ஈழ யுகம்: சொற்களால் ஒரு நடுகல்

ஈழ யுகம்: சொற்களால் ஒரு நடுகல்
Updated on
2 min read

நமது அனுபவ எல்லைகளைக் கடந்த, தற்காலத்தின் நம்ப முடியாத அனுபவங்​களின் திரட்சி, கனவும் நினைவுமாக ‘போதமும் காணாத போதம்’ நூலில் படைக்​கப்​பட்​டிருக்​கிறது. இத்தொகுப்பைத் தமிழின் முதல் ‘துங்கதை’ என்கிறார் எழுத்​தாளர் அகரமுதல்வன். ‘துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே’ என்பது கந்த புராணத்தில் சூரபத்மன் யுத்தப்படல வரி. இத்தொகுப்பில் ஈழ யுத்தப் படலம், கதைக் களமாகி​யிருக்​கிறது.

‘குந்த ஒரு பிடி நிலமும், எரிய ஒரு பிடி நிலமும் சொந்தமாய் வேணும்’ என்று போராடிய​வர்கள் தோற்றுப் போயிருக்​கிறார்கள். ஆனாலும் தங்களுக்​காகப் போரிட்டு மாண்ட​வர்​களின் வீரத்தை ஈழத்தமிழர்கள் கொண்டாடு​கிறார்கள்.

‘சொந்த வீட்டிற்குச் செல்வதற்கும் வழியற்றிருக்கும் அவர்கள் புதைக்​கப்​படு​வ​தில்லை; விதைக்​கப்​படு​கிறார்கள்; அது புதைகுழி அல்ல விதைகுழி; உயிர் பிரிந்த பிறகு அவர்களின் உடல் வெற்றுடல் இல்லை, வித்துடல்’ என்றெல்லாம் இந்நூல் வெம்மை கலந்து வெளிப்​படும் மூச்சாய் வெளிப்​படு​கிறது.

ஈழப்போரில் தானாக முன்வந்து தெய்வங்கள் உதவிய​தாகத் தெரிய​வில்லை. மக்கள் உருகி உருகி வேண்டியும் தெய்வங்கள் காதில் போட்டுக்​கொள்ள​வில்லை. மக்கள் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடவுள்கள் இருந்​திருக்​கின்றனர் எனும் குமுறல்களை இந்நூலில் காண முடிகிறது.

இந்த நூல் ஈழக் கனவுக்குச் சொற்களால் எழுப்​பப்​பட்​டிருக்கும் நடுகல். இதில் வழிபாடும் உண்டு; விசாரணையும் உண்டு. நடுகல் களத்தில் வீரச்சாவு அடைந்​தவர்​களுக்காக எடுக்​கப்​படுவது. மக்களைக் காப்பாற்றத் தங்கள் உயிரைத் தந்தவர்களை வழிபடுவது, ஒருவகையில் நன்றிக்​கடன்கூட. ஆனால், அகரமுதல்வன் நடுகல் வழிபாட்​டிலும் நடந்தவற்றிற்கு நியாயம் கேட்கிறார். தெய்வங்​களையும் விசாரணைக்கு உட்படுத்​தி​யிருக்​கிறார்.

கனவில் வரும் காளியின் தலையில்கூட ஷெல் காயம் இருக்​கிறது. “ஒரு பீஸ் துண்டு காளியின் தலைக்​குள்ள இப்பவும் இருக்கு. வெயில் நேரத்தில் அது குத்தி நோக வெளிக்​கிடுது. மண்ட பீஸ். காளி அதை நினைச்சு பயப்பிடுறா” என்று காளியைப் பற்றிக் கவலைப்​படு​கிறார்கள்.

“கர்த்​தாவே! இது எத்தனை காலம் தொடரும், எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்​படுத்து​வீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியும் என்றார்கள். எமக்காக ஒரு தீக்குச்சி அளவுகூட எரிய மாட்டேன் என்கிறீர்கள். எங்கள் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவு​கூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து மடியும்​படியா நீர் எங்களைப் படைத்​தீர்?” என்று கேட்டிருக்​கிறார்கள்.

“வீரபத்​திரர் மட்டுமா தெய்வம். இஞ்ச எங்களைக் காப்பாத்துற எல்லாரும் தெய்வம்​தான்” என்று அவர்களைக் கொண்டாடும்போதே இயக்கத்தின் மீதும் விசாரணையும் படருகிறது.

