Last Updated : 09 May, 2018 08:59 AM

 

Published : 09 May 2018 08:59 AM
Last Updated : 09 May 2018 08:59 AM

எமதுள்ளம் சுடர் விடுக 40: இசையின் இன்னொரு பெயர் தமிழ்!

பெ

ருமதிப்புமிக்க இசை வரலாற்று நூலை எழுதி தமிழுக்கு அளித்திருக்கிறார் அரிமளம் சு.பத்மநாபன். அடிப்படையில் ஓர் அரங்கிசை கலைஞர் இவர். தமிழ் இசை குறித்தும் தமிழ் இசை வரலாறு குறித்தும் சிறந்த ஆய்வு நூல்களையும் வழங்கியுள்ளார். சுமார் 40 ஆண்டுகளாக இசைத் துறை அனுபவமும் ஆசிரியர் பணி அனுபவமும் பெற்றவர். மூன்று நூல்களின் ஆசிரியர்.

இப்போது நாம் பேச எடுத்துக்கொண்டு இருப்பது தமிழிசையும் இசைத்தமிழும் என்ற நூல். இந்நூல், தமிழ் இசை என்ற பொருளின் வரலாற்றை ஆராய்கிறது. முத்தமிழ் நீட்டி முழக்கும் மேடைகளின் கோடைக் காற்று ஏனோ இயலோடு நின்றுவிடுகிறது. இசையின் பக்கம் திரும்புவது இல்லை. நாடகம் சுத்தமாக இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இறைவனை இசையாகக் கண்டவர்கள் தமிழர்கள். ஓசை ஒவ்வொன்றுக்கும் பொருள் உள்ளது என்று சொன்னவர்கள் தமிழர்கள். தமிழை செம்மொழியாக்கிய நாம் இயல், இசை, நாடகம் மூன்றையும் இணைத்து முத்தமிழாகத் தமிழை வளர்த்தெடுக்க என்ன செய்யப் போகிறோம் என்ற மிக முக்கியமான கேள்வி ஒன்றை நூலாசிரியர் நம்மிடம் கேட்கிறார்.

தமிழின் இலக்கண நூலான (கிடைத்தவரையில் முதலாவதான) தொல்காப்பியம் வெறும் எழுத்துகளுக்கும் வார்த்தைகளுக்கும் மட்டும் இலக்கணம் கூறவில்லை. தொல்காப்பியர் எழுத்துகளுக்கான ஓசை கால அளவு குறித்துள்ளார். இந்தக் கால அளவின் அடிப்படையை ஒட்டியே இன்றைய இசை இலக்கணத்தில் தாளமும் இசை காலக் கணக்கும் நடைபோட்டு வருகின்றன. தொல்காப்பியரே இசைக்கான அடிப்படையை நமக்கு தொட்டுக் காட்டியவர்.

இசையின் அளவு

இன்றைய இசை பாடல்களுக்கு - கிருதி, கீர்த்தனை என்றெல்லாம் சொல்லப்படுகிற பாட்டு வகைகளுக்கு உருப்படி என்ற சொல் தமிழில் உண்டு. உரு என்னும் அடிப்படை சொல் எழுத்து உருவை மட்டுமல்ல; அதன் இசையின் அள வையும் குறிப்பிடுகிறது.

மேலும், ச - ரி - க - ம - ப - த - நி என்னும் இசை ஒலியங்களின் பிறப்பிலக்கணமும் தொல்காப்பியத்தை ஒட்டியே விளங்குகின்றது என்பதை ‘சங்கீத ரத்னாகரம்’ என்னும் நூல் தெளிவாக்குகின்றது.

தமிழ் இசை இயல் என்கிற ஒரு கருத்துருவை தொல்காப்பியம் தொடங்கி சிலப்பதிகாரம் என்று வளர்ந்து வந்திருக்கும் இசை வரலாற்றை கொண்டு நாம் உருவாக்கிட முடியும். ஆனால், தமிழருக்கு இசை உணர்வே இல்லை என்று வடமொழியில் ஈடுபாடு கொண்ட சில அறிஞர்கள் ஒரு பொய்யான கருத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

சங்க இலக்கியம் தொடங்கி இசை குறித்த தொடர் சிந்தனை தமிழர்களுக்கு உண்டு. இன்றைய இந்திய இசை, கர்னாடக இசை, தென்னிந்திய செவ்விசை ஆகிய அனைத்து இசை வகைகளுக்கும் ஆதாரமாக விளங்கு வது தமிழ் இசையே ஆகும் எனும் கருத்தை நூலாசிரியர் மிகத் தெளிவாக புலப்படுத்தியிருக்கிறார். பின்னர் பக்தி இலக்கியங்களான தேவ திவ்ய பிரபந்தங்களாக உருவெடுத்தன. பக்தி இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள பண்கள் இன்றைய கர்னாடக இசையில் வழங்கப்படும் பண்களின் மாற்று பேர்களாகவே இருக்கின்றன. ஆதிகால பெயர்கள் பக்தி இலக்கியத்திலேயும் பின்னர் வந்த கர்னாடக இசையிலும் நாம் கண்டுகொள்ள முடியும்.

