

ஒரு நூற்றாண்டைக் கடந்தும் செழுமையோடு தொடரும் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளாக விளங்கிய மகாகவி பாரதியார், வ.வே.சுப்பிரமணியம், அ.மாதவையா, புதுமைப்பித்தன் ஆகியோர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள்தான். இந்த மரபின் தொடர்ச்சியாக இன்றைக்கும் தமிழ்ச் சிறுகதையில் தனித்துவத்துடன் எழுதிவரும் நெல்லைச் சீமையைச் சேர்ந்த 73 சிறுகதையாளர்களின் கதைகள் ‘நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கதைகள்’ எனும் தலைப்பில் பெருந்தொகுப்பாக வெளிவந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்திவரும் பொருநை விழா, பொருநை – நெல்லை புத்தகத் திருவிழா ஆகிய நிகழ்வுகளை ஒட்டி, எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தலைமையிலான குழு தொகுத்திருக்கும் நூல் இது. நெல்லை மாவட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு என்றாலும், ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ச் சிறுகதையின் போக்கினைப் பிரதிபலிப்பதாக உள்ளது இந்தத் தொகுப்பு.
தமிழ்ச் சிறுகதைக்கு வலுவான தளம் அமைத்த ‘மணிக்கொடி’ இதழ் தொடங்கி, தனது காத்திரமான கதைகளால் பங்களிப்பு செய்துவரும் நெல்லை மாவட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொத்தமாகப் படிக்கையில், பிரமிப்பாகவும் தமிழ்ச் சிறுகதைக்கு வளம்சேர்க்கும் இவ்வளவு எழுத்தாளர்கள் நெல்லைச் சீமையில் இருக்கிறார்களா என்கிற வியப்பும் மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தமிழின் முதல் சிறுகதையாகச் சொல்லப்படும் வ.வே.சுப்பிரமணியத்தின் ‘குளத்தங்கரை அரசமரம்’ 1915இல் (‘விவேக போதினி’) எழுதப்பட்டு, 1917இல் நூலாக வெளியானது. அந்தக் கதை எழுதப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, 1913இல் ‘ஆறிலொரு பங்கு’ எனும் கதையைப் பாரதியார் எழுதியுள்ளார். சிறுகதை இலக்கணத்திற்குப் பொருந்தி வராத பாரதியாரின் கதையைத் தமிழின் முதல் சிறுகதையாகப் பலரும் ஏற்காத நிலையில், இந்த நூலின் முதல் கதையாக ‘ஆறிலொரு பங்கு’ம், இரண்டாவதாக அ.மாதவையாவின் ‘நரி பரியான அற்புதம்’ என்கிற கதையும் சேர்க்கப்பட்டிருப்பதும் கவனங்கொள்ளத்தக்கது.
நெல்லை மண்ணின் தொடக்கக் கால எழுத்தாளர்களோடு, தமிழகம் அறிந்த எழுத்தாளர்களாக விரிந்த தளத்தில் அறியப்பட்ட கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், கி.ராஜநாராயணன், தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சிவசங்கரன் ஆகியோரை முதல் தலைமுறையினராகவும், தற்போதும் எழுதிவரும் பூமணி, வண்ணதாசன், கலாப்ரியா, சோ.தர்மன், மாலன், ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரை இரண்டாம் தலைமுறையாகவும், மாரி செல்வராஜ், ஜா.தீபா, வேலாயுத முத்துக்குமார் ஆகியோரை மூன்றாம் தலைமுறையாகவும் கொண்டால், மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது.
73 எழுத்தாளர்கள் எழுதிய கதைகளின் தொகுப்பு என்பதால், ஒவ்வொரு கதையும் வாழ்வின் ஏதேனும் ஒரு நிகழ்வினைத் தனக்கான தனித்துவத்துடன் சொல்வதில் வெற்றியடைந்துள்ளன. ஒவ்வொரு எழுத்தாளரும் அவரவருக்கான தனியான மொழியில் கதைகளை எழுதியுள்ள விதமும், கதையைச் சொல்லிச் செல்வதில் உள்ள நேர்த்தியும் வாசகரைக் கதைகளுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து நிறுத்துகின்றன.
ஆண்டிப்பகடையின் மகளான பொம்மியை முன்வைத்து டி.செல்வராஜ் எழுதியுள்ள ‘கற்புநிலை’ கதையின் முடிவில், பத்ரகாளியைப் போல் வெகுண்டெழுந்த பொம்மி, “என்னையெத் தேவடியாளிண்ணாடா நெனச்சுக்கிட்டே?” என்று ஆங்காரத்துடன் கேட்பதும், வண்ணதாசனின் ‘நிலை’ கதையில் வரும் கோமு, எதுவும் பேசாமல் தேர் நிலையத்துக்குள் வருவதையே பார்த்துக்கொண்டிருப்பதும், ஆர்.என்.ஜோடி குரூஸின் ‘அக்கா’ கதையில் வரும் சுமதியும் வேறுவேறு உணர்வுகளை வாசகருக்குள் கடத்துவதோடு, பெண் மனவுலகைக் கண்டடைய உதவும் கனிவான கதைகளாக உள்ளன.
கலாப்ரியாவின் ‘சித்திர புத்தன்’, ஏக்நாத்தின் ‘செவலைகள் தொலைந்த இடம்’, ஹரன் பிரசன்னாவின் ‘வசியம்’, கார்த்திக் புகழேந்தியின் ‘உடுப்பு’ உள்ளிட்ட பல கதைகள், தமிழ்ச் சிறுகதையின் பரந்த வெளியைக் குறுக்குவெட்டுப் பார்வையில் பதிவுசெய்யும் கதைகள் என்று சொல்லலாம்.
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் 73 எழுத்தாளர்களில் கமலா விருத்தாசலம், காஞ்சனா ஜெயதிலகர், தமயந்தி, ஆண்டாள் பிரியதர்ஷினி, அகிலா, ஜா.தீபா, முத்துலட்சுமி என ஏழு பெண் எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இவ்வளவு எழுத்தாளர்கள் நிறைந்துள்ள நெல்லைச் சீமையில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை என்பது ஒற்றையிலக்க எண்ணிக்கையில் இருப்பது வரும் காலத்திலாவது அதிகரிக்க வேண்டும். இதிலும், அறியப்பட்ட பெண் எழுத்தாளர்களான பிரேமா அருணாசலம், இந்திர பவானி, புதிய மாதவி ஆகியோரின் கதைகளை சேர்த்திருந்தால் முழுமையான தொகுப்பாக இருந்திருக்கும்.
ஒவ்வொரு எழுத்தாளரின் சிறந்த கதைகளாகவே அனைத்துக் கதைகளும் உள்ளன. இக்கதைகளைத் தொகுத்துத் தந்திருக்கும் எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், கிருஷி, செளந்தர மகாதேவன், மருத்துவர் வேங்கடப்பன், பாலமுருகன், ராஜூ, பாஞ்சாலி ஆகியோரையும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நெல்லை மாவட்ட அரசு நிர்வாகத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இப்படியாக மாவட்டப் படைப்பாளர்களின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என மலரும் படைப்பு நினைவுகளாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும் நாள்களில் வெளிவருவதற்கான முன்வரவாக வெளிவந்துள்ளது இத்தொகுப்பு.
நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுச் சிறுகதைகள்
நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியீடு
விலை: ரூ.300
தொடர்புக்கு: 99521 44361
- தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in