நூல் நயம்: தென் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு

நூல் நயம்: தென் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு
Updated on
3 min read

பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் உருவான முதல் தலைமுறை பொதுவுடைமைத் தலைவர்களில் முக்கியமானவர் அமீர் ஹைதர் கான். இன்றைய பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பிரிட்டன் வணிகக் கடற்படையிலும் அமெரிக்க வணிகக் கடற்படையிலும் பணியாற்றியவர். பின்னர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதியாக, சோவியத் ரஷ்யாவில் செயல்பட்டார்.

பிறகு, தென்னிந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை ஆரம்பிப்பதற்காக அன்றைய மதராஸுக்கு வந்திருக்கிறார். அப்போது பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், சங்கர் என்கிற பெயரில் இயக்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு, இன்னல்களைச் சந்தித்திருக்கிறார். மன்னிப்புக் கேட்டால் விடுதலை கிடைக்கும் என்று பல முறை அறிவுறுத்தப்பட்டும் ‘இது என் நாடு.

பம்பாய், பஞ்சாப் போன்று சென்னையும் இந்தியாவின் ஒரு மாநிலம்தான். நான் வாழ்வதற்காக என் தாய்நாட்டின் ஓர் அங்குலப் பரப்பளவில்கூட என் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டேன். வாழ்நாள் முழுவதும் சிறையிலிருந்தாலும், உங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த நூல் பொதுவுடைமை இயக்கத்தின் வரலாற்றைச் சொல்லும் அதேவேளையில், அமீர் ஹைதர் கானின் வாழ்க்கையையும் சொல்கிறது. - சுஜாதா

தென் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கம்
அமீர் ஐதர் கான் (தமிழில்: அருணானந்த்)
அறம் வெளியீடு
விலை: ரூ.180
தொடர்புக்கு: 91507 24997

எம்.ஜி.ஆர். தந்த பழக்கம்! - புன்னகை அரசி என்று தமிழக மக்களால் கொண்டாடப்​பட்டவர் நடிகை கே.ஆர்​.​விஜயா. புகழ்​பெற்ற ஒரு நடிகையைப் பற்றிய கட்டுரை​யாகவோ பேட்டி​யாகவோ இல்லாமல், கே.ஆர்​.​விஜயா தன் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான விஷயங்​களைத் தன்னியல்பாக அவரின் மொழியில் பேசியிருப்​பதுதான் இந்நூலின் சிறப்பு. எம்.ஜி.ஆர். மூலமாக இன்றளவும் கடைப்​பிடிக்கும் பழக்கம், தனக்காக கர்னாடக இசை உலகின் அரசி எம்.எஸ்.சுப்பு​லட்சுமி பாடிய தருணம், தன்னைப் பேட்டி எடுக்​கவந்த ஜெயலலி​தாவின் புத்திசாலித்தனம் போன்ற பல இனிமையான தருணங்களை இந்த நூலில் பதிவுசெய்திருக்​கிறார் கே.ஆர்​.​விஜ​யா. - வா.ரவிக்குமார்

கற்பக (விருட்ச)ம்!
புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் சுவாரசியமான அனுபவங்கள்
ஸ்ரீவித்யா தேசிகன்
விவிட் மீடியா வெளியீடு
விலை: ரூ.160
தொடர்புக்கு: 96770 90566

ஒரு ‘தாய்’ காவியம்: மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்டகாலத் தலைவருமான மு.கருணாநிதி பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் கலைஞரை ‘தாய்’க்கு ஒப்பாக விளித்து, மாநிலப் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதியுள்ள நூல் இது. திருக்குவளையில் கருணாநிதி பிறந்தது முதல் சென்னை மெரினா கடற்கரையில் நீள் துயில்கொள்ளச் சென்ற காலம் வரையிலான நீண்ட நெடிய பயணத்தில் அவர் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள், அரிய கருத்துகளைத் தொட்டுப் பேசுகிறது, ‘கலைஞர் எனும் தாய்’ நூல்.

கருணாநிதி எப்படி ‘தாய்’ ஸ்தானத்தில் இருந்தார் என்பதை அழகாகவே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார். இந்நூலில் 33 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் குறளுடன் தொடங்குகிறது. அக்குறளுக்குக் கலைஞர் எழுதிய விளக்கவுரையும் இடம்பெற்றுள்ளது. திருக்குறளை மையப்படுத்தியும், அதன் பாதையில் கருணாநிதி எப்படிச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதும் வாசிக்க சுவாரசியத்தை அளிக்கிறது. -மிது கார்த்தி

கலைஞர் எனும் தாய்
எ.வ.வேலு
சீதை பதிப்பகம்
விலை: ரூ.1,000
தொடர்புக்கு: 97907 06549

நம் வெளியீடு | கீரைகள் என்கிற ஊட்டச்சத்துச் சுரங்கம்: பொதுவாக இன்றைக்கு விலை கூடிய, வெளிநாடுகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறோம். சாலட், பீட்சா என நமக்கு நெருக்கமில்லாத உணவு வகைகளில் அயல் கீரைகள், காய்கறிகளைக் கலந்து பரிமாறினாலும் சுவைக்கிறோம். ஆனால், நம் நாட்டிலேயே எளிதாகக் கிடைத்தாலும் சத்தான உணவு வகைகளில் நாம் பெரிதும் மறந்துவிட்டது கீரைகளைத்தான்.

