

பல பண்பாட்டு நிகழ்வுகளின் மையம் சென்னை. சென்னையைப் பற்றிப் பலரும் எழுதியிருக்கிறார்கள். சென்னையைப் பற்றிக் கட்டுரையாகவும் கதையாகவும் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் நிறையவே எழுதியிருக்கிறார். சென்னையின் அந்தக் காலகட்டத்திய தண்ணீர்ப் பற்றாக்குறையை ஒரு சாரமாகப் பேசுவது அவரது ‘தண்ணீர்’.
அந்தக் கதையில் பெண்களின் பாடுகள் ஒரு பக்கமும் தண்ணீர் ஒரு பக்கமுமாக ஓடும். இந்தத் தண்ணீர்ப் பகுதியில் சென்னை சித்தரிக்கப்படும். ‘கரைந்த நிழல்கள்’ நாவல், சென்னையின் சினிமா உலகத்தைப் பின்னணியாகக் கொண்டது. இது அல்லாமல், பல கட்டுரைகளில் சென்னையைப் பற்றி அளவில்லாப் பிடிபாடுடன் பதிவுசெய்துள்ளார்.
எஸ்.ராமகிருஷ்ணன் சென்னையைப் பற்றிச் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சென்னையின் கழிவறைகளைப் பற்றிய அவரது சிறுகதை, சென்னை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பச்சையாகச் சித்தரித்தது. அவரது ‘யாமம்’ நாவல் 18ஆம் நூற்றாண்டின் சென்னையைப் பின்னணியாகக் கொண்டது.
யாமம் என்கிற வாசனைத் தைலம் தயாரிக்கும் இஸ்லாமியக் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவல், சென்னையைப் புறமாகவும் உணர்வுகளால் சிதையும் வாழ்க்கையை அகமாகவும் சித்தரிக்கிறது. ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ நாவல் சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான ஐஸ் ஹவுஸ் பின்புலத்தில் எழுதப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட சென்னை மாகாணப் பெரும்பஞ்சம் என அழைக்கப்பட்ட பஞ்சத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது.
தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ வரலாற்று நாவலிலும் சென்னைப் பின்னணி உண்டு. நூறு வருடங்களுக்கு முந்தைய சென்னையின் ஒரு சித்திரத்தை இந்த நாவலில் பார்க்க முடியும். சமூகரீதியில் பிளவுபட்டுக் கிடந்த சென்னை, தன் முகத்தை மாற்றிவருவதை இந்த நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது.
விட்டல் ராவ் எழுதிய ‘நிலநடுக் கோடு’ நாவல் ஆங்கிலோ-இந்திய சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டது. ஒரு ஆங்கிலோ-இந்தியக் குடும்பம் புலம்பெயர்ந்து வாழும் சென்னையின் புரசைவாக்கம், பல்லாவரம், பரங்கிமலை ஆகிய பகுதிகளின் அன்றைய காலச் சித்திரத்தை இந்த நாவல் உருவாக்குகிறது.
சென்னை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதியவர்களில் ஜெயகாந்தன் முக்கியமானவர். ஜெயகாந்தனின் ‘அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்’ நாவலில், ஊரில் இருந்து ஓடிவரும் சிறுவன் சென்னையில் தஞ்சமடைகிறான். இந்தக் கதையில் சென்னையில் பிச்சை எடுக்கும் எளிய மக்களின் அன்றாடம் தத்ரூபமாகப் பதியப்பட்டிருக்கும். \
சென்னையின் ஒரு நிலப்பகுதி மீதும் அதன் மனிதர்கள் மீதும் ஜெயகாந்தன் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருப்பார். ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரரின் மனைவிக்கு ஏற்படும் சினிமா மோகத்தால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைச் சித்தரிக்கும் நாவல் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’. இதன் வழியே சென்னையின் வாழ்க்கையும் நிலப்பகுதியும் சொல்லப்பட்டிருக்கும்.
தொடர்ந்து சென்னை பற்றி எழுதிவருபவர் கரன் கார்க்கி. இவரது ‘கறுப்பர் நகரம்’ உழைக்கும் வர்க்கத்தினரின் பங்கைச் சொல்லும் வகையில், சென்னையின் வரலாற்றை உழைப்பவர்களின் பார்வையில் எழுதியிருக்கிறது.
தமிழ்ப்பிரபாவின் ‘பேட்டை’ சிந்தாதிரிப்பேட்டை மக்களின் வாழ்க்கையை, பண்பாட்டைப் பதிவுசெய்கிறது. கி.கண்ணனின் ‘சோளம் என்கிற பேத்தி’ நாவல் சென்னைக் குன்றத்தூர்ப் பகுதி வாழ்க்கையைப் பதிவுசெய்கிறது. இவை அல்லாமல் பாக்கியம் சங்கர் தனது அனுபவக் கட்டுரைகள் வழி வடசென்னையின் வாழ்க்கையைப் பதிவுசெய்துவருகிறார். - விபின்