

பசிக்காகவோ ருசிக்காகவோ மட்டுமே மனிதன் உணவை உண்பதில்லை. உடல் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா ஆதாரங்களும் உணவு மூலமே மனிதனுக்குக் கிடைக்கிறது. உணவு என்பது மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கானது. ஆனால், இந்த நவீன காலத்தில் இஷ்டத்துக்கு உண்ணும் உணவு வகைகளால் பலரும் நோய்களுக்கு ஆட்படுகிறார்கள்.
இன்னொரு புறம், நலம் பேணுவதற்காகப் பலதரப்பட்ட டயட் முறைகளையும் மனிதர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், இப்படி டயட் முறைகளைப் பின்பற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. இந்தச் சூழலில் மருத்துவர் கு.கணேசன் எழுதியுள்ள ‘நோய் தீர்க்கும் டயட் பிளான்’ என்கிற நூல் சரியான வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நூலில் குழந்தைப் பருவம் முதல் முதிர் பருவம் வரை பின்பற்றப்பட வேண்டிய டயட் முறைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பலதரப்பட்ட நோய்களுக்கு ஆட்பட்ட ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய எளிய டயட் முறைகள் விளக்கப்பட்டுள்ளன. இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
இவை மட்டுமல்லாமல், ‘எதிரி ஆகும் உணவுகள்’, ‘தண்ணீரின் மகத்துவம்’ உள்பட 30 தலைப்புகளின் கீழ் பல்வேறு டயட் முறைகள் எளிய மொழிநடையில் நூலில் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய உணவு முறைகளே டயட் முறைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. - டி. கார்த்திக்
நோய் தீர்க்கும் டயட் பிளான்
மருத்துவர் கு.கணேசன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 75500 09565
பள்ளிக் கல்வி: அனுபவங்களின் பெருந்தொகுப்பு - எஸ்.எஸ்.ஆர். என அழைக்கப்படும் ச.சீ.இராஜகோபாலன், பள்ளிக் கல்வி தொடர்பான சீர்திருத்தங்களுக்காகத் தனது 90 வயதிலும் பாடுபட்டுவருபவர். காமராஜர், மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய முன்னாள் முதல்வர்களாலும் செ.அரங்கநாயகம், க.அன்பழகன் போன்ற முந்தைய கல்வித் துறை அமைச்சர்களாலும் மதிக்கப்பட்ட கல்வியாளர்.
இவர் ‘புதிய ஆசிரியன்’ மாத இதழில் எழுதிவந்த கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு, ‘கற்றல்... கற்பித்தல்...’ நூலாக வெளிவந்துள்ளது. மாணவர், பெற்றோர், ஆசிரியர், அரசு நிர்வாகம் ஆகிய நான்கு தரப்பிலிருந்தும் தங்கள் தேவையையும் பிரச்சினைகளையும் தெரிவிக்கும் குரல்கள், இக்கட்டுரைகளில் ஒலிக்கின்றன.
94 குழந்தைகளின் உயிர்களைப் பறித்த கும்பகோணம் பள்ளித் தீ விபத்து குறித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்தது. அது குறித்த ஒரு கட்டுரை, இந்நூலில் இடம்பெற்றுள்ளது. மூன்று பள்ளிகள் ஒரே கட்டிடத்தில் இயங்கியதும் அடிப்படைப் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருந்ததும் தீவிபத்துக்கு வழிவகுத்ததைச் சுட்டிக்காட்டும் இக்கட்டுரை, குறை கூறுவதுடன் நின்றுவிடவில்லை.
எம்.ஈ.ஆர். கல்வித் துறை விதிகளின்படி, பள்ளிகளில் மாணவருக்கு எந்த அளவுக்கு இடம் அளிக்கப்பட வேண்டும் என்கிற நெறிமுறைகளையும் முன்வைக்கிறது. தொடக்கப்பள்ளி எனில் ஒரு மாணவருக்கு 9.5 ச.அடியும் உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி ஆகியவற்றில் ஒரு மாணவருக்கு 11 ச.அடியும் இடம் இருக்க வேண்டும் என்கிற விதிமுறை குறிப்பிடப்படுகிறது.
அதிகக் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகள்கூட அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் மாணவர்களை ஏமாற்றும் சூழலில், மும்பை மலபார் ஹில்ஸ் அடிவாரத்தில் ஒரு மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் தனக்குக் கிடைத்த அனுபவத்தை இராஜகோபாலன் இக்கட்டுரையில் தெரிவிக்கிறார். அங்கு வசிக்கும் பணக்காரர்களின் வீடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் அந்தப் பள்ளியில் பயில்கிறார்கள்.
அப்பள்ளிக் கட்டிடம் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறை இருக்கிறது. பெரும்பாலான பள்ளிகளில் கைவிடப்பட்ட சூழலில் கழிப்பறை செயல்படுவதற்கு முரணாக, ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக உணரும் வகையிலான இடத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்தன.
அது மாநகராட்சி கட்டிய பள்ளி அல்ல. மும்பை தாதாக்களில் ஒருவரான ஹாஜி மஸ்தான் கட்டித் தந்தது. சட்டத்தின் பார்வையில் விமர்சனத்துக்கு உரியவரான ஒருவர், ஏழைக் குழந்தைகளுக்காகப் பள்ளிக்கூடம் கட்டித் தந்திருப்பதையும் அது மிகுந்த அக்கறையுடன் கட்டப்பட்டிருந்ததையும் இராஜகோபாலன் இதில் பதிவுசெய்துள்ளார்.
தரமான கல்வியை வழங்க அரசு தவறும்போது, ஏதேனும் ஒரு புரவலர் மூலம் அது சரிசெய்யப்படுகிற யதார்த்தமான நிலைமையும் கட்டுரையில் உணர்த்தப்படுகிறது. வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை முன்வைத்து, நேரடி அனுபவங்களால் கிடைத்த புரிதலுடன் இக்கட்டுரைகளை இராஜகோபாலன் எழுதியுள்ளார். பள்ளிக்கல்வி என்னும் களத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. - ஆனந்தன் செல்லையா
கற்றல்... கற்பித்தல்...
(கல்விக் கொள்கைகள் பற்றி விரிவானதொரு அலசல்)
ச.சீ.இராஜகோபாலன்
மதுரை திருமாறன் வெளியீட்டகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 78717 80923