Published : 13 Jun 2018 10:00 AM
Last Updated : 13 Jun 2018 10:00 AM

செளபா: சாம்பலான தோட்டம்

காணி நிலம் வேண்டிச் செத்துப்போன கவிராஜனின் கனவை நனவாக்கிய தோட்டச்சாமி.

நாலு திக்கும் மலைகள் சூழக் குடில் அமைத்து, அடுப்பு நெருப்பை அணையவிடாமல், பொங்கிப் பொங்கிப் போட்டுக் களித்த நளராஜா.

மழையும் குளிரும் தராது தோற்கும் வாஞ்சையை, காண்பவர் மீதெல்லாம் கொட்டித் தீர்த்த பேரருவி.

வெண்கலக் கும்பாவுக்குள் உருளும் கோலிக்குண்டுச் சிணுங்கலாய், வார்த்தைக்கு வார்த்தை அன்பை இசைத்த நாதமுனி.

ஒவ்வொரு எட்டுக்கும் முன், தும்பிக்கையால் தரை சோதித்து நடந்த காட்டு யானை.

அவன் வளர்த்த காடுகளுக்குள் கூடு கட்டிக் குதூகலித்த குயில்களும் கிளிகளும் ஏராளம் ஏராளம்

பச்சைக் காடு எரிந்து சாம்பலாகிப் போனது. சிறகுகள் கருகி குற்றுயிராய்க் கிடக்கின்றன காடலைந்த பட்சிகள்.

ஊரெல்லாம் மணக்க வைத்த ஊதுபத்தி, வேல்க் கம்பாய் மாறிய விந்தை நிகழ்ந்தது.

நெஞ்சில் இடி இறங்கியது

மே 9-ம் தேதி காலை, கலை இலக்கியவாதிகளின் நட்டநடு நெஞ்சில் அந்த இடி இறங்கியது.

‘பெற்று வளர்த்த ஒற்றை மகனை...’

சேதி கேட்டு… நாலைந்து நாட்கள் மனநிலை பிறழ்ந்து அலைந்தேன்.

‘செளபாவா…!’ ‘செளபாவுக்கா…!’

ஈரமுள்ள எந்த நெஞ்சு தாங்கும் இதை?

அவன் எப்படி தாங்கிக்கொண்டான்! தன் தோட்டத்து தீக்கோழியைகூட, தலை வருடி வளர்த்தவனாயிற்றே! பிள்ளை அடிபட்டு வீழ்ந்ததும் செளபா எப்படி தவித்திருப்பான்..! அழுதிருப்பானா..? நெஞ்சடைத்துச் சாய்ந்திருப்பானா..?

கண் திறந்து உன் பிள்ளையைப் பார்த்தாயா செளபா? பார்த்திருக்க மாட்டாய். அந்தக் கோலத்தில் அவனைப் பார்க்கவா ஊட்டி ஊட்டி வளர்த்தாய்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கரு. பழனியப்பனும் நானும் கதை பேச வந்திருந்தபோது சொன்னாயே.. “என் மகனை ஐபிஎஸ் ஆக்கப்போறேன் வேலா” என்று. உன் கனவைக் கலைச்சுட்டானே செளபா!

புதைகுழியை பொக்லைன் மெஷின் தோண்டியபோதே எனக்குத் தெரியும்.. ‘நீ ரொம்ப நாள் உயிரோடு இருக்கமாட்டே’ன்னு. உன் மகனை நீ கொன்றிருந்தால் இன்னும் பல வருஷம் வாழ்ந்திருப்பாய். நீதான் அவனைக் கொல்லலையே. அவனா வந்து உன் மேலே விழுந்துட்டானே! கொன்றால் பாவம், தின்றால் தீரும் எனும் மிருகங்கள் வாழும் மண்ணில், எழுத்திலும் பேச்சிலும் மனிதம் வளர்த்த உன்னால் எப்படி உயிர் வாழ முடியும்? உன் உயிரை நீயே கருக்கிக் கொண்டாய்.

அழுத நெஞ்சங்கள்

சுற்றி காவலர்கள் நிற்கும்போதும், உன்னைக் கண்டு கண்ணீர் வடித்த தோட்டத்து ஊழியரைப் பார்த்து, “சாப்பிட்டயா? இந்தா, போய் சாப்பிடு” என அள்ளிக் கொடுத்துவிட்டுப் போனதும்.. கோர்ட்டுக்கு வரும்போது உதட்டோரம் சிரித்துக்கொண்டே வந்ததும்.. அந்தச் சிரிப்பின் அடி அர்த்தம் புரிந்து, எத்தனை நெஞ்சங்கள் அழுதன தெரியுமா செளபா..?