கீரைகள் நிச்சயமாக விலை கூடியவை அல்ல. மிக எளிதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடியவை. அதிலும் நம் நாட்டில் மிகச் சாதாரணமாக நமது தோட்டங்களிலும் புழக்கடைப் பகுதிகளிலும் எளிதாக விளையும் குப்பைமேனிக் கீரை, பருப்புக் கீரை எனப் பல கீரை வகைகளைப் பார்க்கலாம்.

அந்தக் காலத்தில் வீட்டிலிருக்கும் சிறிய இடத்திலும் பல கீரை வகைகள் வளர்ந்திருக்கும். இன்றைக்கு நகர்ப்புறங்களில் அப்படிக் கீரை வகைகள் வளர்க்கப்படுவதைப் பெரிதாகப் பார்க்க முடிவதில்லை. முருங்கைக் கீரை சத்துகளுக்காக உலகப் புகழ்பெற்றது. கல்யாண முருங்கை போன்றவை மருத்துவக் குணம் கொண்டவை. சட்னி, துவையலுக்கு நாம் பயன்படுத்தும் கொத்துமல்லித் தழை, புதினா, கறிவேப்பிலை போன்றவையும் கீரை வகைகளே. இப்படிப் பலரும் எளிதாகவும் சுவையாகவும் சமைக்கக்கூடிய கீரை வகைகள் நம்மிடையே உண்டு. இவை சாதாரணமாகக் கிடைக்கக்கூடியவை. இவை அளிக்கும் சத்துகளோ ஏராளம். அந்தக் கீரைகளின் மகத்துவத்தை உரைக்கும் நூல் இது.

கீரைகள் தேசம்
டாக்டர் வி.விக்ரம்குமார்
இந்து தமிழ் திசை பதிப்பகம்   
விலை: ரூ.130
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/ publications
தொடர்புக்கு: 74012 96562

லெனின் நூல் முன்வெளியீட்டுத் திட்டம்: ரஷ்யப் புரட்சியாளரான லெனின் ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 நூல்களாக நியூ செஞ்சுரி பதிப்பகம் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடவுள்ளது. 3,800 பக்கங்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் விலை ரூ.4,275. முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.3,000க்கு வழங்கப்படவுள்ளது. தொடர்புக்கு: 044 26251968.

மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா கூட்டம்: சாகித்திய அகாடமி விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா. இவர் சாரா ஜோசப், கமலா தாஸ், எம்.சுகுமாரன் உள்ளிட்ட பல மலையாள எழுத்தாளர்களின் ஆக்கங்களை மொழிபெயர்த்துள்ளார்.

இவரது பங்களிப்பு குறித்த ஒருநாள் நிகழ்வு நாளை (08.09.24) காலை 10 மணி முதல் மயிலாப்பூர் சிஐடி காலனி கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், பாவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசவுள்ளனர். ஆகுதி இதை ஒருங்கிணைக்கிறது.

கவிதை நூல் கூட்டம்: கவிஞர் தர்மினியின் மூன்றகவிதை நூல்கள் குறித்த கூட்டம் நாளை (08.09.24) மாலை 5 மணிக்கு ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அகமது வணிக வளாகத்தில் உள்ள கருப்பு பிரதிகள் அரங்கில் நடைபெறவுள்ளது. எஸ்.சண்முகம், வனிதா, மதிவண்ணன் ஆகியோர் பேசவுள்ளனர்.
தொடர்புக்கு: 9444272500

மதுரை புத்தகக் காட்சி: மதுரை மாவட்ட நிர்வாகமும் பொது நூலக இயக்கமும் இணைந்து ஒருங்கிணைத்துவரும் மதுரை புத்தகக் காட்சி செப்டம்பர் 16ஆம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, சிவகுருநாதன், சு.வெங்கடேசன், மதுக்கூர் ராமலிங்கம், இந்திரா செளந்தரராஜன், பாரதி கிருஷ்ணகுமார், நெல்லை ஜெயந்தா, நந்தலாலா, மனுஷ்யபுத்திரன், தேவந்திர பூபதி, நர்த்தகி நடராஜ், பர்வீன்சுல்தானா ஆகியோர் பேசவுள்ளனர். சாலமன் பாப்பையா, கு.ஞானசம்பந்தன், ஐ.லியோனி ஆகியோரின் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது. இந்து தமிழ் திசை பதிப்பகம் (அரங்கு எண்:118) கலந்துகொள்கிறது. இங்கு இந்து தமிழ் திசை வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in