சனங்களின் ஆற்றாமை​யையும் கேள்வி​களையும் பொருட்படுத்​தாமல் விலகி நடக்கும் பாதங்கள் போராளிகள் உடையவை அல்ல. அவர்கள் தங்களை ராஜாக்களென எண்ணுபவர்கள். தேசத்தில் உள்ள ஒரு தாயின் கண்ணீரை மதியாதவன், எதன் நிமித்​தமும் விடுதலைக்கு வழி சமைப்பவன் அல்ல. “இயக்கம் அழிந்து போகப் போகிறது என அம்மாவும் சொல்லிய ஒரு பகல் பொழுதில் இரக்கமற்ற வகையில் வரலாற்றின் பாறையில் சூரிய ஒளி மங்கிச் சரிந்தது” என்ற அகரமுதல்​வனின் கோபத்தில் நியாயம் தெரிகிறது.

இவ்வளவு நடந்த பிறகும் - “எல்லாரும் எல்லாமும் சாம்பலா போச்சு.. எண்ணுக் கணக்கு இல்லாமல் பூமிக்குத் தின்னக் கொடுத்​தாச்சு” என்று கையறு நிலைக்கு ஆளாக்கும் குரல் ஒரு பக்கம் இருந்​தா​லும், அதையும் கடந்து ‘ரத்தம் கொடுத்தது நான் இல்லை.. நிலம்’ என்று நினைத்​திருக்​கிறார்கள்.

புலிகள் இயக்கத்தில் இருந்த ஆதாவும் இலங்கைப் படையினனான சமிந்​தாவும் போர் முடிந்த காலத்தில் காதலிப்பது, அவர்கள் யுத்தக் காலத்தை மறக்க நினைக்கிற தருணங்களாக இருக்​கின்றன. யுத்தக் காலத்​திலும் யுத்தக் கொடூரங்​களி​லிருந்து மக்கள் தப்பிக்கும் தருணங்கள், அவர்கள் காதலிக்கிற காலங்​களாகவே இருந்​திருக்​கின்றன என்பதும் ‘யுத்தம் ஒட்டுமொத்த மனுஷனிட்ட தோக்கிற இடம் இதுதான்’ என்பதையும் உளவியலோடு அகரமுதல்வன் உறுதிப்​படுத்து​கிறார்.

கொந்தளிப்பான வாழ்வின் சித்திரங்​களையும் ஈழத் தாழியி​லிருந்து அகழ்ந்​தெடுத்​திருக்​கிறார் அகரமுதல்வன். சிறுவய​திலிருந்தே எழுத்​தையும் இலக்கி​யத்​தையும் உறவாக்கிக் கொண்டவர்.

சைவப் பதிகங்கள், சைவ சமயச் சொற்பொழி​வுகள், நிகழ்த்துக் கலைகள் எனும் பண்பாட்டுப் பின்னணியோடு கூடிய போர் அவல அனுபவங்​களின் எடுத்​துரைப்பில் செழுமை சேர்த்திருக்​கின்றது. பைபிள் தமிழும் சைவத் தமிழும் சங்கத்​தமிழும் கலந்த மொழி ஆளுமை வியக்க வைக்கிறது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவநம்​பிக்கையின் ஆதிக்க வெளியில் வாழ்க்கை நடந்த​போதும், சொற்களால் புதிய நம்பிக்கையை விதைக்​கிறார் அம்மா கதாபாத்​திரம்: “எங்கட முதுசமாய் இருக்கிற வித்துடல்.

அது எண்டைக்கோ ஒருநாள் உயிர்த்​தெழுமடா தம்​பியா” - ஆரின்ர ​வித்​துடல் என்று அறம்பாவை அத்​தை​யிடம் கேட்​டதும், என் பின்னே வந்து நின்ற அம்மா “எங்கட மண்ணோட ​வித்​துடல் என்​றாள்”. ​முதுசொம் - ​முந்தைய தலை​முறையி​லிருந்து கிடைக்​கும் சொத்து. அகர​முதல்​வன், ஈழப் ​போராட்​டத்​தைத் தமிழுக்​கு ​முதுசொம்​ ஆக்​கி​யிருக்​கிறார்​.

போதமும் காணாத போதம்
அகரமுதல்வன்
நூல் வனம் வெளியீடு
விலை: ரூ.320
தொடர்புக்கு: 91765 49991

- தொடர்புக்கு: maran.tamil@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in