

இளம் எழுத்தாளர்களைத் தன் கடிதங்களின் மூலம் உற்சாகப்படுத்தியவர் தி.க.சி. தமிழ் இலக்கியத்துக்கு இவரின் பங்களிப்பு முக்கியமானது. தி.க.சியின் திறனாய்வுக் கட்டுரைகளை அவரது நண்பர் கழனியூரான் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவந்திருக்கிறார். கவிதை, சிறுகதை, நாவல், இதழ், ஆளுமை, பொது என ஆறு பிரிவுகளில் 142 திறனாய்வுக் கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. இலக்கியவாதிகளுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தி.க.சி. திறனாய்வுக் களஞ்சியம்
தொகுப்பாசிரியர்: கழனியூரன்காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.950
தொடர்புக்கு: 98404 80232
என்றும் வாழும் ஜேகே: தமிழ்ப் படைப்புலகமும் வாசகர்களும் கொண்டாடிய ஜேகே எனும் இரண்டெழுத்தின் வீரியமும் தாக்கமும் தமிழ்ச் சூழலில் இன்னமும் குறையாமல் இருக்கிறது என்பதற்கான எழுத்து ஆதாரமாக வெளிவந்துள்ளது இந்நூல். ஜெயகாந்தனின் படைப்புகளை விரும்பிப் படித்த, ஒரு வாசகராகத் தள்ளி நின்று ரசித்த கவிஞர் கருமலைப்பழம் நீ, தேடித் தேடித் தொகுத்த பல சுவையான குறுங்கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஜெயகாந்தன் பிற எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் கருத்துகளையும், ஜெயகாந்தனைப் பற்றி கு.அழகிரிசாமி, சிட்டி - சிவபாதசுந்தரம், கண்ணதாசன், நா.வானமாமலை ஆகியோர் சொன்ன கருத்துகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
ஜெயகாந்தனின் நேர்காணல்களும் கவிதைகளும் திரையிசைப் பாடல்களும் நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ‘அப்பாவுக்கொரு கடிதம்’ என்று ஜெயகாந்தனின் மகன் ஜெயசிம்மன் எழுதிய கடிதமும் ‘அப்பா’ என்று மகள் தீபலட்சுமி எழுதிய சிறு கட்டுரையையும் இப்போது படிக்கையிலும் என்றும் எழுத்தில் வாழும் ஆளுமையாக ஜேகே வலம்வருவார் என்பது மீண்டும் நிரூபணமாகிறது. - மு.முருகேஷ்
ஜெய ஜெய காந்தன்
கருமலைப்பழம் நீ
புரட்சி பாரதி பதிப்பகம்
விலை: ரூ.270
தொடர்புக்கு: 90430 50666
படைப்பாளியின் உருமாற்றம்: நம் காலத்தின் தவிர்க்க முடியாத ஒன்றாகி, கவசகுண்டலமாகிப் போன அலைபேசி, வாழ்க்கையின் விளைவுகளை உற்பத்தி செய்வது தொடங்கி வாழ்வை முடித்து வைப்பது வரையிலான காரண காரியங்களை எவ்வாறெல்லாம் செய்துகொண்டிருக்கிறது என்பதை இத்தொகுப்பின் கவிதைகள் உணர்த்துகின்றன.
இக்கால இளைஞர்களின் குறி உரையாடல் தொடு திரையின் அலங்காரமாக மாற்றம் கொண்டுள்ளதைக் கவிதைகள் காட்சிப்படுத்துகின்றன. கைகூடாத காமம், கைகூடக் காத்திருக்கும் காதல் எனத் தற்கால இளைஞனின் பாடுகளைத் தள்ளி நின்று பாராமல் தன்னையே இளைஞனாக உருமாற்றம் செய்துகொண்டு கவிதை புனைந்திருப்பது பாராட்டுக்குரியது.
