

கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதிய இருபத்து மூன்று குறுங்கதைகளின் தொகுப்பு ‘ஒற்றைக் குரல்’ எனும் தலைப்பில் நுண்கதைகள் எனும் வகைமையில் வெளிவந்துள்ளது. இக்கதைகள் பலவித உத்திகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இதனால் வாசகன் அடையக் கூடிய வாசிப்பின்பம் அலாதியானது.
‘சார்லஸ் பிந்துவுக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்கள்’. ‘பிந்து சார்லஸ்க்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்கள்’ - இவை இரு குறுங்கதைகளுக்கான தலைப்புகள். இரண்டும் ஒன்றையொன்று இட்டு நிரப்பக்கூடிய வரிகளாலும், கதைகளாலும் எழுதப்பட்டிருக்கும். சொல்லப்போனால், இதை ஒரே கதையாகவே எழுதியிருக்கலாம்.
ஆனால், அப்படிச் செய்யப்பட்டிருந்தால் சொல்லாமல் விடுபட்ட கதைகளின் நீட்சியும், அதன் மூலமாக உருவாகும் அனுபவமும் கிடைத்திருக்காது. இன்னொரு கதை ‘Maison de Miror’, இந்த ஃபிரெஞ்சு வார்த்தைக்குக் கண்ணாடி வீடு என்பது பொருள். கண்ணாடி வீடு ஒன்றினுள் நுழைந்த ஒருவனின் பிரதி, குழைந்து நீர்மை ததும்பும் அவ்வீடு முழுக்க நிறைந்திருக்கும்.
‘சாம்பல் சுவர்’ என்றொரு கதையில், நீண்டு உயர்ந்த இரண்டு சுவர்களுக்கு இடையிலிருந்து தப்பிக்க ஒருவன் சதா ஓடிக்கொண்டே இருக்கிறான்; விழுகிறான்; பிதற்றுகிறான்; சோர்வுறுகிறான். இறுதியாக, சுவர்களில் முடிவிலியாய் நீண்டு செல்லும் கதையில் தத்தளிக்கிறான். அது என்ன கதை? யாரின் கதை? ஒரே கதையா? பலரின் கதையா என்கிற கேள்விகள் எழுகின்றன.
கவிதைகளை நெருங்கும் சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. ‘நீலப்பூ’வில் கடலில், வானில், வெளியில், அறையில் நெளியும் நீலம் மலராகிறது; மீனாகிறது; பூமியாகிறது. ‘கீதாரி’-யில் சூரியப் பழத்தை உண்ணக் கன்றுக்குட்டி ஓடுகிறது. சொற்களின் கூட்டால், அவை செருகப்பட்ட விதத்தால் இக்கதைகள் கவிதை வாசிப்பின் தளத்தை நெருங்குகின்றன. மரபும் வரலாறும் இக்கதைகளில் இயல்பாகவே இயைந்து வேறொரு தளத்தில் பரிணமிக்க வைக்கின்றன.
ஏற்கெனவே அறிந்த கதைகளாக, மாந்தர்களாக இருந்தாலும், இக்கதைகளில் வெளிப்படும் தருணங்கள் உப கதைகளாகி அணுகி, பிறிதொரு அனுபவமாக்கிக் கொள்ளும் சாத்தியத்தை அளிக்கின்றன. வரலாற்றையும் புனைவையும், கனவின் சாயையாகவும், நிகழின் மாயையாகவும் இருவேறாய் ஆக்குகின்றன. - வைரவன் லெ.ரா
ஒற்றைக் குரல்
இளங்கோ கிருஷ்ணன்
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 9042461472
தி.ஜானகிராமனை வாசித்தல்: எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. ‘மோகமுள்’ நாவல் குறித்து எழுத்தாளர் சு.வேணுகோபால் எழுதியுள்ளார். ஒரு நாவலுக்குரிய அனைத்துத் தன்மைகளும் ஒன்றுகூடியிருக்கும் ‘உயிரோட்டமுள்ள காடா’க இந்நாவலை அவர் மதிப்பிடுகிறார். அழகான வாழ்விற்குள் பொதிந்திருக்கும் நாற்றத்தையும் கலை நுட்பத்தோடு சொன்ன துணிச்சல் மிக்கவர் தி.ஜா. என்றும் மதிப்பீடு செய்கிறார்.
‘அம்மா வந்தாள்’ நாவல் குறித்து எழுதியுள்ள கல்யாணராமன், தி.ஜா.வின் ஒட்டுமொத்த இலக்கியச் செயல்பாட்டையும் இந்நாவலைக் கொண்டே மதிப்பிடுகிறார். தி.ஜா.வின் எழுத்து, பெண்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது; அதற்கான பிரதிநிதியாக இந்நாவலின் அலங்காரத்தம்மாளைக் கருதலாம்.
