அயல்மொழி நூலகம்: தமிழில் கணினிப் பயன்பாடு

அயல்மொழி நூலகம்: தமிழில் கணினிப் பயன்பாடு
Updated on
2 min read

கணினியின் செயல்பாடுகளைத் தமிழ் மொழியில் மேற்கொள்வது ஒரு தொடர்பயணமாக நிகழ்ந்துவருகிறது. ‘Tamil Computing’ என்கிற இந்நூல், கணினியைத் தமிழில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒரு தொகுப்பாக முன்வைக்கிறது. சென்னைத் தொழில்நுட்பக் கழகத்தின் கணினி அறிவியல் - பொறியியல் துறையில் பேராசிரியராகவும் புலத் தலைவராகவும் உள்ள ஆர்.பொன்னுசாமி, இந்நூலை எழுதியுள்ளார்.

கணினியில் தமிழ்வழிச் செயல்பாடு என்பது முதன்மை நோக்கமாக இருப்பினும், அதைக் கற்பிப்பதன் முதல் கட்டமாக எளிமையான ஆங்கிலத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எழுத்துருக்கள், விசைப்பலகை போன்ற அடிப்படைச் செய்திகளிலிருந்தே இந்நூல் விளக்குகிறது.

மனிதப் பேச்சையும் எழுத்தையும் புரிந்துகொள்ளும் கணினியின் திறனான இயற்கை மொழிவழிச் செயலாக்கம் (NLP-Natural Language Process), மனித மொழிகளைப் புரிந்துகொள்ள உதவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான பெரிய மொழி மாதிரி (Large language model) போன்றவையும் இதில் விளக்கப்பட்டுள்ளன.

பெரிய மொழி மாதிரியைப் பயன்படுத்த வழிகாட்டும் வகையில், கணினி நிரல்களும் தரப்பட்டுள்ளன. எம்.எஸ். ஆபிஸ், எம்.எஸ். விண்டோஸ் போன்றவற்றைத் தமிழில் பயன்படுத்துவது, கூகுள், யூ டியூப் போன்றவற்றில் தமிழில் தேடுவது போன்றவற்றுக்கும் இந்நூல் வழிகாட்டுகிறது. மேனிலைப் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் மட்டுமல்லாமல், கணினியைச் சார்ந்து பணிபுரியும் அரசு, தனியார் துறை ஊழியர்களும் இந்நூலைப் படிக்கலாம். - ஆனந்தன்

தமிழ் கம்ப்யூட்டிங் (Tamil Computing)
ஆர்.பொன்னுசாமி
அலைடு பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட்
விலை: ரூ.950
தொடர்புக்கு:91768 31915

நம் வெளியீடு | பொது சிவில் சட்டம்: சில தெளிவுகள்

இந்திய மக்கள் அனைவரின் தனிப்பட்ட உரிமைகளையும் ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டுவருவதே பொது சிவில் சட்டத்தின் முதன்மை நோக்கம். என்றாலும், ‘எண்ணற்ற வேற்றுமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், முரண்பாடுகள் பலவற்றையும் கடந்து, ஒற்றுமையாக வாழ்வதற்கு இணக்கம்தான் அவசியமேயன்றி, தனிப்பட்ட உரிமைகளைப் பொதுவாக்குதல் அல்ல’ என்று முன்வைக்கப்படும் வாதங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.

‘சிறுபான்மைச் சமூக மக்களின் மீது பொது சிவில் சட்டத்தைத் திணிப்பது, அவர்களின் தனிநபர் உரிமைகளையும் பாதுகாப்பையும் நீர்த்துப்போகச் செய்வதுடன், அவர்களின் பண்பாட்டுச் சுயாட்சியை அழித்து, மதச் சுதந்திரத்தையும் சீர்குலைக்கும்’ என்பது எதிர்ப்பு வாதம்.

அதேவேளையில், ‘பாலினச் சமத்துவத்தையும் பெண்களின் உரிமைகளையும் உறுதிசெய்தல், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, ஜீவனாம்சம் போன்றவற்றில் சம உரிமைகளை உறுதிப்படுத்தல் போன்றவை சாத்தியம்’ என்ற பொது சிவில் சட்ட ஆதரவுக் குரல்களும் ஒலிக்கின்றன. இந்தப் பின்புலத்தில் இச்சட்டம் குறித்து இந்த நூல் பதில் தருகிறது.

பொது சிவில் சட்டம்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.200
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74012 96562

திண்ணை | ‘நிகரி’ சமத்துவ ஆசிரியர் விருதுகள்: வகுப்பறையில் சாதி, மத, பாலினப் பாகுபாடுகளைக் களைந்து சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும், பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் 2013ஆம் ஆண்டு முதல் ‘மணற்கேணி’ ஆய்விதழ் சார்பில் ‘நிகரி - சமத்துவ ஆசிரியர்’ என்னும் விருதளிக்கப்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டுக்கான ‘நிகரி - சமத்துவ ஆசிரியர்’ விருதுகள் விழுப்புரம் அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அ.செந்தில் வேலனுக்கும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர், பேராசிரியர் இரா.அழகரசனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது.

சென்னை நாள் கண்காட்சி: சென்னை நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறை சார்பில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சென்னையின் பழமையையும் பண்பாட்டையும் விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இந்த மாதம் 29ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.

தமிழ்த்தடம் இளம் ஆய்வறிஞர் விருது: பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் பெயரிலான இளம் ஆய்வறிஞர் விருதிற்குப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், அகராதியியல், வரலாறு, பண்பாடு, நாட்டார் வழக்காற்றியல், தொல்லியல், மானிடவியல் போன்ற தமிழ் ஆய்வுக் களங்களில் தொடர்ந்து இயங்கிவருபவராக விண்ணப்பிப்பவர் இருத்தல் வேண்டும்.

குறைந்தது, ஒரு தரமான ஆய்வு நூலையாவது வெளியிட்டிருக்க வேண்டும். சிறந்த ஆய்விதழ்களில் கட்டுரைகளை எழுதியிருப்பது அவசியம். 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். பரிந்துரைகளை 2024 அக்டோபர் 15க்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலதிகத் தொடர்புக்கு: tamilthadam22@gmail.com,93828 53646, 88257 67500

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in