Published : 19 May 2018 08:49 AM
Last Updated : 19 May 2018 08:49 AM

மாறும் உலகை மொழிபெயர்த்த கவிஞன்

வனிகா என்ற பெயர் எழுத்தாளர் சுஜாதாவின் கதாபாத்திரத்தினுடையது. 1990-களில் ஏற்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பாரம்பரியத் தொழிலை இழந்தவர்களில் ஒருவர் யவனிகா ஸ்ரீராம். வியாபாரத்துக்காக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் அலையத் தொடங்கியபோது, இவரது கவிதைகளில் மாறும் நிலங்கள், தாவரங்கள் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும்.

சிறு துணி வணிகனாக கிழக்கு ஆசிய நாடுகளி லும் பயணம் செய்யத் தொடங்கியபோது, ஒரு புதிய வர்த்தகக் காலனியாக உருவாகி மேல்கீழாக மாறப்போகும் இந்தியாவின் நிலங்களை, மனிதர்களைத் தீர்க்கதரிசனமாகப் பார்த்துவிட்டார் யவனிகா. அப்படியாக ஊகித்து உணர்ந்த அவரது கவிதைகளின் முதல் தொகுதிதான் ‘இரவு என்பது உறங்க அல்ல’. இரவு என்பது வேறு எதற்கு என்று கவிதை ஆசிரியனிடமே கிண்டலாகக் கேட்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. புலம்பெயர் தொழிலாளர் களுக்கும், அயல்பணி, தகவல் தொழில்நுட்ப ஊழியம் செய்பவர்களுக்கும், காதலர்களுக்கும், பெருகிவரும் மன அழுத்தக்காரர்களுக்கும், இரவு என்பது உறங்க அல்லாததாக மாறியிருப்பதுதானே இன்றைய எதார்த்தம்!

தங்க நாற்கரச் சாலையின் வருகையால் தொலைந்துபோன ஒரு கிராமத்தைத் தேடிப்போகும் பேருந்தை நாம் யவனிகாவின் கவிதைகளில் பார்க்கிறோம். ஒரு கிழக்காசிய சிறு நகரத் தின் சாயலை, தனது சொந்த ஊரான சின்னாளப்பட்டிக்குத் தன் மொழியால் ஏற்றிவிடுகிறார். பிரம்மபுத்ராவின் பள்ளத்தாக்குகளில் இயற்கையும் சாவகாசமும் அமைதியும் புகட்டப்பட்டு வளர்ந்த ஒரு இளைஞனை, சென்னையின் தகரக் கொட்ட டிக்குள் 72 மணி நேரங்களில் துப்பி உருளைக் கிழங்கு தின்னும் கட்டிடத் தொழில் இயந்திரமாக ஆக்கிய எதார்த்தம்தானே நம்முடையது.

ஒரு நாகரிகத்தின் கரையில் அமர்ந்துகொண்டு மாற்றங்களால் பறிக்கப்பட்ட, துக்கித்த, வலித்த, நரையேறிய உடலைக் கொண்ட ஒரு நாடோடியின், தோல்வியுற்ற பௌராணிகனின் கதை என்று இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளில் வரும் கடவுள் சம்பிரதாய மான உருவம் அல்லர்; இருந்ததாக நம்பப்படும் ஒரு ஒழுங்கின் இயற்கையின் முதிர்ந்த, தன்னைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாத கதாபாத்திரம் தான் அவர்.

கடவுளின் இடத்தில் கோட்பாட்டையும் கார்ல் மார்க்ஸையும் வைக்கிறார் யவனிகா. கடந்த 20 ஆண்டுகளாக நவீனத் தமிழ்க் கவிதைகளில் புழங்கப்படும் கடவுளை யவனிகாதான் முன்நிர்ணயம் செய்தார். அப்படிப் பார்க்கையில், யவனிகாவும் கடவுள் நம்பிக்கையாளன்தான். சொர்க்கமாய் இல்லாத ஒன்றைக் கடவுள் படைக்கும் திறன் பெற்றிருந்தார் என யவனிகாவும் நம்பியிருக்கவில்லை.

வரலாற்றின் பெருஞ்சுமையைத் தான் மட்டுமே சுமக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரக்ஞை யும் பிரமையும் கற்பிதமும் கொண்ட மனித உயிர்களின் பிரதிநிதியாக கார்ல் மார்க்ஸைக் காண்கிறார் யவனிகா. ‘ஒரு மனித உயிரின் ஞாபகம்’ கவிதை மார்க்ஸியர்களால் கொண்டாப்பட வேண்டிய கவிதையாகும்.

