

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் பல விஷயங்களை விளக்கிக் கூறியிருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்குப் புரியும்படி கிருஷ்ணர் பதில் அளித்தால் எப்படி இருக்கும் என்று ஆசிரியர் யோசித்ததன் விளைவே இந்த நூல். நண்பரும் பக்தருமான ஒருவருடன் ஸ்ரீ கிருஷ்ணர் உரையாடுவதைப் போல இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்த உரையாடல்கள் 18 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒவ்வொரு விஷயத்தை பக்தரும் ஸ்ரீகிருஷ்ணரும் அலசி ஆராய்கிறார்கள். ஆன்மிகமும் மேலாண்மையும் கலந்த கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. - மிது
தலைவா - பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் ஓர் உரையாடல்
நாகா
ஸ்ருதி பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 98422 06002
நம்மைச் சுற்றி நடப்பவை: கற்பனையைவிட யதார்த்தம் கற்பனைக்கு எட்டாததாக இருக்கும். இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் ஒன்பது கதைகளின் வழியாக கி.அமுதா செல்வி அதைத்தான் உணர்த்த முனைந்திருக்கிறார். இந்தக் கதைகளில் உலவும் மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறவர்கள். நாம் பார்க்க விரும்பாத அல்லது அப்படியானவர்கள் இருப்பதையே சகித்துக்கொள்ளாத மனங்களில், இவை சிறு சலனத்தையாவது ஏற்படுத்தும்.
சமூகத்தின் கொடுநாவுகளுக்குப் பயந்து வாழ்க்கையைத் தொலைக்கும் பெண்களில் தொடங்கி ஆண் மனதின் வக்கிரம், சாதியக் கொடுமை, வறுமை எனப் பல சமூக அவலங்களும் கதைகளின் வழியே காட்சிப்படுத்தப்படுகின்றன. விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்சினைகள் அவர்களது தனிப்பட்ட பிரச்சினையல்ல; அது சமூகத்தின் பிரச்சினை என்பதுதான் இந்தக் கதைகளின் அடிநாதம். - பிருந்தா
பசி கொண்ட இரவு
கி.அமுதா செல்வி
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044-24332424
நம் வெளியீடு | கதையின் கதை: கதையைக் கேட்பதுபோலவே எழுதுவதும் சுவாரஸ்யமான சவால். அந்தச் சவாலை எதிர்கொண்டு, உங்களையும் கதாசிரியர் ஆக்கும் வழிகளைச் சொல்லும் நூல் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘நானும் கதாசிரியரே!’. மாணவர், ஆசிரியர், பெற்றோர் என மூன்று தரப்பினரும் படித்துப் பயனடைவதற்கான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
இதைப் படிப்பதன் மூலமாக யார் வேண்டுமானாலும் கதாசிரியராக உருவாகலாம். படிப்பவர்களை வசப்படுத்த எந்த மாதிரியான மொழிநடை இருக்க வேண்டும், கதையைப் பேச்சுத் தமிழில் எழுதலாமா, உரைநடைத் தமிழில் எழுதலாமா - கதை எழுதுவதில் இருக்கும் நுட்பமான இதுபோன்ற விஷயங்களை எளிமையாகக் கட்டுரைகளின் வழியாக விளக்குகிறார் நூலாசிரியர்.
நானும் கதாசிரியரே
விஷ்ணுபுரம் சரவணன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.130
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74012 96562
திண்ணை | தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வைகள்: தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழ் மின் நூலகம் இணைய தளம் பத்துக் கோடிப் பார்வைகளை எட்டியது.
தமிழ் மின் நூலகத்தில் அரிய இதழ்களும், நூல்களும், ஓலைச்சுவடிகளும் ஏராளமாக உள்ளன. தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கான அறிவுச் சுரங்கம் இந்நூலகம். சுட்டி: https://www.tamildigitallibrary.in/
என்றும் தமிழர் தலைவர் கூட்டம்: இந்து தமிழ் திசை வெளியிட்ட ‘என்றும் தமிழர் தலைவர்’ நூல் அறிமுகக் கூட்டம் நாளை (01.09.24) காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூரில் 100 அடி சாலையில் உள்ள லீடர்ஸ் டெஸ்க்கில் நடைபெறவுள்ளது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுபவீ, செயல்பாட்டாளர் ஓவியா, புதுவை தீனா, திராவிடப் பள்ளி இணை ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன், சரவணப் பெருமாள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் செய்தி ஆசிரியர் வெ.சந்திரமோகன் உள்ளிட்ட பலர் பேசவுள்ளனர். இந்த நிகழ்ச்சியைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் இனமானப் பேராசிரியர் படிப்பு வட்டமும் இணைந்து ஒருங்கிணைக்கின்றன. தொடர்புக்கு: 83440 53307