அதேபோன்று, மரபு சார்ந்த விழுமியங்களுக்கும் அதற்கு எதிரான போக்குகளுக்கும் இடையில் இச்சமூகத்தில் சமநிலைத் தன்மையை உருவாக்கத் தம் எழுத்தின் வழியாகத் தி.ஜா. தொடர்ந்து போராடினார் என்றும் கல்யாணராமன் கூறுகிறார்.
மரபை மீறுதலே தி.ஜானகிராமன் புனைவுலகின் யதார்த்தம் என்று ‘மரப்பசு’ நாவல் குறித்த கட்டுரையில் முன்வைக்கிறார் சுப்பிரமணி இரமேஷ். ‘உயிர்த்தேன்’ நாவல் குறித்து எழுதியுள்ள ஜா.ராஜகோபாலன், ‘தி.ஜா. ஆழ, அமிழ முயலும் நடையிலிருந்து சற்று மாறி மேலெழும்பித் தாவ நினைத்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் ‘உயிர்த்தேன்’ என்கிறார். மனிதர்களின் ஒப்பீட்டு மனநிலையே பல தவறுகளுக்குக் காரணம்.
இருப்பதை வைத்து நிறைவடையா மனித மனமானது எல்லா எல்லைகளையும் மீறிவிடுகிறது. இவ்வாறான மனித மனம் சார்ந்த உளவியலைப் பேசுவதாக ‘அடி’ நாவலைக் கூறுகிறார் பா.அமுல் சோபியா. ‘மலர் மஞ்சம்’ நாவலை மிக நுண்ணுணர்வுடன் ஆராய்ந்து அணுகியுள்ளார் சிவக்குமார் முத்தையா.
‘செம்பருத்தி’ நாவல் குறித்து எழுதியுள்ள கே.வி.ஜெயஸ்ரீ, ‘தி.ஜா. காட்சிப்படுத்தும் பெண்கள் அதியற்புதப் பிறவிகள். இதற்கு உதாரணம், இந்நாவலின் குஞ்ஞம்மா கதாபாத்திரமே’ என்கிறார். தி.ஜா.வினுடைய நாவல்களின் பல்வேறு சாத்தியங்களைப் புரிந்துகொள்ள உதவும் அதேநேரத்தில், அவரது எழுத்தை வாசிக்காதவர்களையும் அதை நோக்கி இந்த நூல் நகர்த்தும். - ம.சோனியா
உயிர்க்காடு
தொகுப்பாசிரியர்: கு.பத்மநாபன்
எழுத்து பிரசுரம்
விலை: ரூ.230
தொடர்புக்கு: 89250 61999
களவுபோகும் கனிம வளம்: விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வியல் பாடுகளைப் பற்றி ‘தறியுடன்...’ எனும் நாவலை எழுதிப் பரவலாகப் பேசப்பட்ட எழுத்தாளர் இரா.பாரதிநாதனின் மற்றொரு நாவல்தான் ‘மக்கள் யுத்தம்.’ ஒரு நாட்டின் செல்வமாக விளங்கும் கனிம வளத்தை, அரசியல் அதிகார பலத்தோடும், செல்வ பலத்தோடும் சூறையாடி வருபவர்களைப் பற்றிச் சமூக அக்கறையுடன் பேசுகிறது இந்நாவல்.
இன்றைக்குத் தமிழகம் முழுவதிலும் பரவலாக நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு – காஞ்சிபுரம் பாலாற்றுப் படுகையில் நடைபெறும் கனிமவளச் சுரண்டலை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறது இந்த நாவல். சமூக விரோதச் சக்திகள் கல்குவாரிகளைச் சூறையாடுவதோடு, நம் பாரம்பரியத் தொல்லியல் இடங்களை அழிக்கிற செயலையும் செய்துவருகின்றன.
கனிம வளக் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட வேண்டியதன் அவசியத்தை, நக்சல்பாரி ஒருவரின் வாழ்க்கைப் பின்புலத்தோடு இணைத்து எழுதியிருக்கிறார் பாரதிநாதன். ‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ?’ என்னும் பாரதியின் கோபமான கவிதை வரிகள், இந்நாவலின் வழியே மீண்டும் உயிர்த்தெழுகின்றன. - மு.முருகேஷ்
மக்கள் யுத்தம்
இரா.பாரதிநாதன்
புரட்சி பாரதி பதிப்பகம்
விலை: ரூ.420
தொடர்புக்கு: 9043050699