1990-களுக்கு முன்னர் தமிழில் எழுதப்பட்ட புதுக்கவிதைக்கும் 90-களுக்குப் பிறகு நவீனக் கவிதை என்று சொல்லத் தொடங்கப்பட்டதற்கு உள்ளடக்கம், பண்புரீதியான வித்தியாசம் உள்ளதா? அதற்கான பதிலை யவனிகா ஸ்ரீராம் கவிதைகளின் வாயிலாகத் தெரிந்துகொள்வது கூடுதல் அனுகூலமானது. புதுக்கவிதைகள் அத்வைத நோக்கும் அதன் அம்சங்களான தன் விசாரணையையும், சலிக்கும் பண்பையும் கொண்டவை என்று கூற முடியும். நவீனக் கவிதைகள் அத்வைதம் என்னும் ஒருமையிலிருந்து விலகி இருமை, பன்மை, பெருக்கம் என்ற கூறுகளைப் பெறுகின்றன. அங்கு தான் பெண்ணரசிகள் கவிதைகள் எழுதுகிறார்கள். கவிதையே வாளாகட்டும் என்ற லட்சியத்துடன் தலித் அரசியல் கவிதைகள் பிறக்கின்றன. ஒரு புனைகதையின் இடுபொருட்களையும் அழகியலையும் சேர்த்து நவீனக் கவிதையானது தோற்றம் கொள்கிறது.

பூமியிலுள்ள தாவரங்கள், பாலூட்டிகள், மெல்லுடலிகள், வெவ்வேறு மன, நிலப் பிரதேசத்து மனிதர்கள், உணர்வுநிலைகள், பால்நிலைகள், பாலியல் நிலைகள் என பல்லுயிர்கள் வாழும் பிரபஞ்சமாக யவனிகாவின் கவிதைகள் துடித்துக்கொண்டிருக்கின்றன; நவீன கவிதை, பொருட்களுக்கும் உயிரையும் உணர்வையும் கொடுத்துவிட்டது.

உடலின் துக்கத்தை மட்டுமல்ல, மனத்தின் வலியையும் உடல்தான் இங்கே சுமக்கிறது. அங்கே உழைப்பதும், விழித்திருப்பதும், கனவு காண்பதும், காதலிப்பதும், நோய்வாய்ப்படுவதும் உடல்தான். நினைவுகளையும் லட்சியங்களையும் சுமப்பது உடல்தான், உடல்தான்.

***

வலியும் சந்தோஷமும் கொண்ட இயந்திரமாக மனிதனைப் பாடுவதைப் போலவே இயற்கையை யும் இயந்திரமாகவே பாவிக்கிறார் யவனிகா. இயற்கையைத் தனி வாழ்வு கொண்ட ஒன்றாகவோ நிர்க்குணத்துடனோ அழகுடனோ பார்ப்பதில்லை. அனைத்து வலிகளுடனும் நினைவின் சுமைகளுடனும் ஏமாற்றத்தின் முனைகளில் வாழ்ந்து தீர்க்கும் மானுட உயிர்களுக்குப் போதையும் காமமும் மட்டுமே தப்பிக்கும் வழிகளாக இவர் உலகத்தில் உள்ளன. ஆனால், உபரிச்சந்தையின் விலைவாசி வரைபடத்தில் போதை எளிதில் வாங்கப்படக் கூடியதாகவும் காமம் விலை மிகுந்ததாகவும் உள்ளதையும் கவிதைகள் கூடவே சொல்கின்றன.

பெண்ணுடன் பேச, உறவு கொள்வற்கான விழைவோடு பெண்ணாகவே ஆகும் விழைவு இவர் கவிதைகளில் புதிய தன்மையாக உள்ளது. உலகம் மாறுவதைப் பெண்களின், பாலியல் பழக்கவழக்கங்களின் மாறுதல் வழியாகப் பயத்துடன் இந்தக் கவிதைகள் காண்கின்றன.

உயிரை நீட்டித்து வைத்திருக்க நப்பாசையாக ஒரு ராத்தல் மைதாமாவைக்கூட வாங்குவதற்கு ஏலாத ஓட்டை நாணயங்களாக உடல்பையில் கிணுகிணுக்கிறது காமம். அது ஒன்றே ஆறுதலாக, கனவாக அவனது கவிதைப் பிரபஞ்சத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உள்ளது (இந்நாட்களில் ஒருவனை/ காதல் மட்டுமே அர்த்தப்படுத்திவிடக்கூடும்/ மேலும், ஒரு பெண்ணின் தேர்வுதான்/ இந்நகரத்தின் அலங்காரமும்கூட).