பூக்களைக் குடையும் வண்டின் ஒலி

‘அகநானூறு’ பாடல் ஒன்று தமிழர்களின் இசையின் ஆர்வத்தை நமக்கு உணர்த்தும், அந்தப் பாடலின் கருத்து (அகநானூறு 82) மூங்கிலில் வண்டுகளால் துளைக்கப்பட்ட துளைகளில் இருந்து காற்று குழல் ஒலிபோல எழுகிறது. அருவியில் வீழும் நீர் மத்தளங்களைப் போல ஒலிக்கிறது. கலை மான்களின் கூட்டம் ஒலிக்கும் கடும்குரல் ‘பெருவங்கியம்’ என்கிற (பெரிய நாதஸ்வரம் போன்ற ஊதுகுழல்) இசையாகவும் பூக்களைக் குடையும் வண்டின் ஒலி யாழ் இசையாகவும் நமக்கு கேட்கின்றன. இந்த இனிமையான இசையைக் கேட்டு மந்திக் கூட்டமும் மயில் கூட்டமும் ஆடுகின்றன. அந்த ஆட்டத்தைச் சென்று பார்ப்போமா என்கிறது ஒரு பெண்ணின் குரல். சங்க இலக்கியங்களில் பலப் பாடல் கள் இசையின் சிறப்பை அடிப்படையாகக் கொண்டவை.

சங்க இலக்கியத்தில் சில ராகங்களின் பெயரை நாம் காண முடிகிறது. அதில் ஒன்று முல்லைப் பண். இன்று நாம் மோகனம் என்று சொல்கிற அந்த ராகமே பழங்காலத்திலே முல்லைப் பண் ஆகும். மேலும் சில பழைய ராகத்தின் பெயர்களை சுவை கருதி காணலாம். ‘கம்பீரநாட்டை’ என்று சொல்லப்படுகிற இப்போதைய ராகம் பழைய ‘நைவளம்’ ஆகும். ‘நடபைரவி’ என்று நாம் சொல்வது பழைய ‘படுமலை’ என்ற ராகம். ‘கரஹரபிரியா’ என்று இப்போது நாம் அழைக்கிற மிக அருமையான ராகம், பழங்காலத்தில் ‘மருதப்பண்’ என்று சொல்லப்படுவது. புகழ்பெற்ற ‘தோடி’ ராகத்துக்கு பழங்காலப் பெயர் ‘விளரிப்பண்’. எல்லோரும் அறிந்த ‘சங்கராபரணம்’ ராகத்தின் பழைய பெயர் ‘பஞ்சுரம்’ என்பதாகும்.

நண்பகலில் பாடும் ராகம் என்னவோ?

மேலும் ஒரு முக்கியமான செய்தியை ஆசிரியர் நமக்கு அளித்துள்ளார். பழந்தமிழ் இலக்கியம் எவ்வாறு திணைக் கோட்பாட்டை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) வாழ்க்கை முறையை ராகங்களுக்குக் கூட ஏற்றியிருக்கிறார்கள் தமிழர்கள் என்பதை சொல்கிறார்.

உதாரணத்துக்கு, ‘பாலை’ ராகத்தை நண்பகலில்தான் பாடவேண்டும். ‘ஆம்பல்’ ராகத்தை மாலையிலும் முன் இரவிலும் பாடலாம். ‘குறிஞ்சி’ ராகத்தை நள்ளிரவில் கேட்டால் இரவு இனிமை தரும் என்பது போன்ற கருத்துகள் தமிழர்களிடம் இருந்தது. இவை எல்லாம் சுமார் இரண்டாயிரம் வருட சங்கதிகள். இருந்தாலும், பலர் தமிழனுக்கு இசை இல்லை என்று இன்றும் சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள்.

