

அறுநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சில புதினங்கள், நாடகங்கள் என எழுதியவர் எழுத்தாளர் ஆர்.சூடாமணி. ‘மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ?’ என்கிற பாரதியின் பரிவை சூடாமணியின் எழுத்தில் நாம் காண முடியும். தீவிரப் படைப்பாளிகள் பலரைப் போல, சூடாமணியின் படைப்புகளையும் பல்வேறு கோணங்களில் வகைப்படுத்தலாம். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளின் சிக்கல்களையும் தேவையையும் அவரது பல சிறுகதைகள் பேசுகின்றன.
அவை ‘பறவைகள் நினைப்பதை யார் அறிவார்?’ என்கிற சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. முதுமையின் விளைவாகத் தன் பிள்ளைகளையே மறந்துபோன கட்டுமானப் பொறியாளர், இளம்பிள்ளைவாதத்தால் நடக்க முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இளைஞன், மனநலச் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பும் பெண், பார்வைத் திறனற்றவர் உள்படப் பல வகையான மனிதர்களின் ஏக்கங்கள் இக்கதைகளில் பதிவாகியுள்ளன.
“என் வயித்துல பிறந்த குழந்தைகளே என்னைப் பார்த்துப் பயப்படுற நிலை வந்துடுச்சே” என அழுகிற பவானிக்கு அவரது கணவன் அளிக்கும் ஆறுதல், இன்றைக்கும் உணர்ச்சிகளை அடக்கியே வாழ்ந்து பழகிவிட்ட பல பவானிகளின் தேவையை உணர்த்துகிறது. - ஆனந்தன் செல்லையா
பறவைகள் நினைப்பதை யார் அறிவார்?
(மாற்றுத்திறனாளிகளின் உளவியல் பதிவுகள்)
ஆர்.சூடாமணி
போதிவனம் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு:
98414 50437
அறிவை விசாலப்படுத்தும் கட்டுரைகள்: தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் கழகத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிவரும் சங்கர சரவணன் விநாடி-வினா நிகழ்ச்சிகளை நடத்துவது, இயர்புக் கட்டுரைகள் எழுதுவது, போட்டித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் எனப் பொது அறிவுடன் தொடர்புடைய தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். இயர்புக்குகளில் இவர் எழுதிய கட்டுரைகள், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் எழுதிய பதிவுகள் என 118 குறுங்கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
2கே கிட்ஸுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நூலில் அனைத்துக் கட்டுரைகளும் சுருக்கமாகவும் சுவாரசியமான மொழி நடையிலும் எழுதப்பட்டுள்ளன. இரண்டு பக்கங்களுக்கு மிகாத பல கட்டுரைகளில் தகவல் வளம் நிரம்பியுள்ளது. கலைச் சொற்கள் குறித்த ஏழு குறுங்கட்டுரைகளும் கலைச் சொல் உருவாக்கத்தின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள உதவுபவை. பண்பாட்டு ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள், திரைப்படங்கள் குறித்த பதிவுகள் என அறிவை விசாலப்படுத்திக்கொள்ளத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த நூலில் நிறைந்துள்ளன. - ச.கோபாலகிருஷ்ணன்
வைகறை வாசகன் பதிவுகள்
டாக்டர் சங்கர சரவணன்
விகடன் பிரசுரம்
விலை: ரூ.375
தொடர்புக்கு: 80560 46940
பாரதத்தின் ரத்தினம்: இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை, தொழிலாளர் தலைவர், கல்வியாளர், பொருளாதார மேதை, பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடியவர், மகளிர் மேம்பாட்டுக்காக உழைத்தவர் என அம்பேத்கரின் ஒவ்வொரு பங்களிப்பைப் பற்றியும் தனிப் புத்தகமாகவே எழுதலாம். இந்நூலில், அம்பேத்கரின் வாழ்க்கை எளிய மொழியில், சிறுசிறு அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ளது. பொன்மொழிகள், ஏராளமான ஒளிப்படங்கள், ஆங்காங்கே வண்ணப் படங்கள் என 560 பக்கங்களுக்குக் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. - எஸ்.சுஜாதா
வளர்ச்சியின் நாயகர் டாக்டர் அம்பேத்கர்
கலைமாமணி சபீதா ஜோசப்
கிளாஸிக் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.390
தொடர்புக்கு: 97910 06360
வரலாறும் வளர்ச்சியும்: வானொலியைத் தேனொலியாக்கிய 3,000 பேரில் முதன்மையானவர்கள் 300 பேர் என்கிறார் நூலாசிரியர் வெ.நல்லதம்பி. அவர்களில் 30 பேர் குறித்து மட்டும் ‘ஒலியலை ஓவியர்கள்’ நூலில் எழுதியுள்ளார். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள, மாபெரும் அமெரிக்க வானொலி நிறுவனமான ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’விலும் (வி.ஓ.எ) பணியாற்றிய பெருமைக்குரியவர் நூலாசிரியர் நல்லதம்பி.
நூலில் உள்ள கட்டுரைகள் ஊடகத் தமிழின் வளர்ச்சியையும் வரலாற்றையும் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளன. பண்டைத் தமிழ் மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களை ‘வண்தமிழ் மூவர்’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுவார். அதைப் போல கோ.செல்வம், கந்தசாமி (துறைவன்), எம்.எஸ்.கோபால் ஆகிய மூவரையும் ‘வானொலித் துறையின் வண்புகழ் மூவர்’ என்று புகழ்ந்துரைக்கிறார் நூலாசிரியர். நூல் நெடுகிலும் ஒவ்வொருவரைப் பற்றியும் நாம் அறிந்திராத பல செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளார். உதாரணத்துக்கு, வானொலி நேயர்களுக்கு மிகவும் பரிச்சயமான தென்கச்சி சாமிநாதனைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவருடைய ஊர் தென்கச்சி அல்ல தென்கட்சிதான் சரியானது என்கிறார். - ச.சிவசுப்பிரமணியன்
ஒலியலை ஓவியர்கள்
வெ.நல்லதம்பி
வள்ளுவன்
வெளியீட்டகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 94451 41266