Published : 10 Jun 2018 09:31 AM
Last Updated : 10 Jun 2018 09:31 AM

நமக்கான விதைகள்

“நீ

ங்கள் ஓசைகள் எதுவும் கேட்காத சிறையில் இருந்தாலும்கூட விலை மதிக்க முடியாத ரத்தினம்போல, நினைவுகளின் பொக்கிஷமாக ஓர் இளம் பருவம் உண்டல்லவா? கவனம் முழுவதையும் அதை நோக்கித் திருப்புங்கள். எல்லையற்ற இந்தக் கடந்த காலத்தில் மூழ்கிக் கிடக்கும் உணர்ச்சிகளை மேலுயர்த்துங்கள். உங்களது ஆளுமை பலம்பெற்று வளர்வதைக் காண்பீர்கள்” என்றார் ரில்கே.

பால்ய நினைவுகள் வாழ்வை அர்த்தப்படுத்துவதாகவும், மேற்கொண்டு நகர வைப்பதாகவும் இருக்கின்றன. ஊர்ப்பக்கம் போகையில் எதிர்ப்படும் முதியவர்கள், நம் சிறுவயது குறும்பை நினைவுபடுத்தி ஒரே தாவலில் வயதைக் கடந்துவிடும் அற்புதத்தைக் கொடுப்பது பால்யம்தான்! வீடுகளைவிட்டு வெளியேறிக் கிடந்ததும், காடு கழனியென அலைந்து திரிந்திருந்ததும் பொக்கிஷமான நினைவுகள். ஈச்சம் சோறும், தட்டான்களைத் துரத்தியும், தேன்கூடுகள் கலைத்தும் உடலே தித்திப்பாகக் கிடந்த நாட்களின் நினைவுகளும் தித்திக்கின்றன. திருவிழாக்களில் திரிவது, தெருக்கூத்து, பொம்மலாட்டம், பாவைக்கூத்துகளென குதூகலித்திருந்தது, உடுக்கையில் ஓசையோடு வரும் ராமாயண மகாபாரதக் கதைகளை உள்வாங்கியது, மாட்டுவண்டி கட்டி பக்கத்து ஊருக்குப் படம் பார்க்கச் சென்றது, கிண்டலும் கேலியுமாக பார்த்த சினிமாவை மீண்டும் ஓட்டி வந்தது என பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

இக்கால குழந்தைகளுக்கு இதுவெல்லாம் சாத்தியமில்லாமல் போயிற்று. டிவிகளிலும், மொபைல்களிலும் சிறு அறையிலிருந்தே பெரும் வனம் அடைகிறார்கள். நாம் அலைந்து திரிந்து கற்றதை இப்போது நொடிப்பொழுதில் தமதாக்கிவிடுகிறார்கள். நெருக்கடி மிக்க சாலைகளில் கார் ஓட்டுகிறார்கள். எதிரியை சுட்டுத்தள்ளுகிறார்கள். எல்லா வலிகளையும் கொண்டாட்டங்களையும் சித்திரங்களில் தீட்டிக் கடக்கும் தன்மையையும் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு ஓவியங்களிலும் விளையாட்டுகளிலும் எல்லாம் சாத்தியமாகிவிடுகின்றன. நதிகளைத் தங்களின் கோடுகளால் இணைத்துவிடுகிறார்கள். அதன் பின், செழிப்பான விவசாயத்தை உருவாக்குகிறார்கள். நடப்பு காலத்தோடு மட்டுமல்லாது எதிர்காலத்திலும் பயணித்து தீர்வு சொல்கிறார்கள். பொம்மைகளை அக்கக்காகப் பிரித்து மீண்டும் பூட்டுகிறார்கள். தங்களின் போக்கில், இயல்பான உரையாடல்களில் நிறைய விதைகளைத் தெளித்தபடியே இருக்கிறார்கள். நாம் நம் அகம்பாவங்களை அகற்றி சேகரிக்க, அவ்விதைகள் என்றென்றும் விரும்பித் திரியும் அற்புத வனத்தை உருவாக்கும்.

- ந.பெரியசாமி, தொடர்புக்கு: na.periyasamy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x