

தோற்றத் தொன்மை, தொடரும் இளமை என்ற இரண்டு பெருமிதங்களையும் ஒருங்கே கொண்ட தமிழின் இந்தச் சிறப்பியல்பை உணர்ந்து, உள்வாங்கி, யுகபாரதி செதுக்கியுள்ள சிறந்த படைப்பு ‘மேல் கணக்கு’. தமிழுக்குள் வேரும் விழுதுமாகத் தொடரும் அழகியலை, தனித்துவமான சில கருத்தியல்களை, சொல்லாட்சிகளின் பெருமிதத்தோடு மீள்வாசிக்கிறார் யுகபாரதி. அதன் பயனாகவே இந்நூல் தமிழுக்குக் கிடைத்துள்ளது.
தன் நெஞ்சில் உணர்ந்த பெருமிதத்திற்குப் பின்வருமாறு சொல்வடிவம் கொடுத்திருக்கிறார் யுகபாரதி, ‘யாரோ எட்டி உதைத்து, இலக்கியக் கடலுக்குள் விழுந்தவன் கைநிறைய முத்துக்களுடன் கரைசேர்ந்ததுபோல் இருக்கிறது. பூமிப்பந்தின் மேலே ஓர் இறகுபோலப் பறக்கும் பாக்கியத்தைச் சங்கப் பாடல்கள் வழங்குகின்றன. ஓரிரு சொற்களின் உள்பொருளைக் கண்டதுமே அவை கண்திறந்த காகிதச் சிலைகளாக எனக்குத் தோன்றின’ என்கிறார்.
அகநானூற்றில், புறநானூற்றில், முத்தொள்ளாயிரத்தில் யானையின் ‘மனசும்’ உடல்மொழியில் பேசப்படும் விதத்தை ஒப்பிடும்போதே கலித்தொகை, திருமூலர், அழுகுணிச் சித்தர் என்று எங்கெங்கோ பயணித்து, கடைசியில் ‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என்ற கண்ணதாசன் திரைப்பாடல் தரும் தத்துவத் தரிசனத்தில் கொண்டுவந்துவிடுகிறார்.
சங்க இலக்கியத்தில் தொடங்கினால் என்ன? ‘யானை டாக்டர்’ வி.கிருஷ்ணமூர்த்தியின் பெயரைக் குறிப்பிடாமல் யானை பற்றிய உரையாடல் நிறைவு பெறுமா? வைக்கம் பஷீரின் ‘யானை முடி’ கதை எல்லாம் எனக்குப் புதிய சாளரம்.
‘சொல்வலை வேட்டுவம்’ என்ற முதல் கட்டுரையை முடிக்கும் விதத்தில்தான் யுகபாரதி தனித்து நிற்கிறார். ‘ஆயிரம் யானைகளைக் கொன்றவனைப் புகழ்ந்த ஒரு புலவர், பொற்தேங்காயைப் பெற்றுச் சுகபோக வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.
ஆனால், அதே மரபில் வந்த இன்னொரு புலவன், ஆயிரம் கவிதைகளை எழுதி, ஒரே ஒரு தேங்காயை அன்பின் நிமித்தம் கொடுத்த குற்றத்திற்காகத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையால் அல்லோலகல்லோலப் பட்டுச் செத்திருக்கிறான். செத்தவனின் பெயர் பாரதி என்பது சின்னப் பிள்ளைக்குக்கூடத் தெரியும்’ என்பதை வாசித்து உறைந்தேன்.
ஹைக்கூவின் வடிவம்தான் தமிழுக்குப் புதிதே தவிர, அது உள்ளடக்கிய தத்துவமோ சொல்முறையோ புதிதில்லை என்ற கருத்தை ‘அதிவிசேஷ வண்ணத்துப்பூச்சி’ என்ற தலைப்பில் முன்மொழியும் யுகபாரதி ‘உறங்குவது போலுஞ் சாக்காடு’ என்ற வள்ளுவரின் சுண்டக் காய்ச்சிய பிரபஞ்சச் சொல்லாடலுக்கு, புரிதலுக்குச் சற்றும் குறைவில்லாதவை ‘ஆழ்ந்து உறங்குகிறது / ஆலயமணியின் மேல் / வண்ணத்துப் பூச்சி’ என்ற பூஸனின் ஹைக்கூ என்று ஒப்பிட்டு அறிவிக்கிறார்.