அறிவின் நம்பிக்கையில் எழுந்து அறிவின் பயனின்மையைப் பாடுவது; கருத்தியல் நம்பிக்கையுடன் மேலே போய்,கருத்தியலின் தோல்வியைப் பாடுவது; கோட்பாட்டின் பாட்டையில் பயணித்து கோட்பாட்டின் வியர்த்தத்தை எழுதுவது; உடலின் விடுதலையில் தற்காலிகமாகச் சுகித்து உடலின் எல்லைக்குள் துக்கித்துப் பகிர்வது’ என்று இவர் கவிதைகளில் எழுதல், பறத்தல், அமர்தல் அமைகிறது.

புறாவின் அழுகைபோலத் தொனிக்கும் ஒப்பாரித்தன்மை, பெண்ணின் குத்தல் தொனிக்கும் சாடைப் பேச்சு, வக்கணை, முச்சந்தியில் நின்று சாபமிடும் பைத்தியத்தின் உளறல், காதலின் களி உரையாடல், நடு இரவில் குறிசொல்பவனின் தரிசனம், வரலாற்றையும் தத்துவத்தையும் இடைவெட்டி உரைக்கும் கதைசொல்லி என்ற வெளிப் பாடுகளைக் கொண்டிருக்கிறது யவனிகாவின் கவிதைகள். சாண்டில்யன், ஞானக்கூத்தன், ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், கோட்பாட்டுக் கட்டுரைகளிலிருந்து யவனிகா ஸ்ரீராம், மரபற்றதும் அந்நியமானதாகவும் தோற்றமளிக்கும் ஒருவகைக் கவிதை மொழியை உருவாக்கியிருக்கிறார்.

யவனிகாவின் கவிதைகள் போர்ஹே உருவாக்காமல் விட்ட கற்பனை விலங்குகளின் உடலை ஒத்தனவாக உள்ளன. பல கலாச்சார அடையாளங்கள், கோட்பாடுகள், கதைகள், குழந்தைகளின் சொலவடைகள் ஒட்டிப்பிறந்த உயிர்கள் அவை; உலகளாவியவை. தமிழ்ப் பண்பாட்டுக்கு நெருக்கமான ஒரு அனுபவத்தைக்கூட, உலகின் வேறு விளிம்பில் உள்ள குடிமகன் ஒருவனுக்கு நடப்பதாக, வேறொரு கால, நில, வாழ்வுப்புலத்தில் பேசும் ‘அந்நிய பாவத்தை’ ஏற்படுத்திவிடுகிறார் யவனிகா. ஒரு நாவலின் பகுதிகளாக, இந்த மொத்தத் தொகுதியின் 256 கவிதைகளையும் வாசிக்க முடியும்.

இறகுகளைக் கொண்டதும் புனிதமானதும் இலேசானதுமான வஸ்து என்று கவிதையை வரையறுக்கிறார் ப்ளேட்டோ. யவனிகாவின் கவிதைகளை முன்வைத்து இறகுகளைக் கொண்ட புனிதம் துறந்த பொறுப்புகள் கனக்கும் வஸ்து என்று நான் சொல்கிறேன். முதலாளித்துவம் தொடங்கிய காலகட்டத்தில் இயந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்நியமாக்கினாலும் ஓரளவு தன்னிறைவுக்கும் வாழ்வாதாரத்துக்குமான வழிகளையாவது விட்டுவைத்திருந்தன. ஆனால், தாராளமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்கள் ஈடுபடுவதற்கு இயந்திரங்கள்கூடப் பறிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையைக் கவிஞர் யவனிகா ஸ்ரீராமைப் போலத் தமிழில் கலையழகுடனும் தீர்க்கதரிசனத்துடனும் உரைத்த ஒரு மார்க்ஸியக் கவிஞன் யாருமில்லை. ஆனால், அந்த விஷயம் இதுவரை தமிழ் மார்க்ஸியர்களுக்குத் தெரியாது என்பதுதான் துரதிர்ஷ்டம்!

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிமிடெட்,

எண். 6. மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை,

கே. கே. நகர் மேற்கு, சென்னை - 78.

தொலைபேசி : 918754507070 விலை : ரூ. 350

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு:

sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x