உரைநடை மேலோங்கிக் கவித்தன்மையை இதோ இழந்துவிடப் போகிறது எனும்போதெல்லாம் ஏதேனுமொரு கவிச்சொல் கவிதைகளை வேறு தளத்திற்கு நகர்த்தி, வாசகரைத் தளர்வுகொள்ளாதிருக்கச் செய்கிறது. சம்பவங்களை, சாதனங்களைக் கவிதையின் பாடு பொருளாக்கும்போது, உரைநடைத்தன்மை மேலோங்கிவிடுவது தவிர்க்க இயலாதது எனச் சமாதானம் கொள்ளாமல், கவிதையாக்குவதே நம் சவாலாக உள்ளது.
இத்தொகுப்பில் காதலையும் காமத்தையும் பிணைத்துச் சொல்லியிருப்பதன் வாயிலாகப் புதுவித உணர்வை உருவாக்கிப் பயணத்தை நிகழ்த்த வைக்கிறார் கவிஞர். காமத்தைத் தணிக்கத் தன் கையை அதற்கான சாதனமாக்கும் காதல் உள்ளம் கவிதையாகத் ததும்புகிறது. ‘அதன் பூவை முகர்ந்து பார்க்கிறேன்/ இப்போது / எனது பால்யம் மஞ்சணத்திக் காடுகளாகிக் கொண்டிருக்கிறது’ என்பன போன்ற வரிகள் வாசிப்பவர்களுக்குள் ஒருவிதத் துள்ளலை உருவாக்கும். - ந.பெரியசாமி
சில்க்கின் கண்களை அணிந்துகொண்ட ஒருத்தி
செந்தி
வேரல் புக்ஸ்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 95787 64322
மக்கள் மாமன்ற நூலகம்: திருப்பூரின் அடையாளம்! - திருப்பூரில் வாசகர்களுக்கு அடைக்கலமாக, ஒரு வேடந்தாங்கலாக 30 ஆண்டுகளாக விளங்கிவருகிறது ஒரு நூலகம்; அது திருப்பூர் மக்கள் மாமன்றம் நூலகம்.
லட்சக்கணக்கான வாசகர்கள் இந்த நூலகத்தில் நூல்களை, இதழ்களைப் படித்துப் பயன்பெற்றிருக்கிறார்கள். திருப்பூரின் பல அரசு நூலகங்களுக்கு இல்லாத பெருமை இந்தத் தனியார் நூலகத்திற்கு உண்டு. அரசு நூலகங்களின் விடுமுறை நாள்களிலும் இது இயங்கும் என்பது இன்னும் விசேஷம்.
இதை 30 ஆண்டுகளுக்கு முன் தொடக்கி வைத்த நஞ்சப்பா உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்ரமணியத்தைப் போலவே, இங்கு வந்து சென்றிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்களின் பெயர்கள் இந்நூலகத்தின் மகத்துவம் சொல்லும். எந்த இலக்கிய அமைப்பும் இங்கு இலவசமாகக் கூட்டங்கள் நடத்தலாம்.
புத்தக வெளியீடுகள், திருப்பூர் இலக்கிய விருது, குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது விழாக்கள் போன்றவை இங்கு நிறைய நடைபெற்றுள்ளன. ஏழை மாணவர்களுக்குச் சீருடை முதல் புத்தகங்கள் வரை, மருத்துவ ஆலோசனையில் சித்த மருத்துவ முகாம் முதல் கண் சிகிச்சை முகாம் வரை இந்நூலகம் நடத்தியுள்ளது.
மக்கள் மாமன்றம் வெளியிட்டிருக்கும் ‘திருப்பூர் இலக்கியச் சிற்பிகள்’ உள்பட 10 நூல்கள் அதன் இலக்கிய, பண்பாட்டு ஈடுபாட்டைச் சொல்லும். இந்த நூலக உறுப்பினர்கள் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டும்.
இலக்கியப் போட்டிகள், பரிசளிப்புகள், கெளரவிப்புகள், வாசகர்களுக்கான தமிழ் அறிவுப் போட்டி உள்ளிட்ட விஷயங்களையும் இந்த நூலகம் நடத்தியுள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை நோக்கி நகரும் திருப்பூர் நகரின் பெருமைகளில் இதுவும் ஒன்று. - சுப்ரபாரதிமணியன், எழுத்தாளர்.