

கவிஞர் சேரனின் இத்தொகுப்பில் நூற்றிரண்டு கவிதைகள் உள்ளன. அவை காதலை, பிரிவை, போரின் அழிவை, அகதி வாழ்க்கையின் அவலங்களை, உலக அரசியலை, ஈழத்தின் இறுதிப் போருக்குப் பிந்தைய நிலையை, தனிமனிதத் துயரத்தை, மரணத்தை, வாழ்வை என அனைத்தையும் காலத்தின் சாட்சியமாகப் பதிவு செய்திருக்கின்றன.
காஞ்சி என்பது திணை எனக் கொள்ளலாம் என்கிறார். ஆனால், காஞ்சி என்பதற்குப் பல விளக்கங்களை இந்தத் தொகுப்பின் மூலம் சேரன் சொல்கிறார். சேரனின் கவிமொழி, நுண்ணுணர்வும் அழகியலும் நயமும் சொல்நேர்த்தியும் கூடியது. பல தூய தமிழ்ச் சொற்கள் கவிதைகளில் இயல்பாகக் கையாளப்பட்டிருக்கின்றன. மனித வாழ்வின் பாடுகள்தான் அவரது பாடுபொருள். புலம்பெயர்ந்து, சொந்த நாட்டை மறக்க இயலாத ஒரு கவிமனம் வேறெதைப் பாடும்? இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எந்த ஒரு கவிதையும் படித்து உடனடியாகக் கடந்து சென்றுவிட முடியாதவை. அத்தனை அவலமும் துயரமும் நம்மை உறையவைக்கின்றன.
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ‘தீராதது’, ‘இந்தத் தெருவில் எப்போதும்’, ‘படையாள் பாடல்’, ‘கடிதங்கள்’, ‘கிளிப்பாட்டு’, ‘பழங்கள்’ என்ற ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. எனினும் காதல், காமம், போர், அழிவு, பிரிவு என்ற உணர்வுகள் அனைத்துப் பிரிவுகளிலும் விரவிக்கிடக்கின்றன. துயரங்களை எப்படிப் பிரித்தாலும் அவை தரும் உணர்வுகள் ஒன்றுதானே. ‘இந்தத் தெருவில் எப்போதும்’ என்ற தலைப்பில் உள்ள கவிதைகள் நேரடியாக ஈழப்போரின் பின்புலத்துடன், காட்சிச் சித்திரங்களாகப் பதிவு பெற்றுள்ளன. அவற்றின் யதார்த்தம் நமக்குப் பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது.
‘படையாள் பாடல்’ உலக அளவில் தற்காலத்தில் நிகழும் போர்க் காட்சிகளைப் பதிவுசெய்கிறது. மனித உணர்வுகளையும், அடிப்படை உரிமைகளையும் கேள்விக்கு உள்ளாக்கும் கொடும்போர் தனிமனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கவிதை வரிகளில் அவ்வளவு நுட்பத்துடன் செதுக்க முடிவதே சேரனின் தனித்துவம். ‘திரும்பிப் பார்க்க முடியவில்லை/மற்றவர்களது உயிரை அழிக்க ஒரு சிறு பொழுது/எனக்கோ/தொடர்ந்து ஊறும் கொடுங்கனவில்/இருந்தாலும் அழிகிறேன்’ என்ற கவிதையில் கருணையற்றுக் கொலைகள் புரியும் ஒரு படைவீரனின் மனச்சாட்சியாக கவிதை ஒலிக்கிறது. அது கவிஞனின் கையறு நிலையாகவும் இருக்கலாம்.
புலம்பெயர்ந்து வாழும் எவரின் மனதிலும் அழிக்க முடியாத அவர்களின் பூர்விக நிலத்தின் தொன்ம வாசனை ஈரமாக இருக்கும். அதற்குச் சாட்சியாக சேரனின் கவிதைகள் இருக்கின்றன. சேரனின் மொழிநயமும், சொல்தேர்வும், சொல்முறையும் அவரது கவிதைகள் புலப்படுத்தும் கருத்தியலுக்கு நிகரானது. இந்தக் கவிதைகளில் ஒப்பனைகளோ கூச்சல்களோ இல்லை. இன்னும் சொல்வதென்றால், அது நிசப்த மொழியின் இறைஞ்சுதலாக, கோரிக்கையாக, கேள்விகளாக நம்மைப் பெரும் அலைக்கழிப்புக்கு உட்படுத்துகின்றன.
‘மறுமொழி’ என்கிற கவிதையில் ‘இத்தனைக்கும் பிறகும் எப்படிச் சிரிக்கிறீர்கள்?’ என்று கவிஞனைப் பார்த்துத் தொடுக்கப்படும் கேள்விக்கு நேரடியாகக் கவிதையில் மறுமொழி இல்லை. ஆனால், கவிதையின் தொடக்கத்திலேயே அதற்கான மறுமொழி இருக்கிறது. அதைக் கவனிக்கச் சற்று நேரமும் நேயமும் நமக்குத் தேவைப்படுகிறது. அதற்காகவாவது அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு ‘காஞ்சி’.
‘என் கவிதைகளுக்கு மணற்றிடரையோ கடலோரக் காணித்துண்டையோ பரிசளிக்க வேண்டாம்/ஒரு முள்முருக்கம் பூவைத்தான் கேட்டேன்’ - மொத்தத் தொகுப்பையும் பலமுறை வாசித்த பின்பு, சேரனின் இந்த வரிகள் மனதிற்குள் சுழன்றடித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு கவிஞனுக்கு நிலமோ பொருளோ அல்ல. வாசகர் மனதில் ஓர் இடம், அதைத்தான் ஒவ்வொரு கவியும் காலத்திடம் கோருகிறார். அது சேரனுக்கு என்றும் இருக்கும்.
காஞ்சி
சேரன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 04652 278525சேரன்
- தொடர்புக்கு: narumugaikuppuswamy@gmail.com