Last Updated : 19 May, 2018 08:41 AM

 

Published : 19 May 2018 08:41 AM
Last Updated : 19 May 2018 08:41 AM

இசை கேட்காமல் ஒரு காது இருக்கக் கூடாது!: யுவன் சந்திரசேகர் பேட்டி

ரு உரையில் ‘எல்லாக் கதைகளும் நமது முன்னோடிகளால் எழுதப்பட்டுவிட்டன. வடிவரீதியில் நான் வேறொன்றாக முயன்றுபார்க்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார் யுவன் சந்திரசேகர். முழுக்க முழுக்க இசையை மையமாகக் கொண்டு உலக அளவிலேயே அதிக அளவில் நாவல்கள் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ‘கானல் நதி’, ‘நினைவுதிர்காலம்’ என யுவனின் இரண்டு இசை நாவல்களும் அரூப உணர்வுகளுக்கு வார்த்தைகளால் மேன்மை சேர்க்கின்றன. இந்த நேர்காணலில், இலக்கிய வடிவம் குறித்தும், இசை ரசனை குறித்தும் பேசியிருக்கிறார் யுவன் சந்திரசேகர்.

பயணமும் இசையும் உங்களுக்கு எந்த அளவு முக்கியம்?

நான் வீட்டுக்குள் இருக்கும்போது சுவாதீனமாக நானாக இருக்கிறேன். பயணிக்கும்போது வேறு ஆளாக மாறிவிடுகிறேன். என் வீட்டைவிட்டுத் தள்ளிப் போகப்போக எனக்கே நான் அந்நியமாகி விடுகிறேன். அப்படியான தொலைவு உள்ளே கிடைக்கிறது. நானும், ஜெயமோகனும், வசந்த குமாரும் ஹரித்துவாரில் கும்பமேளா பார்ப்பதற்காகப் போயிருந்தோம். ராத்திரி இரண்டு மணிவரை குடுகுடுப்பைக்காரன்போல, தலையில் உருமால் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேன். என் தெருவில் அதைச் செய்ய மாட்டேன். கங்கைக் கரையில் இருந்த நடைபாதையில் படுத்துத் தூங்கினோம். இப்படி நான் ஒரு அநாமதேயமாக ஆவது எனது எல்லைகளைத் தாண்டும்போது கிடைக் கிறது. அண்டசராசரங்களை யோசிக்கும்போது நாமெல்லாம் நுண்கிருமிகளைவிடச் சிறியவர்கள். ‘நான்தான் முதலில் இதைச் செய்தேன், நான்தான் இரண்டாவதாக இதைச் செய்தேன்’ என எவ்வளவு சொந்தம் கொண்டாடுகிறோம். பயணத்தில் அதெல் லாம் காணாமல் போய்விடுகிறது. ரிஷிகேஷுக்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்றிருந்தேன். அவர் கள் வேறெங்கோ ஷாப்பிங் போயிருந்தார்கள். நான் லக்‌ஷ்மண்ஜூலாவிலிருந்து கங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது லேசாகத் தூறல் போட்டது. அந்தத் தூறலில் கங்கையின் மொத்தப் பரப்பும் சிலிர்த்துக்கொண்டதுபோல ஒரு காட்சி கிடைத்தது. அதில் கரைந்துவிடத் தோன்றியது. மறுபடியும் குடும்பத்துக்குள் போக வேண்டாம், இப்படியே எங்கேயாவது போய்விடலாம் என்றிருந்தது. ஆனால், ஒரு நொடிதான். பிறகு, பிரக்ஞை நம்மைத் திருப்பி இழுத்துக்கொண்டுவந்துவிடும். பிரக்ஞை யின் இந்தக் கட்டளைக்குக் காது கொடுக்காதவன்தான் வேறு ஒன்றாக மாறிவிடுகிறான். இசை என்பது ஒருவர் தனக்குள் மேற்கொள்ளும் பயணம்!

ஒருவேளை, இசையில் நீங்கள் நிபுணத்துவம் பெற விரும்பியிருந்தால் எதைத் தேர்ந்தெடுத் திருப்பீர்கள்?

வயலின் மீது பெரும் மயக்கம் உண்டு. சித்தார், வீணை, கித்தார் போன்று ஸ்வரஸ்தானங்களுக்குக் கட்டம்போட்டுக் காட்டியுள்ள வாத்தியம் கிடையாது வயலின். மாண்டலினில் கட்டம் கட்டமாக இருக்கும்; இங்கு அழுத்தினால் ‘ச’, இங்கு அழுத்தினால் ‘ப’ என. சரியான இடத்தில் சரியாக அழுத்தினால் நாதம் கிடைக்கும். அதேபோல நாதஸ்வரம், புல்லாங்குழல் போன்றவற்றில் இந்தத் துளையில் இந்தச் சப்தம் வரும் என்று இருக்கிறது. வயலினில் அப்படிக் கிடையாது. தந்திகளை ஏந்திய ஒரு நீளத் தடி.. அவ்வளவுதான்! ஒரு கவிதையை வாசிப் பதுபோல உணர்ந்துதான் வாசிக்க வேண்டும். தொடர் பழக்கத்திலும், மன ஓர்மையினாலும்தான் அந்த ஸ்வர நிலைகள் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு பெண்ணோடு பழகுவதுபோல அல்லது ஒரு பெண்ணுக்கு ஆணோடு பழகுவதுபோல, முழுக்கத் தீராத ரகசியத்தோடு இருக்கக் கூடியது. வயலினில் வில்லை அழுத்தி இழுக்கும்போது கிடைப்பது இடைவெளியற்ற, பிளவுபடாத, ஒலி. வீணையில் டொய்ங்! அவ்வளவுதான். ஆனால், வயலின் தரும் சப்தம் ஒரு நதியைப் போல ஓடிக்கொண்டே இருப்பது.

