

எண்பதுகளில் கணிசமான ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வுக்கான வாயிலாக இருந்தது பெர்லின் நகரம். எப்படி? காரணம் வரலாற்றில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெற்றி பெற்ற நேச நாடுகள் தோல்வியடைந்த நாடுகளைத் தங்கள் செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன.
ஜெர்மனி நான்கு துண்டுகளானது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் ஆகிய நான்கு வெற்றியாளர்களுக்குத் தலா ஒரு கோப்பை கிடைத்தது. இதுதான் போஸ்ட்டாம் உடன்படிக்கை (1945).
இதில் முதல் மூன்று நாடுகளின் பகுதிகள் இணைந்து மேற்கு ஜெர்மனியாகவும், சோவியத் ஒன்றியத்தின் பகுதி கிழக்கு ஜெர்மனியாகவும் மாறின. முன்னதில் முதலாளித்துவமும் பின்னதில் சோஷலிசமும் அரசுக் கொள்கைகளாகின. எனில், இரண்டு பகுதிகளுக்கும் தலைநகர் ஒன்றுதான் - பெர்லின்.
அது கிழக்கு ஜெர்மனியில் இருந்தது. தலைநகருக்குள் இரண்டு ஜெர்மனிகளின் ஆளுகைப் பிரதேசங்களும் இருந்தன. இதுதான் இலங்கையிலிருந்தும் அடக்குமுறைக்கு உள்ளான இன்ன பிற நாடுகளிலிருந்தும் தஞ்சம் நாடி வந்த அகதிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. இந்த வரலாற்றைத்தான் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ விரித்துரைக்கிறது.
ஈழத் தமிழர்களின் துயரமும் அதைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரும் நவீன இலக்கியத்தில் பதிவாகிவருகின்றன. அந்த அளவிற்குப் புலம்பெயர்வின் அலைந்துழல்வு பதிவாகவில்லை. தமிழர்களின் வலி மிகுந்த பயணம் இலக்கிய வெளிச்சம் பெறுவது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும்.
இந்தக் கதையை எழுதுவதற்கு ஆசி.கந்தராஜா பலவிதத்திலும் தகுதியானவர். எழுபதுகளின் பிற்பகுதியில், கிழக்கு ஜெர்மனி வழங்கிய புலமைப் பரிசிலைப் பெற்று, அங்கு பட்டப்படிப்பை முடித்தவர். எண்பதுகளின் முற்பகுதியில் மேற்கு ஜெர்மனியின் நல்கையைப் பெற்று அங்கு முனைவரானவர்.
வேளாண் பேராசிரியர். இவரது இன்னொரு முக்கியமான நூல் ‘மண் அளக்கும் சொல்’ (காலச்சுவடு, 2022). அந்த நூலில் இடம்பெறுபவை வேளாண் கட்டுரைகள். ‘அகதியின் பேர்ளின் வாசல்’ பல வரலாற்றுச் சிடுக்குகள் கட்டவிழும் புனைவு நூல். அபுனைவுச் செய்திகளும் கலந்திருக்கின்றன.
இந்த நாவல் இரண்டு இளைஞர்களின் கதையாக விரிகிறது. முகவர்களிடம் பணம் கட்டி, தவராசாவை அவனது அப்பா ஜெர்மனிக்கு அனுப்புகிறார். அந்நாளில் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய புலமைப் பரிசில் பெற்று, ஜெர்மனிக்குப் படிக்க வருகிறான் பாலமுருகன். இருவரின் அனுபவமும் வேறு வேறானவை. தவராசாவிற்கு எளிதில் விசா கிடைக்கவில்லை. காத்திருப்பு நீள்கிறது.
மத்தியக் கிழக்கு நாடுகளுக்குத் தொழிலாளர்களை அனுப்பும் முகவர்கள் மும்பையிலிருந்துதான் இயங்கினார்கள். மும்பையிலிருந்து விமானக் கட்டணங்களும் குறைவாக இருந்தன. ஆகவே, ஈழ அகதிகள் இடைத்தங்கும் இடமாக மும்பை பயன்படுத்தப்பட்டது. இவர்களில் சிலர் போதைப் பொருள் கடத்தலுக்கும் பாலியல் அத்துமீறலுக்கும் இரையானார்கள். இவ்விரு குற்றச்செயல்களுக்கும் தவராசவே ஒரு சாட்சியமாகிறான்.
பாலமுருகன் கிழக்கு ஜெர்மனியில் துறை சார்ந்த கல்வியோடு கம்யூனிசத்தையும் பாடமாகப் படிக்கிறான். கிழக்கில் எல்லோருக்கும் அவரவர் ஆற்றலுக்கேற்ற வேலை கிடைக்கிறது. ஆனால், அத்தியாவசியத் தேவைகளுக்கான ஊதியமே வழங்கப்படுகிறது. மேற்கில் ஆடம்பரமும் உல்லாசமும் தளும்புகிறது. கிழக்கின் பணத்தை நாட்டின் எல்லையைக் கடந்தால் மாற்ற முடியாது. மேற்கின் பணத்திற்கு உலகெங்கும் மதிப்பு இருந்தது. இரண்டு ஆட்சி முறைகளுக்கும் பாலமுருகனே சாட்சியாகிறான்.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 1989இல் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான பெருஞ்சுவர் தகர்க்கப்படுகிறது. கிழக்கிலிருந்து சாரை சாரையாக மக்கள் மேற்கு நோக்கிப் போகிறார்கள். இது பின்கதையில் வருகிறது. அதன் பிறகு அகதிகளின் பெர்லின் வாசலும் அடைபட்டுப் போகிறது. அது என்ன பெர்லின் வாசல்?
மேற்கு ஜெர்மனியின் ஆறாம் இலக்க மெட்ரோ ரயில் பெர்லின் நகரின் ஊடாக ஓடியது. அது கிழக்கு ஜெர்மனியில் ஒரேயொரு நிலையத்தில் நிற்கும். அந்த ரயிலில் ஏறுவதற்கு கிழக்கு ஜெர்மானியர்களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்டவருக்குத் தடையில்லை. கிழக்கு ஜெர்மனியில் வந்திறங்கும் அகதிகள் இந்த நிலையத்தில் ஏறினார்கள். இது கிழக்கின் ஆசிர்வாதத்துடன் நடந்தது.
அவர்கள் மேற்கு பெர்லின் வந்ததும் மேற்கு ஜெர்மனியில் வசிப்பதற்கான அகதி அந்தஸ்து கோருவார்கள். விசாரணை பல மாதங்கள் நீளும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட பலரால் பிரான்ஸ், நார்வே, டென்மார்க் முதலான ஐரோப்பிய நாடுகளுக்கும், பிரிட்டன், கனடா முதலான ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கும் போக முடிந்தது. அந்நாளில் விசா கெடுபிடி குறைவாக இருந்தாலும், இந்தப் பயணங்களோ துயராலும் குளிராலும் நிச்சயமின்மையாலும் நிரம்பியிருந்தன. அகதிகள் ஆக முடியாமல் போனவர்களின் கதை தனி.
மேற்குலகை அடைய ஈழத் தமிழர் பலருக்கு எண்பதுகளில் பயன்பட்ட இந்த வாசலைச் சுவாரசியமான நாவலாக்கியிருக்கிறார் கந்தராஜா. அதன் வழியாக ஒரு காலக்கட்டத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்.
அகதியின் பேர்ளின் வாசல்
ஆசி.கந்தராஜா
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.200
தொலைபேசி: 04652 278525
- mu.ramanathan@gmail.com