நூல் வெளி: வாழ்வின் தடங்களைக் காட்டும் கதைகள்

உதயசங்கர்
உதயசங்கர்
Updated on
2 min read

வாசகப் பருவத்தின் தொடக்கக் காலத்தில் சில எழுத்​தாளர்​களின் கதைகளை விருப்​பத்​துடன் படித்​திருப்​போம். அவர்களது கதைத் தொகுப்புகள் நமது புத்தக அடுக்​கிலும் இருக்​கும். ஆனால், காலவோட்​டத்தில் அவை நம் நினைவில் பின்தங்கி​விடும். தொடர்ந்த வாசிப்​பினூடே புதிய எழுத்​தாளர்களை வாசித்து அறிந்த பின், நமக்குள் சேகரமா​யிருக்கும் வரிசையில் சில பெயர்கள் முன்னும் பின்னுமாக மாறியும் இருக்​கும்​.

சில வருடங்​களுக்குப் பிறகு அவர்களது பெயர்களை மீண்டும் காணும்போது அல்லது அவர்களை நேரில் சந்திக்க நேரும்போது முன்னர் எப்போதோ படித்த கதைகள் நினைவில் எழும். இத்தனை ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து எழுதிவருவதை, புதிய தொகுப்புகள் வந்திருப்​பதைக் கவனத்தில் கொள்ளாதது குறித்து மெல்லிய வருத்தம் எழும்.

கடந்த சில வருடங்​களில் அப்படி நான் மீண்டும் சந்தித்து நெருங்கிய எழுத்​தாளர்​களில் ஒருவர் உதயசங்கர். அவரது முதல் தொகுப்பான ‘நீலக்​கனவு’ என் புத்தக அலமாரியில் உள்ளது. அதேபோல, ‘மறதியின் புதைசேறு’ தொகுப்பும் என்னிடம் உண்டு. பல வருடங்​களுக்கு முன்பு எப்போதோ படித்த ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு இரவு’, ‘மறதியின் புதைசேறு’ போன்ற கதைகள் என் நினைவில் உள்ளன.

அண்மை​யில், அவரது தேர்ந்​தெடுக்​கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு வெளிவந்​துள்ளது. 1988இல் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பான ‘யாவர் வீட்டிலும்’ தொடங்கி, இதுவரை 12 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்​துள்ளன. 63 வயதான அவர் 43 ஆண்டு​களில் மொத்தம் 107 கதைகளை எழுதி​யிருக்​கிறார். எழுத்​துக்காக அவர் செலவிட்​டிருக்கும் காலம் என்பது அவரது வாழ்நாளின் பெரும்​பகுதி. வேலைக்​காகவும் குடும்பத்​துக்​காகவும் அவர் செலவிட்ட காலத்​தை​யும்விட இலக்கி​யத்​துக்கும் எழுத்​துக்கும் செலவிட்ட காலம் கூடுதல். எனவே, இலக்கியமும் எழுத்தும் அவரது வாழ்வின் ஒரு பகுதி​யல்ல; பெரும்​பகுதி.

இத்தனை ஆண்டுகள் இலக்கி​யத்தில் தொடர்ந்து செயல்​பட்டு​வரு​கிறார் என்பதே பெரும் சாதனை​தான். உரிய அங்கீ​காரம், விருதுகள், பரிசுகள் போன்ற​வற்​றையெல்லாம் எதிர்​பார்க்கக் கூடாது என்கிற பக்கு​வமும் முதிர்ச்​சியும் இல்லாமல் இவ்வளவு காலமும் இதில் காலம் தள்ளி​யிருக்க முடியாது. எழுத வேண்டும் என்று ஆசைப்​பட்​டிருக்​கிறார். எழுதத் தொடங்​கினார். எழுதிக் கொண்டிருக்​கிறார்.

தொடர்ந்து அவர் சிறுகதைகளையே எழுதி​யிருக்​கிறார். பிற வடிவங்​களில் பெரிய அளவில் கவனம் செலுத்​தவில்லை. ‘முகங்​கள்’, ‘நீலக்​கனவு’ போன்று சில குறுநாவல்களை அல்லது நெடுங்​கதைகளை எழுதிப் பார்த்திருக்​கிறார். நாவல் முயற்சி எதுவும் செய்ய​வில்லை. சிறுகதை வடிவைத் தனது புனைவுக்​குரிய வடிவமாகத் தேர்ந்​தெடுத்​துக்​கொண்டு, அதன் பல்வேறு சாத்தி​யங்​களையும் முயன்று பார்த்திருக்​கிறார்.