குராயூர் குக்கிராமத்து தீக்குச்சி நீ. ஊடகப் பெருவெளியில் ஏற்றிய தீபங்கள் எத்தனை.. எரித்த குப்பைகள் எத்தனை..! எழுதுகோலை வாளாக்கி நீ ஆடிய களங்கள் எத்தனை! எழுத்துகளை எரிகற்கள் ஆக்கியவன் நீ! கள்ளிக்காட்டு கருக் குழந்தைகளைக் காப்பாற்றிய சமூக மருத்துவன் நீ!

‘என்னால் எழுத முடியாது; நான் வரமாட்டேன்..’ என்று அடம்பிடித்த என்னை இழுத்துப் பிடித்து ரயிலேற்றிக் கொண்டுபோய், ஆசிரியர் அசோகன் முன்பு நிறுத்தினாய். பெருந்தகை பாலசுப்பிரமணியன் அய்யா அவர்களிடம் பொங்கப் பொங்க என் எழுத்துப் புகழ் பாடினாய்.

“எத்தனை நாள் ஆனாலும் சரி. எழுதிட்டுதான் வெளியே போகணும்” என என்னை இழுத்துப் போய் உன் தோட்டத்தில் என்னை அடைத்தாய். அங்கிருந்துதானே ஆங்காரச் சூறாவளியாய் என் ‘குற்றப் பரம்பரை’ கிளம்பியது..!

நாலு திக்கும் பச்சை மலைகள் சூழ, நடுவில் ஒரு பெருமரத்துக் கிளை நிழலில் என்னை அமர வைத்து, எழுதச் சொன்னாய். எனக்கான பானங்களையும், பதார்த்தங்களையும், ஆடுகளையும், கோழிகளையும், மீன்களையும் ஆக்கி ஆக்கி எடுத்துக்கொண்டு, குடிலுக்கும் மரத்துக்கும் நடையாய் நடந்தாயே..! வைத்துவிட்டும் போகமாட்டாய். “சாப்பிடுங்க வேலா.. சாப்பிடுங்க வேலா..” என ஊட்டிவிட்டுக்கொண்டே, “உங்ககிட்டே இருந்து எழுத்து வரணும். அம்புட்டுத்தான்” என்பாய்.

என் ‘குற்றப் பரம்பரை’ நாவலில் என்னை வில்லாயுதமாகவும், உன்னை வையத்துரையாகவும் அடையாளப்படுத்தி பூரித்தவன் நீதானே..!

இப்பிடி ஒரு மனுசனா

ஒருநாள் சொன்னேன். “செளபா! ‘குற்றப் பரம்பரை’ நாவலை உனக்கு காணிக்கை ஆக்கப்போறேன்…” என்று. “அட போய்யா..” என்கிற மாதிரி ஓரப் பார்வையால் புறந்தள்ளிவிட்டுப் போனாய். நான் மிரண்டு போனேன்.. ‘இவன் என்னடா மனுசன்.. இப்பிடியும் ஒரு மனுசனா..!’ என.

என் சிறுகதைச் செடி வேர்களில் உரமிட்டு, நீர் பாய்ச்சி, ஆயிரம் கிளை விரித்து நிற்கும் ஆலமரமாய் ஆக்கியவன் நீ. நீயின்றி வந்திருக்காது என் ‘குற்றப் பரம்பரை’. நன்றிக் கடனாற்ற விடவில்லை நீ.

அப்புறம் யோசித்தேன். உனக்கு நான் மட்டுமா ஓவியம்? உன் தோட்டத்து அன்னம் போஷித்த திரையுலக இமயங்கள் எத்தனை பேர்..! எழுத்துலக ஜாம்பவான்கள் எத்தனை பேர்..! கதை எழுத வந்தவர்கள் எத்தனை பேர்..! கதை பேச வந்தவர்கள் எத்தனை பேர்..! தேடித் தேடி வரவைத்தது உன் நெஞ்சுப் பிசுக்கு.

