

உலகின் எங்கோ ஒரு மூலையில் யுத்தம் ஒன்று வெடித்தால் அதில் யார் பக்கம் நியாயம் என்று அமைதிப் பூங்காவில் சாவகாசமாக உட்கார்ந்தபடி நம்மில் சிலர் விவாதித்துக் கொண்டிருக்கையில், அங்கு யுத்த பூமியில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலி கொடுக்கப்படுகின்றனர். நடப்பது என்னவென்று நாம் சுதாரித்துக்கொள்ளும்முன் மேலும் பல உயிர்கள் பறிபோகின்றன.
ஆனாலும் எதனால் தொடங்கியது, இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விளங்கிக்கொண்டால் மட்டுமே போர் நிறுத்தமும் சாத்தியப்படும். அவ்வாறு நம்மை உலுக்கியெடுக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் குறித்துப் பேசியாக வேண்டும். அங்கு என்ன நடக்கிறது, எதனால் ஒவ்வொரு நாளும் மனிதர்கள் வாழும் நிலத்தை மண்டை ஓடுகளின் மைதானமாக மாற்றும் ஏவுகணைகள் ஏவப்படுகின்றன என்பது விவரிக்கப்பட வேண்டும். அந்த விளக்கம் பாதிக்கப்பட்டவர் தரப்புக் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும்.
கணை ஏவு காலம்
பா.ராகவன்
விலை: ரூ.230
இந்து தமிழ் திசை
பதிப்பகம்
தொடர்புக்கு: 7401296562
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
கோழிகளின் யுத்தம்: கோழிகளும் நரிகளும்தான் இந்தக் கதையின் பிரதான கதாபாத்திரங்கள். நரிகளிடமிருந்து தப்பிக்க ஒரு பண்ணையிலுள்ள கோழிகள் எப்படி ஒருங்கிணைந்து போராடி வெல்கின்றன என்பதே கதைக் களம். கோழிகளை அபகரிக்க நினைக்கும் நரிகளுக்கு எதிராகப் பண்ணையில் உள்ள கோழிகளின் திட்டத்தில் வெளிப்படும் சூழல் நம்மையும் கதை அருகே கொண்டுசென்று விடுகிறது.
வலிமையில்லா ஓர் இனம் தற்காத்துக்கொள்ள, தன்னைக் காட்டிலும் பலம் பொருந்திய ஓர் இனத்தை வென்றாக வேண்டுமெனில், உயிர் உட்பட அனைத்தையும் பணயம் வைக்கும் நிலை ஏற்படும்.
அதே நிலைதான் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோழிகளுக்கு ஏற்படுகிறது. கதையில் கோழிகளுக்கும் - நரிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம், உலகெங்கிலும் பலம் இல்லாத அப்பாவிப் மக்கள் மீது ஆதிக்க வர்க்கத்தினர் நடத்தும் வன்முறைகளை நினைவூட்டுகின்றன.
குறிப்பாக, காஸா குழந்தைகளின் மீது இஸ்ரேல் ராணுவம் நாள்தோறும் அரங்கேற்றும் வன்முறைகளைக் கண் முன் நிறுத்துகிறது. மனித ஆளுமையில் முக்கியப் பண்புகளாகக் கருதப்படும் தலைமைப் பண்பு, இன உரிமை, குழுவாகச் செயல்படுதல், கள உத்திகள் போன்றவை இப்புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் விதம் நிஜ வாழ்க்கையிலும் உதவக்கூடியது. - இந்து குணசேகர்
பண்ணை யுத்தம்
ஆயிஷா
இரா.நடராசன் (மூலக்கதை: டிக் கிங் - ஸ்மித்)
புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: ரூ.70
தொடர்புக்கு: 044 – 24332924
கி.கோவிந்தனுக்கு எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது: சிறந்த நூலகருக்காக ‘மணற்கேணி’ ஆய்விதழ் ஆண்டுதோறும் வழங்கிவரும் எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதுக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வகத்தின் நூலகர் கி.கோவிந்தன் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நூலக அறிவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியவர். இந்த விருது 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பாராட்டுப் பட்டயமும் உள்ளடங்கியது.
மகளிர் சிந்தனை இதழ் டிஜிட்டல் மயம்! - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வெளியீடான ‘மகளிர் சிந்தனை’ மாத இதழ்கள் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுப் பொதுப் பயன்பாட்டு ஆய்வுத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பணியை சென்னை ரோஜா முத்தையா நூலகம் மேற்கொண்டது.
சி.பி.ஐ. (எம்) மாநிலக்குழு அலுவலகத்தின் கருவூலம் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்தது. தெற்காசியத் திறந்தவெளி மின்னணுக் காப்பகத்தின் (South Asia Open Archives) தளத்தில் மகளிர் சிந்தனை இதழ்களின் டிஜிட்டல் வடிவத்தை வாசிக்கலாம்; பதிவிறக்கம் செய்து ஆய்வுக்காகப் பயன்படுத்தலாம். சுட்டி: https://www.jstor.org/action/doBasicSearch?Query=Makaḷir cintaṉai