சங்க இலக்கியப் புலவர் குறுங்குடி மருதனாரின் ‘மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்’ என்ற அகநானூற்று (4) வரியை, முத்துலிங்கம் எழுதிய திரைப் பாடலில் வரும் ‘மணிவாசல்’ என்ற சொல்லாட்சியுடன் ஒப்பிட்டு அழகு பார்ப்பதோடு, ‘இரண்டு படிமங்களை இணைத்து ஓர் அற்புதத்தை உணர ஜென் உதவுவதைப் போல, இரண்டு தனித்தனிச் செயல்பாட்டை ஒன்றாக்கிப் பார்ப்பதில் ஒரு தவறும் இல்லை’ என்ற நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்துகிறார் யுகபாரதி.
மூன்று வரியோ முப்பது வரியோ ஒரு நல்ல கவிதை எனில், அது வார்த்தைகளின் கணக்கை வைத்து வரையறுக்கப்படுவதில்லை என்று சொல்லும் யுகபாரதி, வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவலையும், கண்ணதாசனின் ‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் / அருள்மொழி கூறும் பறவையின் ஒலி கேட்டேன்’ என்ற திரைப்பாடல் வரியையும் ஒரே மூச்சில் நினைவுகூர்ந்து திறனாய்வு செய்கிறார்.
ஆழமான, பரந்துவிரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில், நுட்பமான, அதேநேரத்தில் விரிவான வாசிப்பு அனுபவமும், எழுத்தாற்றலும் ஒருங்கே கொண்ட சிலர்தான் இப்படி எல்லாம் எழுதுவது சாத்தியம். ‘மேல் கணக்கு’ என்கிற இந்த நூலை வாசிக்கும்போது என்னை மீண்டும் மீண்டும் கவர்ந்திழுத்தது யுகபாரதியின் மொழிநடைதான். ‘இயற்கையையே அறிவாகக் கொண்ட பறவைகள், யுகயுகங்களாகத் தம்முடைய சிறகுகளால், வானையும் மண்ணையும் அளந்து அழகாக்கி வருகின்றன.
ஒரு வான்குருவி கட்டுகிற கூட்டிற்கு இணை ஒன்றுமில்லை. மரத்தில் தொங்கியவாறு கூடமைக்கும் குருவி, இயற்கையிலிருந்தே தன்னை வடிவமைத்துக்கொள்கிறது. கீழே வாசல் வைத்து அது அமைக்கும் கூட்டில் வாழ்விற்கான புத்திசாலித்தனமும், பொறுப்புணர்வும் சேர்ந்துள்ளன. பறவையாக முடியாத மனிதர்களோ தமக்கேற்ப ஒரு பறவையைக் கற்பனையில் உருவாக்கி, கண், காது, மூக்கினை வைக்கிறார்கள்’ என்றதுடன், பல்வேறு படைப்பாளிகளை ஆங்காங்கே நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார்.
என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு புதிய வகையான ஆற்றுப்படுத்துதல்தான். ‘உனது அழுகை உனக்கே அந்நியமாகும்போது / கண்ணீரில் ஈரமிருக்காது / உலர்ந்த உப்பு கிளர்ந்து உதடுகளில் படியும் / அமைதியாக அழு / கடலைப் பார்த்து / மலையைப் பார்த்து / ஒற்றைக் கூழாங்கல்லைப் பார்த்து / கிணற்றுக்குள் அடைபட்ட நீரில் மிதக்கும் நிலாவைப் பார்த்து அழு / அழுகை உனது அழுக்கைக் கழுவும்’ என்ற ரமேஷ்பிரேதனின் வரிகளை யுகபாரதி கோடிட்டுக் காட்டுகிறார். எனக்கு ரமேஷ்பிரேதனை உடனே, இப்போதே வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இதுவரையில் பல்வேறு ஆய்வாளர்கள் சங்க இலக்கியத்தைப் பெரும் உருவமாக நம்முன் கொடுத்துள்ளனர். அதனை ஓரம்கட்டிவிட்டு, ரசனையின் வழியே சங்க இலக்கியத்தை அணுகி, அதைத் தம் வாசகர்களுக்கு ‘மேல் கணக்கு’ என்கிற நூல் மூலம் கொடுத்துள்ளார்.
பண்டைய இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்குக் காணப்படும் எட்டு வகையான பொருள்கோள் முறைகளில் ‘கொண்டுகூட்டுப் பொருள்கோள்’ முறையை இந்நூலில் கையாண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் யுகபாரதி. பதிவுகளாக அமைந்துள்ள பதினொரு கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பொருளின் ஆழ அகலங்களைப் புலன் விசாரிக்கின்றன.
மேல் கணக்கு
யுகபாரதி
நேர்நிறை பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 98411 57958