

நாங்குநேரியில் கடந்த ஆண்டு பட்டியல் சாதி மாணவர் சின்னதுரையை ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள், வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியதோடு, தடுக்க வந்த சின்னதுரையின் தங்கையையும் தாக்கியது, பள்ளி மாணவர்களுக்குள்ளும் சாதி வெறி வேரூன்றிவிட்டதை உணர்த்தியது.
இந்தக் கொடுஞ்செயலின் பின்னணியில் மாணவர்களிடையே நிலவும் சாதி வேற்றுமை உணர்வுகளைக் களைவதற்கும் மாணவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் ஆசிரியர்களும் கல்விப்புல ஆளுமைகளும் வழங்கிய ஆலோசனைகள் இந்த நூலில் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் இந்த நூலின் தொகுப்பாசிரியர். அவரது ‘மணற்கேணி’ ஆய்விதழ் சார்பாக வழங்கப்படும் நிகரி சமத்துவ ஆசிரியர் விருதுபெற்ற சாந்தி, பேராசிரியர் இரா.அழகராசன் உள்ளிட்டோர் விருது விழாவில் வாசித்த ஏற்புரையின் கட்டுரை வடிவம் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் அ.ராமசாமி தனது கல்விப் பணியினூடே மாணவர்களிடையே சாதி கடந்த இணக்கத்தை ஏற்படுத்த முயன்றபோது எதிர்கொண்ட மறைமுக எதிர்ப்புகளைப் பதிவுசெய்துள்ளார். எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசனின் கட்டுரையிலும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு ரவிக்குமார் அனுப்பிய வேண்டுகோள் கடிதத்திலும் பள்ளிகளில் பட்டியல் சாதி மாணவர்கள் எதிர்கொள்ளும் பல வகையான சாதிக் கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. நாங்குநேரி சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு அரசு அமைத்த நீதிபதி கே.சந்துரு குழு அரசுக்கு அளித்த பரிந்துரைகளும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. - கோபால்
கல்விக்கூடங்களில் சமத்துவம்
தொகுப்பாசிரியர்: ரவிக்குமார்
மணற்கேணி வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 63827 94478
ஒரு காலப் பெட்டகம்: நூற்றாண்டு விழா கண்ட தலைவர்களுக்கு மலர் வெளியிடுவது அந்த விழாவை அர்த்தமுள்ளதாக ஆக்கும். அந்தத் தலைவரின் புகழையும் பெருமையையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் விழா மலர்கள் உதவும். தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், சட்டமன்ற உறுப்பினராக வைர விழா கண்டவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 49 ஆண்டுகள் இருந்தவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி வெளியாகியுள்ள ‘தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024’ ஒரு காலப் பெட்டகமாக உள்ளது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தொடங்கி அமைச்சர் உதயநிதி வரை அவர்களுடைய பார்வையில் கருணாநிதி பற்றி எழுதிய கட்டுரைகள் மலரில் இடம்பெற்றுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள், கலையுலகினர், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், உடன்பிறப்புகள், இளைஞர்கள் பார்வையில் எழுதப்பட்ட கருணாநிதி பற்றிய 112 கட்டுரைகள் விரிவாக இடம்பெற்றுள்ளன. கருணாநிதி பற்றி நெகிழ்ச்சியான நிகழ்வுகள், அரிய தகவல்கள், தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள், முதல்வராக அவர் சாதித்த சாதனைகளைப் பலரும் எழுத்தோவியமாகத் தீட்டியிருக்கிறார்கள். மலரின் இடையே இடம்பெற்றுள்ள அந்தக் கால கறுப்பு வெள்ளை, இந்தக் கால வண்ண ஒளிப்படங்களும் மலருக்குச் சுவையைக் கூட்டுகின்றன. - மிது கார்த்தி
தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024
முரசொலி வெளியீடு
விலை: ரூ.3,000
தொடர்புக்கு: 044-2817 9191
தாய்மையின் விலை: இயல்பான வழியில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு வரமாகக் கிடைத்ததாகச் சொல்லப்படும் வாடகைத் தாய் முறை, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலையும் உளவியலையும் எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதை இந்நூல் விவாதிக்கிறது. வாடகைத் தாய் முறை மூலம் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுவதைப் பெரியாரிய – மார்க்சியப் பார்வையில் அமைந்த கட்டுரைகள் விளக்குகின்றன.
மருத்துவ வளர்ச்சியும் தொழில்நுட்ப முன்னேற்றமும் பெண்ணை மீண்டும் அடிமைத்தனத்துக்குள் தள்ளும் செயல்தான் வாடகைத் தாய் முறை என்கிறார் நூலாசிரியர் சு.விஜயபாஸ்கர். பணம் படைத்தவர்கள் மட்டுமே நன்மை அடையக்கூடிய இந்த முறையால், ஏழைப் பெண்கள் சுரண்டப்படுவது மறைக்கப்படுவதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. வாரிசுரிமைக்காக எப்படியாவது பிள்ளை பெற்றே தீர வேண்டும் என்கிற சமூக நிர்ப்பந்தம், எப்படிப் பெண்ணுடலை விற்பனைப் பண்டமாக்குகிறது என்பதும் இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது. - பிருந்தா
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி (வாடகைத் தாய் முறை மீதான கேள்விகள்)
சு.விஜயபாஸ்கர்
திராவிடியன் ஸ்டாக் (Dravidian Stock)
விலை: ரூ.50
தொடர்புக்கு: 90927 87854
சொல்லில் உயிர்க்கும் கவிதை:
ஈரோடு தமிழன்பன் 1968இல் ‘கொடி காத்த குமரன்’ எனும் முதல் கவிதை நூலை எழுதினார். இது அவரது 83ஆவது கவிதை நூல். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழ்க் கவிதைகளில் காத்திரமான பங்களிப்பை ஆற்றிவரும் கவிஞரது வற்றாத கவிப்புலமைக்குச் சான்றான 35 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ‘பூக்கள் சொன்னதை/நம்ப வேண்டாம் என்று இயற்கை/சொன்னால்/இயற்கையை யார் நம்புவார்கள்?’ என்று கேட்கும் கவிஞரது கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் தொனிக்கின்றன.
‘பொருள் இறந்த சொல் / புதைப்பவர் இல்லாமல் கிடந்தது/கதவு திறந்து/அகராதிகளுக்கு வெளியே வந்து/எச்சொல்லும் துக்கம் கேட்கவில்லை’ எனும் வரிகளில் சொற்களுக்கு வெளியேயும் கவிதை உயிர்த்திருப்பதைச் சொல்லிச் செல்லும் லாகவம் ரசிக்கவைக்கிறது. ‘தக்காளி யுகம்’, ‘ஈமத்தச்சனுக்கு ஏன் கண்ணீர்?’, ‘சுழியனில் சுழலும் உலகம்’, ‘ஆடைகள் அணியாத பூக்களிடம்’, ‘தோற்றுப்போன விடைகள்’ ஆகிய கவிதைகள் சொற்செறிவோடும் கவித்துவத்தோடும் அமைந்து வாசிப்பவரை ஈர்க்கும் கவிதைகளாகக் கவனம்பெறுகின்றன. - மு.முருகேஷ்
வேறு எப்படிச் சொல்ல?
ஈரோடு தமிழன்பன்
பூம்புகார் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 044-25267543