உங்களது தேர்வு ஹிஸ்துஸ்தானியாக இருக்கிறது. கர்நாடக இசையைவிட ஹிஸ்துஸ்தானி சுதந்திரமாகத் திரிவதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்?

அப்படி மட்டையடியாகச் சொல்லிவிட முடியாது. கர்னாடக சங்கீதத்தில் மதுரை மணி, எம்.டி.ராம நாதன், டி.கே.பட்டம்மாள், சஞ்சய் சுப்பிரமணியன் என்று கேட்கும்போது எனக்கு அதே இன்பம் கிடைக்கிறது. ஹிஸ்துஸ்தானியில் இன்பத்தின் அளவு கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கிறது. தாளம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே அடம் பிடித்து கர்னாடக சங்கீதம் நீர்த்துப்போவதாகத் தோன்றுகிறது. குரலிசையைப் பொறுத்தமட்டில் இங்கே வீச்சு மிகவும் குறைவாக இருக்கிறது. இது முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட அனுபவம். தனக்குத் தெரிந்த ஒருவர் ஸ்பீக்கருக்காக மட்டும் 5 லட்ச ரூபாய் செலவழித்து அதில் சினிமாப் பாட்டு கேட்பதாக ஒரு நண்பர் அலுத்துக்கொண்டார். ஏன் கேட்கக் கூடாது? அவ ருக்கு ஆறுதலாக இருக்கக்கூடிய ஒரு சப்த சுகம் அது. கேட்கட்டுமே! ஹிந்துஸ்தானி உசத்தி என்பதல்ல. அது எனது தனிப்பட்ட விருப்பம்.. அவ்வளவுதான்! ஆனால், எல்லோருமே ஏதாவது ஒருவகை இசையைக் கேட்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இசை கேட்காமல் ஒரு காது இருக்கக் கூடாது!

யதார்த்தக் கதைக்கு மாற்று முயற்சியாக அல்லது அதைக் காப்பாற்றுவதற்கான ஒரு ஆயுதமாக வடிவத்தைக் கையாளும் போக்கு இருக்கிறது. வடிவத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் மிஞ்சுவது என்னவோ ஒரு யதார்த்தக் கதைதான். படைப்புகளில் வடிவம் எவ்விதமாகச் செயல்பட வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

படைப்பிலக்கியத்தைப் பொறுத்தவரை வடிவம், உள்ளடக்கம் என்று இரண்டெல்லாம் கிடையாது என்பது ஆரம்பம்தொட்டே எனது நம்பிக்கையாக இருந்துவருகிறது. அப்படி இரண்டும் வேறுவேறு எனத் தெரியாதவாறு ஒன்றுக்கொன்று பிணைந்திருப்பதுதான் என்னை மயக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.

ஒரு நடனமணி, ஆடுகிறார் என்பது தெரிந்துவிட்டாலே நடனத்தின் லட்சணம் காணாமல் போய்விடும். ‘எவ்வளவு பிரமாதமாய் லகுவாய் உச்சஸ்தாயிக்குப் போகிறார்’ என எனக்குப் பட்டுவிட்டால், அது எனக்கு உசத்தியான சங்கீதம் கிடையாது. இது மாதிரியான சமாச்சாரங் களெல்லாம் மறந்து உள்ளுக்குள் சென்று தோய வேண்டும். அதுதான் நல்ல சங்கீதம். இதுவேதான் எழுத்துக்கும்.

ஆரம்பம் தொட்டு இப்போது வரையிலும் வடிவரீதியிலான வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள். இவ்வளவு வருடங்களில் இத்தனை விதமான வடிவங்கள் முயன்றிருப்பதை இப்போது திரும்பிப்பார்க்கையில் என்ன தோன்றுகிறது?

பலசரக்குக் கடையில் முதலில் பொட்டலம் மடிப்பது சிரமமாக இருக்கும், பிறகு புளிக்கு என்ன காகிதம், முந்திரிப்பருப்புக்கு என்ன காகிதம் எனத் தானாகக் கை சென்றுவிடும். அது மாதிரியான விஷயம்தான் இது. மொழி, வடிவம் மற்றும் உருவம் சம்பந்தமான லாகவம் உள்ளூரப் படிந்த பிற்பாடு, எழுதுவதென்பது வேறாக இருக்கிறது!

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x