Published : 05 May 2018 08:07 AM
Last Updated : 05 May 2018 08:07 AM

தொடு கறி: சுஜாதா விருதுகள் 2018

சுஜாதா விருதுகள் 2018, சுஜாதா பிறந்தநாளான மே 3-ல் வழங்கப்பட்டன. ஜீ.முருகன் (கண்ணாடி - சிறுகதை), தமிழ்ப் பிரபா (பேட்டை - நாவல்), சைலபதி (பெயல் - நாவல்), ஸ்ரீ சங்கர் (திருமார்புவல்லி - கவிதை), தேன்மொழி தாஸ் (காயா - கவிதை), எட்வர்ட் செய்யத்தும் கீழைத்தேய இயலும் (எச்.பீர் முகம்மது - கட்டுரை) , ராஜ் கெளதமன் (சுந்தரராமசாமி: கருத்தும் கலையும் - கட்டுரை), சிவ.செந்தில் நாதன் (இடைவெளி - சிற்றிதழ்) ஸ்ரீதர் சுப்ரமணியன் (இணையம்), மது ஸ்ரீதரன் (இணையம்) ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். உயிர்மை பதிப்பகமும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கிவருகின்றன. விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

தமிழுக்கு நல்வரவு

காலச்சுவடு இதழின் 2017-ம் ஆண்டுப் பதிப்பாக்கப் பணிகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பைக் காலச்சுவடு கண்ணன் வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 62 தலைப்புகளில் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 17 மொழிபெயர்ப்புகள் நூல்கள். இவை 10 மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்துள்ளன. இதில் ஏழு உலக மொழிகளும் மூன்று இந்திய மொழிகளும் அடக்கம். 12 தமிழ்ப் படைப்புகள் பிற மொழிகளுக்குச் செல்ல ஒப்பந்தம் ஆகியுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இவற்றில் எட்டு இந்திய மொழிகளுக்கும், நான்கு உலக மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படவிருக்கின்றன. தமிழில் புதிய எழுத்தாளர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் காலச்சுவடு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வண்ணநிலவனின்எழுத்தோவியம்

வாட்ஸப் யுகத்தில் பேனாவில் எழுதும் பழக்கமெல்லாம் பழங்கதையாகிவிட்டது. இன்னமும் பேனா பிடித்து எழுதுபவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, எழுத்தாளர்கள்! வண்ணநிலவன் தனது நோட்டில் வரைந்த ஓவியங்களையும், குறிப்புகளையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் கலாப்ரியா. ஓவியத்திலும் அசத்தியிருக்கிறார் வண்ணநிலவன்!

மார்க்ஸ் 200!

கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கதே-இன்ஸ்டிட்யூட் அரங்கத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மே 5 மாலை 7 மணிக்கு ‘மார்க்ஸ் இன்று அவசியமா?’, ‘மார்க்ஸும் தமிழகமும்’ ஆகிய தலைப்புகளில் பேராசிரியர் வெங்கடேஷும், சி.மகேந்திரனும் உரையாற்றுகிறார்கள். மே 6 மாலை 7 மணிக்கு ‘தி யங் கார்ல் மார்க்ஸ்’ படம் திரையிடப்படுகிறது. மார்க்ஸ் - எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் மே 7 மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன!

ஞாநியின் தீம்தரிகிட!

‘தீம்தரிகிட’ இதழின் 1982 முதல் 2006 வரையிலான தொகுப்புகள் ஏழு புத்தகங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. தமிழில் சுதந்திரப் பத்திரிகையாளர்களில் மிக முக்கியமானவரான ஞாநியின் ‘தீம்தரிகிட’ தொகுப்பு இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு பொக்கிஷம். எந்த வடிவத்தில் அந்த இதழ்கள் வெளியாகினவோ அதே வடிவத்தில் பதிப்பித்திருப்பது இதன் சிறப்பு. உலக பத்திரிகை சுதந்திர தினமான மே 3 அன்று வே.வசந்திதேவி தலைமையில் இத்தொகுப்புகள் வெளியிடப்பட்டது இன்னொரு சிறப்பு. படத்தில் இருப்பது, ‘தீம்தரிகிட’ இதழ் அறிவிப்புக்காக ஞாநி 1982-ல் கைப்பட எழுதிய குறிப்பு.

தொகுப்பு: த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x