

பொருளாதார வரலாற்றை ஐரோப்பியத் தத்துவங்களின் பின்புலத்தில் விளக்கும் நூல்களே பொது வாசகர்களுக்குப் பரவலாக அறிமுகம் ஆகியுள்ளன. ‘தென்னிந்தியப் பொருளாதாரம் - சில பரிமாணங்கள்’ என்கிற இந்நூல், தென்னிந்தியப் பின்னணியில் பொருளாதார வரலாற்றை முன்வைக்கிறது.
குறிப்பாக, தமிழகத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து ஐரோப்பியர் வரத் தொடங்கிய காலம் வரையிலான தொழில், வணிகச் செயல்பாடுகளை இந்நூல் கூறுகிறது. பண்டைய வரலாறு, தொல்லியல் துறை அறிஞர் ப.சண்முகம் இதை எழுதியுள்ளார். தொழில்கூடத்தைக் குறிக்கும் பட்டடை (பட்டறை) என்கிற சொல், சம்புவராயர்கள் காலக் கல்வெட்டுகளில் முதன்முதலாக இடம்பெற்றது.
விஜயநகர அரசர்கள் காலத்தில் பேட்டை, பாளையம் ஆகியவை மூலம் தொழில்கள் வளர்க்கப்பட்டன. உள்ளூர்ப் பொருளாதாரம் வலுவாக இருந்த காலகட்டங்களை இந்நூல் வழியே காணலாம். நமது மண் சார்ந்த பொருளாதார நிகழ்வுகளைக் கூறி, வாசகர்களுக்கு அத்துறையுடன் நெருக்கத்தை இந்த நூல் ஏற்படுத்துகிறது. - ஆனந்தன் செல்லையா
தென்னிந்தியப் பொருளாதாரம் - சில பரிமாணங்கள்
ப. சண்முகம்
மலர் புக்ஸ் வெளியீடு
விலை: ரூ. 430.
தொடர்புக்கு: 93828 53646
சுவடு பதிக்கும் வரிகள்: புதுச்சேரியில் 1985இல் கையெழுத்து இதழாகத் தொடங்கப்பட்டு, பின்னர் அச்சிதழாக மாறிய ‘புதுவை பாரதி’ சிற்றிதழ், தொடர்ந்து 39 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதே சாதனைதான். இதுவரை அவ்விதழில் வெளியான தலையங்கப் பக்கங்கள் 4 நூல்களாக வெளிவந்துள்ள நிலையில், தற்போது 5ஆவது நூலாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.
2013 அக்டோபர் தொடங்கி, ஏப்ரல் 2024 வரை எழுதப்பட்ட 102 தலையங்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ‘நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்கு’, ‘தூய்மை இந்தியா’, ‘வன்முறையில்லா வகுப்பறை’, ‘எங்கே போகும் இந்தப் பாதை?’, ‘பள்ளிக்கூடங்களில் தொழிற்கல்வி தேவை’ ஆகிய தலைப்புகளே தலையங்கத்தின் சமூகத் தேவையை உணர்த்துவதாக உள்ளன.
தேச ஒற்றுமையையும் சமுதாய முன்னேற்றத்தையும் நோக்கமாகக்கொண்டு, அவ்வப்போது நிகழும் சமூக நிகழ்வுகளை முன்வைத்துத் தலையங்கங்களை எழுதியுள்ளார் இதழாசிரியர் பாரதிவாணர் சிவா, சுருக்கமான வரிகளால் ஆழமான சுவடுகளைப் பதித்துள்ளார். - மு. முருகேஷ்
விருதுநகர் முதல் தூத்துக்குடி வரை
பாரதிவாணர் சிவா
பாரதி பல்கலைப் பேரவை
விலை: ரூ.200
தொடர்புக்கு: 99765 96563
மார்க்சிய வெளிச்சத்தில் ரசனை:
மார்க்சிய லெனினிய இதழ்களில் 1981-2012 ஆண்டுகளில் வெளிவந்த திரை விமர்சனங்களின் தொகுப்பாகவும் அவற்றின் மீதான மறுவாசிப்பாகவும் இந்நூல் அமைந்துள்ளது. அவ்விமர்சனங்கள் பெரும்பாலும் அரசியல் தற்குறிப்பேற்றங்கள். ‘சிவப்பு மல்லி’, ‘பாலம்’ ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்ற போராட்டக் காட்சிகளும் புரட்சிகரக் கதாபாத்திரங்களின் சித்தரிப்புகளும் குறித்து ‘மன ஓசை’ இதழ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
தாங்கள் விரும்பும் அரசியலை, தாங்கள் விரும்பியபடியே பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளைத்தான் அவ்விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. பொழுதுபோக்குத் திரைப்படங்கள் அனைத்தும் முதலாளித்துவத்தின் விற்பனைப் பண்டங்கள், சமூக மாற்றங்களை அவை தடைப்படுத்துகின்றன என்ற பொதுப் பார்வையைக் கொண்டவை அவ்விமர்சனங்கள்.
அவற்றின் கலைப் பார்வையிலுள்ள சிற்சில போதாமைகளையும் மார்க்சியம் குறித்த அடிப்படைப் புரிதலின்மையையும் மணிகோ.பன்னீர்செல்வத்தின் மறுவாசிப்புக் குறிப்புகள் அடையாளம் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, ‘7ஆம் அறிவு’ படம் முன்னிறுத்தும் மரபணு நினைவுக் கோட்பாடு நவீன அறிவியலுக்குப் புறம்பானது என்கிறது ‘சாளரம்’ இதழின் விமர்சனம். எதிர்சமயமான பெளத்தத்தையும் பொத்தாம் பொதுவாக மதங்களின் கணக்கில் கொள்ளும் அவ்விமர்சனத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது இந்நூல். விமர்சனங்களின் விடுபடல்களை இட்டு நிரப்பி, அவற்றை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது இந்த மறுவாசிப்பு. - செ. இளவேனில்
மக்கள் ரசித்த திரைப்படங்களும்
மார்க்சிய விமர்சனமும்
மணிகோ.பன்னீர்செல்வம்
அய்யுறு வெளியீடு,
விலை: ரூ.120
தொடர்புக்கு: 93445 01919