தோட்டத்தில் நீ மட்டும் தனித்திருந்த ‘ஒருநாள்’ உண்டா..? பற்றவைத்த அடுப்பு நெருப்பு அணைந்ததேது? விளைச்சலை எல்லாம் விருந்து படைத்தாய். நாடி வருபவர்களின் சந்தோசத்தில் மனம் குளிர்ந்தாய். எல்லோரும் உன் அன்புக்கு கடன்பட்டோம். யாரும் தீர்க்கவில்லை.

2000-ம் ஆண்டின் கடைசி இரவை, நாம் இருவரும் கருவாட்டுக் கூட்டுகளோடு தோட்டத்தில் களித்தோம். பச்சைப் புல் தரையில் இருவரும் தூங்கினோம்..! தாயும் பிள்ளையும் போல் ஒருவர் தலையை ஒருவர் கோதி விட்டுக்கொண்டு பூர்வீக ரத்தத் தடயங்களை நினைவு கூர்ந்தோம்..!

ரத்த சம்பாஷணை

அது என்னமோ செளபா.. என் நட்பு வளையத்தில் உன்னுடன் மட்டுமே அந்த ரத்த சம்பாஷணை நடந்தது.

புத்தாண்டின் விடிகாலையில் நான் கிளம்பி மதுரை வந்துவிட்டேன். 10 மணிக்கு தொலைபேசியில் அழைத்தாய்.

“ம்.. சொல்லுங்க செளபா” என்றேன்.

ஒரு வார்த்தைகூட பேசாமல், ‘மூசு.. மூசு..’ என பத்து நிமிடம் குலுங்கிக் குலுங்கி அழுகிறாய்.

நான் குலைநடுங்கிப்போய், “செளபா.. செளபா.. என்னாச்சு செளபா! ஏன், என்ன?” என்று பதறுகிறேன்.

“எஞ்சாமி.. வேலா! புதைகுழிக்குள்ளே இருந்த என் பாட்டன், முப்பாட்டனை எல்லாம் கிளப்பி விட்டுட்டய்யா! நீ இங்கிருந்து கிளம்பிப் போகவும், உன் சிறுகதையைப் படிச்சேன். என்னாலே தாங்க முடியலேடா அய்யா..!” என மறுபடியும் அழுதாய்.

எனக்கு பேச்சு வரலே. ஆறுதலும் சொல்ல முடியலே. ரெண்டு பேரும் அழுகிறோம்.

கழுத்தோடு வளைத்துக் கட்டி அணைத்து, என்னை கதை எழுதவைத்த நீ.. உன் சொந்தக் கதையைச் சொல்லாமல் மறைத்துவிட்டாய். என்னிடம் மட்டுமல்ல.. எவரிடமும் நீ சொன்னதாகத் தெரியவில்லை. இங்கு யாருக்கு இல்லை துயரம்? ஒருவேளை பூட்டி வைக்காமல் நீ பகிர்ந்திருந்தால்.. உன் உப்பைத் தின்ற யாராலாவது மாற்று யோசனை கிடைத்திருக்கும்.

ஒரு பிள்ளை எப்படியெல்லாம் வளரக் கூடாது என்பதற்கு உன் மகனை ஓர் உதாரணமாகவும், ஒரு பிள்ளையை எப்படியெல்லாம் செல்லம் கொடுத்து வளர்க்கக் கூடாது என்பதற்கு உன்னை ஓர் உதாரணமாகவும் காலம் கண்முன்னே நிறுத்தி இருக்கிறது.

காணி நிலம் வேண்டித் தோற்றுப்போன கவிராஜன் பாரதியின் கனவைச் சாதித்த நீ.. உன் பிள்ளையிடம் தோற்றுப்போனாய்.

ஒவ்வொரு அடியையும் கவனமாய் நடந்து கடந்த காட்டு யானை நீ.. பாசம் சறுக்கி படுகுழியில் சாய்ந்தாய்.

நீ காத்து வளர்த்த பச்சை மலைக்காடு, பற்றி எரிந்து சாம்பலாய்ப் போனது. சிட்டுகளும், குருவிகளும் சிறகு கருகி ஓரஞ்சாரமாய் கிடந்து ஓலமிடுகின்றன.

எந்த ஓலமும் இனி உனக்கு கேட்காது!

என்னை கதை எழுதவைத்த நீ..

இதையும் எழுத வைத்துவிட்டாய்..!

அட போடா பைத்தியக்காரா..! எல்லாரையும் அழவச்சுட்டு போய்ட்டியேடா..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x