

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை அண்ணா. மாநில அரசின் அதிகாரங்களுக்காகக் குரல் கொடுத்தவர் என்பதைத் தாண்டியும் அண்ணாவின் பங்களிப்பு விரிவுகொண்டது. திராவிட இயக்கச் செயற்பாட்டாளராக அண்ணா, தமிழ்நாட்டுக்குச் செய்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை. அந்த ஆளுமையை முழுமையாக அறிந்துகொள்ளும் பொருட்டு இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது.
தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டுக் கழகத் திட்டத்தில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூலாகும். இந்த நூலின் முதல் பகுதியில் பெரியார், அண்ணாவின் மறைவு தமிழகத்துக்கு எப்படியான இழப்பு என்பதைக் குறித்து எழுதியிருக்கிறார். இந்தப் பகுதியில் முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெ.ஜெயலலிதா ஆகியோர் அண்ணா பற்றி எழுதியிருக்கின்றனர். இந்தப் பகுதியின் மூலம் தமிழக அரசியலில் அண்ணா விளைவித்த தாக்கம் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
அண்ணாவை இந்தியப் பெரும் பரப்பில் வைத்து அணுகும் கட்டுரைகளை அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரேர்ணா சிங் எழுதியுள்ளார். இந்தப் பகுதியில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவின் நேர்காணலும் சேர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் திராவிடக் கலாச்சாரத்தை அண்ணா உருவாக்கியது பற்றிய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கட்டுரை முக்கியமானதாகும். மறைந்த தமிழ்ப் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவனின் நேர்காணலும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டுத் தளத்தில் வேர் பிடிக்காத மாற்றம் நீடித்து நிலைக்காது என்பது அண்ணாவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் பண்பாட்டுத் தளத்தில் அண்ணா மாற்றங்களைக் கொண்டுவந்தார் என தொ.ப. அந்த நேர்காணலில் சொல்கிறார். அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள், பத்திரிகைப் பங்களிப்புகள் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. அண்ணாவின் வழி தமிழ்நாட்டு அரசியலைத் தெரிந்துகொள்ள இந்த நூல் ஒரு பாடமாக இருக்கும். அது தமிழில் மட்டுமல்லாமல், உலக மொழியான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது, இந்த நூலின் வீச்சை இன்னும் பெரிதாக்குகிறது.
ஏ கிராண்ட் தமிழ் ட்ரீம்
(A GRAND TAMIL DREAM)
ஆசிரியர்: கே.அசோகன்
மொழிபெயர்ப்பு ஆசிரியர்: ஆர்.விஜயசங்கர்
இந்து தமிழ் திசை பதிப்பகம்/தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டுக் கழகத் திட்டம்
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74012 96562
திண்ணை | பதிப்பாளர்கள் மறைவு: சிவகுரு பதிப்பகம் உரிமையாளர் முனுசாமி, சங்கர் பதிப்பக உரிமையாளர் கோமதிநாயகம் இருவரும் உடல் நலக் குறைவால் கடந்த வாரம் காலமாகிவிட்டனர். இருவரும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கப் பொறுப்பில் திறம்படச் செயல்பட்டவர்கள்.
பேராசிரியர் கா.செல்லப்பன் மறைவு: பேராசிரியர் கா.செல்லப்பன் காலமாகிவிட்டார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலைத் தமிழில் இவர் மொழிபெயர்த்துள்ளார். இதற்காக சாகித்திய அகாடமி விருதுபெற்றுள்ளார்.
பாரதியார், பாரதிதாசன், மு.கருணாநிதி ஆகியோரின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ‘மொழியாக்கம் - (கொள்கைகளும் செய்முறைகளும்)’ என்கிற மொழிபெயர்ப்பு சார்ந்த இவர் எழுதிய நூல் கவனம் பெற்றதாகும்.முனுசாமிகோமதிநாயகம்கா.செல்லப்பன்