

நி
றைய வாசிக்கிறோம். அப்படி வாசிக்கிற விஷயங்களில் வாரம் ஒன்றை வாசகர்களு டன் பகிர்ந்துகொள்ளலாம் என்று எண்ணம். நான் இங்கே பகிர்ந்துகொள்ள விழைவது நான் படித்ததன் சுருக்கம் - சாராம்சத்தைத்தான்!
விவசாயக் கடன் தள்ளுபடி என்பது இந்தியாவின் நிரந்தரப் பொருளாதாரக் கொள்கை என்று சொல்லலாம். எந்த ஓர் ஆண்டிலும் ஏதாவது ஒரு மாநில அரசு அல்லது மத்திய அரசு விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்துகொண்டிருக்கும். கான்பூர் ஐஐடி யைச் சேர்ந்த இரண்டு பொருளியல் ஆய்வாளர்கள் இந்த விவசாயக் கடன் தள்ளுபடியால் கடனைத் திரும்பச் செலுத்தும் முறை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது, பயனடைந்த விவசாயிகளின் பொருளாதாரம் என்னவாயிற்று என்ற கேள்விகளை வைத்து ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். மாதிரிப் புள்ளிவிவரம் அடிப்படையிலான இந்த ஆய்வின் அறிக்கை என்ன சொல்கிறது? “பொதுவாக, கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு வரும் ஆண்டுகளில் கடன் திரும்பச் செலுத்திய விகிதம் குறைவாக உள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளை அதே நிலையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படாத விவசாயி களுடன் ஒப்பிடும்போது, இவ்விரண்டு பண்ணை களிலும் ஒரே அளவு உற்பத்தித் திறன், விவசாய முதலீடு இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், விவசாயத் தள்ளுபடியினால் பலன் பெறும் விவசாயிகளிடம் செலவு அதிகரிக்கிறதே தவிர, ஆனால் அடுத்த ஆண்டுகளில் அதிக விவசாய முதலீடாக மாறவில்லை” என்று சொல்கிறது இந்த ஆய்வறிக்கை.
அவ்வப்போது விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதால், கடனைத் திரும்பச் செலுத்தும் பண்பில் ஒரு குலைவை அரசு உண்டாக்குகிறது என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுவதுண்டு. இதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த ஆய்வு இருந்தாலும், “விவசாயக் கடன் தள்ளுபடி தேவை இல்லை” என்று இந்த ஆய்வுக் கட்டுரை கூறவில்லை. “விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தைச் சரியாக வடிவமைத்து, உண்மையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குச் சென்றடைவதாகவும், அவர்கள் தொடர்ந்து விவசாயத்தில் முதலீடு செய்து, உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்க வேண்டும்” என்று கூறுகிறது. இதற்குத் தரமான, நம்பத்தகுந்த புள்ளிவிவர சேகரிப்பும் முறையும் ஆய்வும் தேவை என்று தெரிகிறது.
ஆய்வு அறிக்கை விவரம்: Chakraborty, T and A Gupta (2017), ‘Efficacy of Loan Waiver Programs’,
Working Paper, IIT, Kanpur.
http://home.iitk.ac.in/~tanika/ files/research/LoanWaiverAT.pdf
- இராம சீனுவாசன், பொருளியல் நிபுணர்.
தொடர்புக்கு: seenu242@gmail.com