிடிப்பினைக் கட்டுரைகள் வழி உணர முடிகிறது. பேராசிரியரின் புதல்வர் பின்னுரையாக எழுதியிருக்கும் தந்தையின் வாழ்க்கைக் குறிப்பு பல தகவல்களைப் பகிர்கின்றன. பேராசிரியர் எழுதிய 135 நூல்களின் பட்டியலையும் இணைத்திருக்கலாம்.

தொகுப்பு: மு.முருகேஷ்

முத்தன் பள்ளம்

அண்டனூர் சுரா

விலை: ரூ.150

மேன்மை வெளியீடு, சென்னை-600014

தொடர்புக்கு: 044-28472058

புதுக்கோட்டையின் காந்தி சிலை முக்கத்திலிருந்து தொடங்கும் இந்நாவல், நம்மை கொண்டுபோய் நிறுத்துமிடம் முத்தன் பள்ளம் கிராமம். இந்த கிராமத்துக்குள் நம் கை பிடித்து அழைத்துச்செல்லும் வழிகாட்டியாக போக்கிமான். இது வேறு யாருமல்ல… நூலாசிரியரே. இந்த 21-ம் நூற்றாண்டிலும் இப்படியொரு கிராமமா என்றும் நம்மால் வியக்காமலிருக்க முடியவில்லை. புதுக்கோட்டையின் வரலாற்றுப் பின்புலத்தோடு எழுதப்பட்டுள்ள இந்நாவலில், சமகால சமூகத்தின் உள்முகமும் சாதியம் தோய்ந்த அரசியல் முழக்கமும் சேர்ந்து வெளிப்படுவது கூடுதல் அர்த்தத்தைத் தருவதாக உள்ளது.

சாத்தான்கள் அபகரித்த பூமி

அருணாசுந்தரராசன்

விலை:ரூ.125

வளரி எழுத்துக் கூடம், மானாமதுரை - 630606

தொடர்புக்கு: 7871548146

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞரின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. ‘மக்களுக்கு எதிரான சிறிய செயல்கூட, என்னை ரெளத்திரம் கொள்ளச் செய்கிறது. அதன் வெளிப்பாடாகவே எனது எழுத்துகள் கவிதை வடிவம் பெறுகின்றன’ என்று கவிஞர் முன்மொழிந்திருப்பதை வழிமொழியும் கவிதைகள். சமூகப் போராட்டங்களைக் கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டிருந்தாலும், பிரச்சாரத் தொனியின்றி இருப்பது கவிஞரின் தனித்துவம். ‘பிள்ளைக்கறி கேட்டு / வாசல்தோறும் காத்திருக்கும் / நவீன நீலகண்டர்கள்’ எனும் வரிகள் கலங்க வைக்கின்றன.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x