Published : 16 Aug 2014 11:37 AM
Last Updated : 16 Aug 2014 11:37 AM

நூல் வெளி: தேவை ஒரு சுயமதிப்பீடு

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இடதுசாரி மாத இதழான ‘மன்த்லி ரெவ்யூ’ தனது முதல் ஐம்பதாண்டு காலத்தில் வெளியிட்ட கட்டுரை களிலிருந்து தேர்ந்தெடுந்த சில வற்றைத் தொகுப்பாக வெளியிட்டி ருந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டின், சே குவேரா, நோம் சாம்ஸ்கி என்று நன்கறியப்பட்ட ஆளுமைகளும் அமெரிக்காவின் முன்னணி இடதுசாரி அறிஞர்களும் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பை ச.சுப்பாராவ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

‘சோஷலிசம் எதற்கு’ என்ற தலைப்பில் ஐன்ஸ்டின் எழுதிய கட்டுரை, கட்டற்ற வணிகப் போட்டி நிலவும் இன்றைய பொருளாதார நிலை, தனிமனிதனின் மீது செலுத்தும் எதிர்மறைத் தாக்குதல் களைப் பற்றிப் பேசுகிறது. அதற்குத் தீர்வாக சோஷலிசத்தைப் பரிந்துரைக் கும்போதிலும், சோஷலிசம் என்பதை வரையறைக்குள் அடைத்துவிடுவதும் ஆபத்தாக முடியும் என்கிறார் ஐன்ஸ்டின்.

சே குவேரா எழுதிய கியூபப் புரட்சி தனிச்சிறப்பு வாய்ந்ததா என்ற கட்டுரையில் அவர் புரட்சிக்கான வெற்றிச் சூத்திரமென்று எதுவுமில்லை, காலமும் இடமும்தான் அதைத் தீர்மானிக்கின்றன என்கிறார். மிக முக்கியமாகச் ‘சில புரட்சிகர அமைப்பு கள் போலன்றி, ஏகாதிபத்தியம் தனது தவறுகளில் இருந்து கற்றுக் கொள்கிறது’ என்று எச்சரிக்கிறார்.

1976-ல் நோம் சாம்ஸ்கி எழுதிய இஸ்ரேலின் அராபியர்கள் என்ற கட்டுரை, இஸ்ரேலில் சிறுபான்னையினராக வாழும் அராபியர்கள் மதச்சார்பற்ற வகையில் நடத்தப்படுவதாக அமெரிக்கா புகழுரைப்பதற்கு அடிப்படையே இல்லை என்பதைக் காட்டுகிறது.

இஸ்ரேலின் அரசு அமைப்புகள் அனைத்துமே யூத மதத்தைச் சார்ந்து இயங்குவதையும், இஸ்ரேல் என்பது எப்போதும் தேசிய இனமாக இல்லாமல் மதமாகவே தொடர் வதையும் நோம் சாம்ஸ்கி தெளிவு படுத்துகிறார். ‘தொடர்ந்த உள் நாட்டு மோதல், மோதும் அணிகளின் தலைவிதியை ஏகாதிபத்திய சக்திகளின் கையில் கொடுத்துவிடுகிறது’ என்ற அவரது எச்சரிக்கை உலக நாடுகள் அனைத்துக்குமே பொருந்தக் sகூடியது.

கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் ஏகாதிபத்தியத்தின் காரணமாக உலகம் முழுவதும் நிகழ்ந்த அரசியல் அமைதியின்மையையும் அதன் சமூக, அரசியல், பொருளாதார விளைவு களையும் பற்றி இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பேசுகின்றன.

லியோ ஹூபர்மேன் எழுதிய இடதுசாரி பிரச்சாரம் என்ற கட்டுரை இந்தியச் சூழலுக்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு களும் அரசுக்கும் முதலாளிகளுக்குமான கூட்டுறவும் வெளிப்படையாகத் தெரியும் போது அதை உரிய ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு தடித்த வார்த்தைகளைக் கையாளுவதன் அவசியம்தான் என்ன?

பால் ஏ.பரான் எழுதிய அறிவுஜீவி களின் கடப்பாடு என்ற கட்டுரை அறிவுஜீவி என்பவருக்கும் அறிவுத் தொழிலாளி என்பவருக்குமான வித்தி யாசத்தைப் பற்றியது. அறிவுத் தொழிலாளிகளிலிருந்தே அறிவுஜீவிகள் உருவாகிறார்கள் என்றபோதும் அறிவுத் தொழிலாளர்கள் அனைவருமே அறிவு ஜீவிகளாகிவிடுவதில்லை. அறிவுஜீவி என்பவர் தான் பணியாற்றும் குறிப்பிட்ட துறையை மனித வாழ்வின் பிற அம்சங்களோடு தொடர்புபடுத்திப் பார்த்தவாறே இருக்கிறார்.

நிபுணர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகிய அறிவுத் தொழிலாளர்களோ உள்ளொடுங் கிக்கொள்ளும் மனப் போக்கினராக இருக்கிறார்கள். மேலும், அறிவுஜீவிகளை அந்நியராகப் பார்க்கும் மனோநிலையைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

தமிழ்ச் சூழலில், இடதுசாரி நிலைப் பாட்டினரும் அறிவுஜீவிகள் என்போரும் தம்மை சுயமதிப்பீடு செய்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை இத்தொகுப்பு உருவாக்கும்.

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, தமிழில்: ச.சுப்பாராவ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை- 600 018.
தொலைபேசி: 044 24332424
விலை: ரூ. 150

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x