தமிழிசை பல மாற்றங்களை இன்று அடைந்திருக்கிறது என்றாலும் அதன் அடிப்படை சிதைக்கப்படவில்லை. கர்னா டக இசைக்கும் இந்துஸ்தானிய இசைக்கும் ஆதியாக இருப்பது தமிழிசை என்பதை வரலாற்றுபூர்வமாக நிறுவ முயற்சிக்கிறார் ஆசிரியர். கி.பி. 15-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரை தமிழ் இசைக்கு இருண்ட காலம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இக்காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் தெலுங்கு, சமஸ்கிருதம் முதலான மொழிகளில் கீர்த்தனங்கள் எழுதும் போக்கு இருந்துள்ளது. இந்த நிலை குறித்து ஆபிரகாம் பண்டிதர் ‘சங்கீதத்துக்கு சங்கீத ரத்னாகரர் என்னும் சாரங்க தேவர் எழுதிய நூலே முதல் நூல் என்றும் தமிழ் மக்களுக்கு சங்கீதமே தெரியாதென்றும் சொல்லுகிறார்களே’ என்று வருத்தமாகவும் கவலையோடும் தம்முடைய ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் ஆய்வு நூலில் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் ஆபிரகாம் பண்டிதர்.

இந்த இருளைப் போக்கியவர்களில் மிக முக்கியமானவர் உ.வே.சா ஆவார். 1889-ம் ஆண்டு உ.வே.சா பதிப்பித்த ‘பத்துப்பாட்டு மூலமும் உரையும்’ மற்றும் 1892-ம் ஆண்டு அவர் பதிப்பித்த ‘சிலப்பதிகாரம் மூலமும் உரையும்’ என்னும் இரண்டு பதிப்புகளும் தமிழ் இசை குறித்த ஆய்வின் போக்கையே மாற்றியமைத்தன.

‘திருட்டு நாரதர் முனி’

சங்கரதாஸ் சுவாமிகள் என்னும் பெயர் ஒரு பழமைவாதியையே நம் கண் முன் நிறுத்தும். ஆனால் உண்மை அது அல்ல. உண்மையில் பாரதியாருக்கு முன்பே பெண் சார்ந்த சிந்தனையை மிகத் தீவீரமாக எழுதியவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவருடைய ‘வள்ளி திருமணம்’ நாடகம் அத்தகைய காத்திரமான, பெண்ணியல் சார்ந்த எழுத்தாக இப்போது வாசிக்கும்போது தோன்றுகிறது. ஏறக்குறைய ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் நினைவை சுவாமிகள் எழுப்புகிறார்.

அவருடைய ‘வள்ளி திருமணம்’ நாடகத்தில் நாரதரும் வள்ளியும் சந்திக்கும் இடம் மிகுந்த சுவாரசியம் பொருந்திய இடமாகும். முதலில் நாரதரை ‘புண்ணியமே உருவான முனி’ என்று வள்ளி வரவேற்கிறார். நாரதர் வள்ளியை பார்த்து ‘நீ எந்தக் குலம்?’ என்று கேட்கிறார். ‘மிக வலிமைபெற்ற குறக் குலத்திலே பிறந்தேன்’ என்று சொன்ன வள்ளியிடம் ‘முருகனை திருமணம் செய்துகொள்’ என்று சொல்லுவார் நாரதர். இதைக் கேட்டு வெகுண்டெழுகிறாள் வள்ளி. அதை தனது சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்காகவும், தன் உரிமைக்கு விடப்பட்ட சவாலாகவும் கருதி சீற்றமடைகிறாள்.

அதோடு நிறுத்தவில்லை வள்ளி, ‘பித்தன் மகன் பித்தனுக்கு என்னை கூட்டிக் கொடுக்க வந்திருக்கிறாயோ? உத்தமன் போல நடிக்கிறாயே. இந்தத் தொழிலை எத்தனை நாளாக கைக் கொண்டுள்ளாய்? உன் கை வரிசை என்னிடம் செல்லாது போ’ என்கிறாள். இப்போது நாரதர் ‘ஆறுமுகனை சேர்ந்தால் அடையலாம் பிரம்மானந்தம்’ என்கிறார். அதற்கு வள்ளி ‘கூட்டிகொடுப்பது உங்கள் கோத்திரமா?’ என்கிறாள். அதோடு முடியவில்லை ‘திருட்டு நாரதர் முனியே’ என் கிறாள். நாரதனை திருடன் என்றும் வேடனை கள்ளன் என்றும் வைகிறாள். உண்மையில் சங்கரதாஸ் என்னும் சுவாமிகளின் பெயரோடு இந்த நாடகம் வெளிவந்து இன்றும் நடந்து கொண்டிருப்பது ஒரு பெரும் புரட்சியே ஆகும்.

தமிழிசை அன்றிருந்த நிலையும் இன்றிருக்கும் வளர்ச்சியையும் கண்டுகொள்ள எழுத்தாலும், இசையாலும், நாடகத்தாலும் பணியாற்றிய மகத்தான கலைஞர்களைப் பற்றிய ஓர் அபூர்வமான பதிவு இந்த தமிழிசையும் இசைத் தமிழும் நூலாகும். இந்த நூலை ‘காவ்யா பதிப்பகம்’ நேர்த்தியாக வெளியிட்டுள்ளது.

- சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x