நேரடியான யதார்த்த பாணியிலான கதைகளையே அதிகமும் எழுதி​யிருக்​கிறார். ஆனால், அதே வேளையில் இந்த 40 ஆண்டுக் காலத்தில் சிறுகதைகளில் ஏற்பட்​டிருக்கும் மாற்றங்​களைக் கணக்கிலெடுத்​துக்​கொண்டு தனது எழுத்​திலும் அவற்றை முயன்று பார்த்திருக்​கிறார். ‘விசித்திரத் திருடர்​கள்’, ‘நொண்டி நகரம்’, ‘நீலிச்​சுனை’ போன்ற கதைகளை உதாரண​மாகச் சொல்லலாம்.

அவரது கதைகளின் ஒரு பகுதி பெண்களின் உலகை மையமாகக் கொண்டது. திருமணம் ஆகாத முதிர்​கன்னிகள், வறுமை​யையும் பசியையும் சமாளிக்கும் குடும்பத் தலைவிகள், கணவனின் கொடுமை​களைச் சகித்துக் கிடக்கும் மனைவிகள், முதிய வயதில் பிள்ளை​களின் ஆதரவுக்காக ஏங்கி ஏமாறும் தாய்மார்கள் என்று பெண்களுடைய வாழ்வின் எல்லா பாடுகளும் கதையில் சொல்லப்​பட்​டுள்ளன.

அவரது கதைகளின் இன்னொரு பகுதி, முதிய​வர்​களின் பாடுகளைச் சொல்பவை. கடந்த கால நினைவு​களுக்குள் நாள்களைக் கடத்தும் பெரிய​வர்கள், ஒருவேளைச் சோற்றுக்காக ஏங்கிக் காத்திருக்கும் பசியவர்கள், பசியாற வழியின்றி, இருக்க இடமின்றி அல்லாடும் வயசாளிகள் இவரது கதையுலகில் நிறைந்​திருக்​கிறார்கள். இன்று பெருநகரங்​களில் ஏ.டி.எம்​.-களி​லும், அடுக்​கு​மாடிக் குடியிருப்பு​களிலும் இரவுக் காவல் பணியாளர்களாக இருப்​பவர்கள் அதிகமும் இத்தகைய முதிய​வர்களே.

40 வருடங்​களில் எழுதப்​பட்​டிருக்கும் இந்தக் கதைகள் ஒரு வகையில் சமூக வரலாற்றின் பக்கங்​கள்கூட. வெவ்வேறு காலக்​கட்​டங்​களில் நம் அன்றாட வாழ்வில் ஏற்பட்​டுள்ள மாற்றங்களை இவை நமக்குக் காட்டு​கின்றன. விளக்கு இல்லாத மிதிவண்டி, இரவில் அதைப் பிடிக்கும் போலீஸ் என்கிற காட்சியை இன்றைய சூழலில் வைத்து யோசித்துப் பார்க்​கும்​போது, நாம் எவ்வளவு தொலைவைக் கடந்து வந்திருக்​கிறோம் என்பதை உணரலாம்.

அதேபோல, வெவ்வேறு கதைகளிலும் காணக் கிடைக்கும் ரயில்​நிலையக் காட்சிகள். புற வாழ்வில் ஏற்பட்​டுள்ள இந்த மாற்றங்களுக்கு நிகராக மனிதரின் அகத்தில் மாற்றங்கள் ஏற்பட்​டுள்ளனவா என்று யோசிக்​கவைக்​கின்றன இந்தக் கதைகள். மனிதர்கள் மாறவே​யில்லை. நடை உடை பாவனைகள், வசதிகள் எல்லாம் மாறியுள்ளன.

அறிவியல் தொழில்​நுட்பம், தகவல் தொடர்பு எல்லாம் மனிதர்களது உள்ளங்​கையில் உலகத்தைக் கொண்டு​வந்து நிறுத்​தி​யுள்ளது. ஆனால், அகம் அப்படியேதான் உறைந்​திருக்​கிறது. மனித சுபாவத்தில் மாற்றங்கள் ஏற்பட​வில்லை. இன்றும் மனிதர்கள் சுயநல​வா​தி​யாகத்தான் இருக்​கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் ஏமாற்றுகிறார்கள், சுரண்​டு​கிறார்கள். ஏமாற்றும், சுரண்டும் விதங்​கள்தான் முன்னேறி​யுள்ளன. ஏமாற்று​வதும் சுரண்டு​வதும் மாறவில்லை.

உதயசங்​கரின் கதைகள் 40 வருடக் காலத் தமிழக வாழ்வின் சில தடங்களை நமக்குக் காட்டு​கின்றன. அந்தத் தடங்களின் வாயிலாக நாம் நகர்ந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க வாய்க்​கிறது. இனி இந்தப் பாதை எங்கே, எதை நோக்கிப் போகும் என்கிற அழுத்தமான கேள்வியும் எழுகிறது.

உதயசங்கர் கதைகள்
உதயசங்கர்
நூல்வனம் வெளியீடு
விலை: ரூ.1,100
தொடர்புக்கு: 91765 49991

- தொடர்புக்கு: murugesan.gopalakrishnan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in